உலகின் நீண்ட தொலைவு விமானத்தை இயக்கிய சாதனை விமானி: ஜோயா அகர்வாலின் வெற்றிக் கதை!
ஏர் இந்தியா விமானியான, ஜோயா அகர்வால், உலகின் நீண்ட தொலைவு விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார்.
ஏர் இந்தியா விமானியான ஜோயா அகர்வால் மற்றும் அவரது அனைத்து பெண்கள் குழுவினர், அண்மையில், 34,000 அடி உயரத்தில் வட துருவத்தை கடக்கும் வகையில் உலகின் மிக தொலைவிலான விமான சேவையை இயக்கி வரலாறு படைத்தனர். 250 பயணிகள் பயணம் செய்த இந்த விமானத்தை நான்கு பெண் விமானிகளும் திறம்பட இயக்கினர்.
ஜோயா அறிந்திருந்த ஒவ்வொருவரும் , சான்பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்டு, பெங்களூருவை அடையும் வரை இந்த விமானத்தை டிராக் செய்து கொண்டிருந்தனர். பெங்களூருவில் இக்குழுவினர், காமிராக்களுடன் காத்திருந்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரால் வரவேற்கப்பட்டனர்.
“இந்த பரபரப்பு இன்னமும் அடங்கிவிடவில்லை. பெருந்தொற்று சூழலில் இந்த கொண்டாட்ட மனநிலை எவ்வளவு நேரம் நீடிக்குமோ அவ்வளவு நீடிப்பது நல்லது,” என்று ஹெர்ஸ்டோரியிடம் தொலைபேசியில் பேசும் போது ஜோயா கூறினார்.
உலகின் நீண்ட தொலைவு விமானத்தை இயக்குவதற்கு பெரிய அளவில் தயாரிப்பு தேவைப்பட்டது. தேவையான கருவிகள், துருவ பிரதேச ஆடைகள், குழுவுக்கு பயிற்சி, வானிலை பொருத்தம் என பல்வேறு விஷயங்கள் தேவைப்பட்டன.
இதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் கடினமான பயிற்சி தேவைப்பட்டாலும், வானில் பறக்க வேண்டும் எனும் ஜோயாவின் கனவு எட்டு வயதிலேயே துவங்கிவிட்டது.
பறக்கும் கனவு
ஜோயாவுக்கு வானில் நட்சத்திரங்களைப் பார்ப்பது பிடிக்கும். பெரும்பாலும் தனது வீட்டு மாடியில் நேரத்தை செலவிடுவார். சிறுவயதில் அவர் பொம்மை அல்லது டிபியை விரும்பவில்லை, மாறாக டெலஸ்கோப் வேண்டும் என விரும்பினார். தொலைபேசி கிடைத்த பிறகு சுற்றுப்புறத்தில் இருந்த மற்ற குழந்தைகள் போல அவர் இருக்கவில்லை.
“வானத்தை நோக்கியபடி, நட்சத்திரங்களை, பெரிய விமானங்கள் பறப்பதை பார்த்துக்கொண்டிருப்பேன். இந்த பறக்கும் விமானங்களை பார்த்து ரசித்தபடி, அவற்றில் ஒன்றில் என்னால் பறக்க முடியுமா என யோசிப்பேன்,” என்கிறார் ஜோயா.
நடுத்தர குடும்பத்தின் ஒரே குழந்தை என்ற நிலையில், ஜோயா விமானியாக வேண்டும் எனும் விருப்பத்தை தெரிவித்த போது, அவரது அம்மா அழத்துவங்கிவிட்டார்.
“நான் திருமணம் செய்து கொண்டு, குழந்தைகள் பெற்றுக்கொண்டு, குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என அம்மா விரும்பினார். ஆனால் நான் அத்தகைய சராசரி பெண்ணாக இருக்கவில்லை. அல்லது சமூகம் சொல்வதால் நான் செய்ய விரும்புவதை நிறுத்திக்கொள்ளும் பெண்ணாக இருக்க விரும்பவில்லை,” என்கிறார்.
பள்ளி முடித்ததும், ஜோயா இரண்டு முழு மூன்றாண்டு படிப்பில் ஈடுபட்டார். காலையில் ஸ்டீபன் கல்லூரியில் படித்தவர், அதன் பிறகு இரவு வரை விமான வகுப்புகளில் பயின்றார்.
“சில நேரங்களில் மின்சாரம் இருக்காது. இரவு வரை தெருவிளக்கில் என் பாடங்களை முடிப்பேன்,” என்கிறார் ஜோயா.
அவரது கடின உழைப்பைப் பார்த்த பெற்றோர், அவரது கல்விக்கு உதவிவதற்காக கடனும் வாங்கினர்.
2004ல் விமானிகளுக்கு அதிக வாய்ப்பு இருக்கவில்லை. ஏர் இந்தியா மட்டுமே சர்வதேச மார்கங்களில் விமானங்களை இயக்கிக் கொண்டிருந்தது. நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்ற ஜோயா, ஏர் இந்தியாவில் இருந்த 10 விமானிகள் காலியிடங்களில் ஒன்றுக்கு தேர்வானார்.
ஜோயா தனது கனவில் உறுதியாக இருந்ததால் ஏவியேஷன் துறையில் பாலின சமத்துவ மைல்கற்கள தொடர்ந்து உருவாக்கப்பட்டன. 2013ல் அவர் போயிங் 777 விமானத்தை இயக்கிய முதல் பெண் பயணியானார்.
கொரோனா சூழலுக்கு மத்தியில் வெளிநாட்டில் சிக்கித்தவித்த 14,000 இந்தியர்களை நாட்டுக்கு அழைத்து வந்த ‘வந்தே பாரத்’ திட்டத்தையும் அவர் முன்னின்று நடத்தினார்,
பெண்கள் முன்னிலை
பெண்கள் அதிகாரம் பெறுவதில் ஜோயா மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். உலகம் முழுவதும் பெண்கள் சமமாக நடத்தப்படுவதில்லை. வெளியே சொல்ல முடியாத காரணங்களினால், சம்பளம் முதல் பதவிகள் வரை பெண்களுக்கு எதிராக பாகுபாடு நிலவுகிறது என்கிறார்.
எனினும் ஏர் இந்தியாவில் துவங்கியது அவருக்கு சமமான வாய்ப்புகளை அளித்தது.
“ஊழியர்களுக்கு சம வாய்ப்பு இருந்தது. உலகில் வேறு எங்கு, நான் டிரிபில் செவன் காமேண்டராக மற்றும் உலகின் நீண்ட தொலைவு வர்த்தக விமானத்தை இயக்கி வரலாறு படைக்கும் வாய்ப்பு கிடைக்கும்,” என்று கூறுகிறார் ஜோயா.
விமானி நாற்காலிக்கு பாலினம் கிடையாது என்கிறார். துவக்க முதல் நீங்கள் விமானியாக தான் பயிற்சி அளிக்கப்படுகிறீர்களே தவிர, பெண் விமானியாக அல்ல என்கிறார்.
ஒவ்வொரு சாதனைக்காகவும் தனது பெற்றோர்கள் மற்றும் கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக ஜோயா கூறுகிறார்.
ஆங்கிலத்தில்: டென்சின் நோர்மாம் | தமிழில்: சைபர் சிம்மன்