47 வயதில் தொழில் முனைவர் ஆகி தலைமுடி உதிர்வு பிரச்சனைக்குத் தீர்வு அளிக்கும் நீலிமா தாகுர்!
காரைக்காலைச் சேர்ந்த நீலிமா தாகூர் `ஷைன் ஹெர்பல்ஸ்’ பிராண்ட் மூலம் கூந்தல் பராமரிப்பிற்கான எண்ணெய் வகைகளையும் சரும பராமரிப்புப் பொருட்களை விற்பனை செய்கிறார்.
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம் இருக்கிறதா என்கிற சந்தேகம் சங்ககாலத்திலேயே எழுந்துள்ளது. கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம் இருக்கிறதோ இல்லையோ தோற்றத்தை அழகாக்குவதில் கூந்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு முகத்தின் அழகை கூந்தல் மெருகேற்றும் என்பதும் உண்மையே!
கூந்தல் அலங்காரத்தில் ஒரு சிறு மாற்றம் செய்தாலும் நம் ஒட்டுமொத்த தோற்றமே மாறிவிடுவதை நாம் கவனித்திருப்போம். ஆனால் இன்றைய பரபரப்பான, இயந்திரத்தனமான வாழ்க்கைமுறையால் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. அத்துடன் கூந்தல் பராமரிப்பிற்கும் பெரும்பாலானோர் முக்கியத்துவம் அளிப்பதில்லை. இதன் விளைவு முடி உதிர்வு, பொடுகு, வழுக்கை, இளநரை என ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்குமே இந்தப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உதாரணத்திற்கு ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை பிரச்சனைகளுக்கு ஹேர் ட்ரான்ஸ்பிளான்டேஷன் போன்று செயற்கை முறையில் பல மருத்துவச் சிகிச்சைகள் இருந்தாலும் அவற்றிற்கே உரிய பக்க விளைவுகளைத் தவிர்க்கமுடிவதில்லை.
இந்தச் சூழலில் தலைமுடி தொடர்பான பிரச்சனைகளுக்கு இயற்கையான முறையில் முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்கிறார் நீலிமா தாகூர். இவர் ‘ஷைன் ஹெர்பல்ஸ்’ (Shine Herbals) என்கிற பிராண்ட் மூலம் பல வகையான எண்ணெய் மற்றும் சருமப் பராமரிப்புப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழில்முனைவர்.
நீலிமா – ஓர் அறிமுகம்
நீலிமா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். தமிழ் குடும்பத்தில் இவருக்கு திருமணம் முடிந்தது. தென்னிந்தியாவில் 27 வருடங்களாக வசித்து வருகிறார். தற்போது 55 வயதாகும் இவர், காரைக்காலில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள்.
ஆங்கில மொழியில் தகவல் தொடர்பு திறன் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சியாளராக உள்ளார். இவருக்கு 47 வயதிருக்கையில் மெனோபாஸ் காரணமாக கடும் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதைப் புரிந்துகொண்ட நீலிமா, அந்தக் காலகட்டத்தை சிறப்பாக எதிர்கொள்ள மனதை வேறொன்றில் திசை திருப்ப திட்டமிட்டார்.
வீட்டில் கம்ப்யூட்டர் இருந்ததால், எப்போதும் இணையத்தில் ப்ரௌஸ் செய்வதில் நேரம் செலவிட்டுள்ளார். மூலிகைகள், எண்ணெய் போன்றவற்றின் இயற்கையான பண்புகளில் இவருக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. இதுகுறித்து அதிகம் ஆய்வு செய்துள்ளார்.
“என் பெரிய மகன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும் தனிமையில் இருந்தேன். மன அழுத்தத்திற்கு ஆளானேன். இதிலிருந்து எப்பாடுபட்டாவது மீளவேண்டும் என தீர்மானித்தேன். மூலிகைகள் மற்றும் எண்ணெய் மீது எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்து வந்தது. வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் முடி தொடர்பான ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது. இதற்கு தீர்வளிக்கும் வகையில் இயற்கை எண்ணெய் கலவையைத் தயாரித்தேன். முதலில் நான் பயன்படுத்திப் பார்த்தேன். நல்ல பலன் கிடைத்தது. எனது மாணவர்கள் சிலருக்கும் கொடுத்தேன். 2 , 3 மாதங்களில் நல்ல மாற்றத்தைப் பார்க்கமுடிந்தது. முடி அடர்த்தியாக வளர்ந்தது,” என்று தன் தொடக்கத்தை பகிர்ந்தார் நீலிமா.
பலனடைந்த வாடிக்கையாளர்கள்
முதலில் நீலிமாவின் மாணவர்கள் எண்ணெயை பயன்படுத்தி நல்ல பலன் கிடைத்ததாகத் தெரிவித்தனர். இந்தத் தகவலை ஃபேஸ்புக்கில் பெண்கள் குழு ஒன்றிற்கு அவர் ஃபார்வர்ட் செய்துள்ளார்.
அதில் ஒருவர் இந்த எண்ணெயை விற்பனை செய்யலாமே என்று ஆலோசனை கூறியுள்ளார். அவரே ஒரு லிட்டர் எண்ணெய் வாங்கி பயன்படுத்தியும் இருக்கிறார். அவர் பலனடைந்ததை அடுத்து அவரது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிந்துரை செய்துள்ளார். மெல்ல வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்தது.
“ஷைன் ஹேர் ஆயிலுக்காக பிரத்யேக பக்கத்தைத் தொடங்கினேன். பல புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள். குடும்ப உறுப்பினர்கள் போன்றே இவர்கள் தொடர்ந்து என் வணிகம் வளர்ச்சியடைய ஆதரவளித்து வருகிறார்கள்,” என்றார்.
இப்படி ஒரு லிட்டர் எண்ணெயை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்த்ததில் தொடங்கிய இவரது வணிக பயணம் பலனடைந்த வாடிக்கையாளர்களின் பரிந்துரை மூலமாகவே உலகளவில் 6,500 வாடிக்கையாளர்கள் என்கிற அளவில் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்துள்ளது.
முதலீடு மற்றும் வருவாய்
மற்றவர்களின் நிதியுதவி ஏதும் பெறாமல் சொந்தமாகக் கிட்டத்தட்ட 3 லட்ச ரூபாய் முதலீட்டுடன் இந்த வணிகத்தை நடத்தி வருகிறார். ஃபேஸ்புக் மூலமாகவே விற்பனை நடந்து வருவதால் அதிகம் முதலீடு இல்லை என்கிறார் நீலிமா.
ஒரு மாதத்திற்கு 80,000 ரூபாய் முதல் 90,000 ரூபாய் வரை இவரது தயாரிப்புகள் விற்பனையாகிறது. 20,000-25,000 ரூபாய் வரை மாத வருமானம் ஈட்டி வருகிறார்.
“எனக்குக் கிடைத்த லாபத்தைக் கொண்டு ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினேன். இது என்னை வளர்ச்சி நோக்கி மேலும் பயணிக்க ஊக்கமளித்தது,” என்கிறார்.
தயாரிப்புகள்
தலைமுடிக்கு உகந்த மூலிகைகளை ஒவ்வொன்றாகத் தயாரிப்பில் சேர்த்து படிப்படியாக தரத்தை மேம்படுத்தியுள்ளார். ஃபேஸ்புக் குழு மூலமாகவும் ரெகுலர் வாடிக்கையாளர்களின் பரிந்துரை மூலமாகவும் இவரது தயாரிப்பு பலரைச் சென்றடைந்தது. மக்களின் வெவ்வேறு பிரச்சனைகளுக்கு இவரது எண்ணெய் தீர்வளிக்கிறது.
ரீகுரோத் ஆயில், டெய்லி கேர், மசாஜ் ஆயில் போன்ற பல்வேறு எண்ணெய் வகைகளை ஷைன் ஹெர்பல்ஸ் வழங்குகிறது. கருவேப்பிலை, மருதானி, செம்பருத்தி, கீழாநெல்லி, ஆலோவெரா போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கிறார்.
ஹார்மோன் சமநிலையின்மை, சொரியாசிஸ், தலை வழுக்கை, மெலிதான தலைமுடி, பரம்பரை சொட்டை, கீமோதெரபி சிகிச்சை பெற்றுக்கொண்டவர்கள், பிரசவத்திற்கு பிறகு முடி உதிர்வு ஏற்படுவது போன்ற ஏராளமான முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இயற்கையான முறையில் பலன் கிடைக்கும் வகையில் தீர்வளிக்கிறார் நீலிமா.
ஃபேஸ் பேக், ஹெர்பல் ஷாம்பூ, ஹேர் பேக், ஹேர் வாஷ் பவுடர், ஸ்கின் சீரம் போன்ற தனிநபர் பராமரிப்புப் பொருட்களையும் ஷைன் ஹெர்பல்ஸ் வழங்குகிறது.
ஷைன் ஹெர்பல்ஸ் பிராண்டின் Hair Tonic என்கிற தயாரிப்பு பிரத்யேகமாக குழந்தைகளுக்கானது. குழந்தைகளின் மிருதுவான சருமத்தைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு இயற்கையாகவும் பாதுகாப்பாகவும் இந்த எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
100 கிராம் அளவு கொண்ட ஹேர் பேக், ஃபேஸ் பேக், பாடி ஸ்கிரப் போன்றவை 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 மி.லி ஸ்கின் சீரம் 350 ரூபாய் என்கிற விலையிலும் 200 மி.லி அளவு கொண்ட ஹெர்பல் ஷாம்பூ 550 ரூபாய் என்கிற விலையிலும் விற்பனையாகிறது.
சவால்கள்
ஆரம்பத்தில் பாட்டில்கள், பேக்கேஜிங் பாக்ஸ் போன்றவை கிடைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. எண்ணெய் டெலிவர் செய்ய கிட்டத்தட்ட அனைத்து கூரியர் நிறுவனங்களும் மறுத்துவிட்டன. கூரியர் நிறுவன ஏஜெண்ட் ஒருவர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவர் செய்துள்ளார் நீலிமா. ஆனால் ஏஜெண்ட் ஒருவர் கிட்டத்தட்ட மூன்று லிட்டர் எண்ணெயை எடுத்துக்கொண்டு விற்றுவிட்டார்.
நம்பகமான கூரியர் சேவை அளிக்கும் நிறுவனம் கிடைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. இறுதியாக நம்பகமான ஒரு ஏஜெண்ட் கிடைத்துள்ளார். இவர் ஷைன் ஹெர்பல்ஸ் தயாரிப்புகள் முறையாக டெலிவர் செய்யப்பட உதவுகிறார்.
இதுதவிர சிலர் நீலிமாவிடம் எண்ணெய் வாங்கி அத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து வேறொரு பிராண்ட் பெயரில் விற்பனை செய்துள்ளனர். ஃபேஸ்புக் குழுக்களில் இவர் பதிவிடும்போது சிலர் தவறான முறையில் தலையிட்டு வாடிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து திசைதிருப்பி விடுகின்றனர். இதுபோன்ற இடையூறுகளையும் நீலிமா எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
கொரோனா சமயத்தில் 2 மாதங்கள் எந்த ஒரு டெலிவரியும் செய்யமுடியாமல் போனது. தளர்வுகள் அறிவிக்கப் பின்னர் படிப்படியாக வணிகம் இயல்பு நிலையை எட்டியுள்ளது.
வருங்காலத் திட்டம்
முதல்கட்டமாக விநியோகஸ்தர்கள் மூலம் வணிகத்தை விரிவடையச் செய்ய திட்டமிட்டுள்ளார். தற்போது 6,500-க்கும் அதிகமான திருப்திகரமான வாடிக்கையாளர்கள் இருப்பதால் விநியோகர்கர் மூலம் கொண்டு சேர்ப்பது பலனளிக்கும் என்கிறார் நீலிமா.
தற்சமயம் மார்க்கெட்டிங் செயல்பாடுகளை நீலிமாவே கையாளும் நிலையில், வரும் நாட்களில் அப்பணிகளுக்கு பிரத்யேகமாக ஒருவரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளார். வலைதளம் உருவாக்கும் பணியும் நடந்து வருவதாகத் தெரிவிக்கிறார்.
எத்தனையோ பிரச்சனைகளும் தடைகளும் வந்தபோதும் துணிந்து எதிர்கொண்டதே வெற்றிக்கு வழிவகுத்துள்ளது என்கிறார்.
மன அழுத்தத்தை போக்கி மனதை திசை திருப்புவதற்காக எடுக்கப்பட்ட சிறு முயற்சி சமூக வலைதளங்கள் உதவியுடன் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்துள்ளது.
ஷைன் ஹெர்பல்ஸ் மூலம் மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் கணவரை இழந்த பெண்களுக்கும் வருவாய் ஈட்ட வாய்ப்பளிக்கவேண்டும் என்பது நீலிமாவின் விருப்பமாக உள்ளது.