Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சின்ன விளக்குகள்; பிரம்மாண்ட வெளிச்சம்: அரசகுளம் தனலட்சுமியின் எழுச்சிக் கதை!

அரசகுளத்தைச் சேர்ந்த தனலட்சுமி சீரியல் விளக்கு வணிகத்தில் கணவருக்கு உதவி செய்யத் தொடங்கி ஏராளமான பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளார்.

சின்ன விளக்குகள்; பிரம்மாண்ட வெளிச்சம்: அரசகுளம் தனலட்சுமியின் எழுச்சிக் கதை!

Monday March 08, 2021 , 3 min Read

தனலட்சுமி அரசகுளத்தைச் சேர்ந்தவர். பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். ஆர்வமான, துடிதுடிப்பான பெண். இவருக்கு அசோக் என்பவருடன் திருமணம் முடிந்தது. அசோக் சீரியல் விளக்குகள் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார்.


ஆண்களுக்கான பிரிவாகக் கருதப்படும் சீரியல் விளக்குகள் வணிகத்தில் கணவருடன் களமிறங்கி வணிகம் விரிவடைய உதவியதுடன் மற்ற பெண்கள் இந்த வணிகத்தில் களமிறங்கி வெற்றியடையவும் தற்சார்புடன் திகழவும் உதவி வருகிறார்.

தனலட்சுமியின் அப்பா ஒரு விவசாயி. அம்மா அங்கன்வாடியில் வேலை செய்து வந்துள்ளார். சமீபத்தில் இவரது சகோதரர் உயிரிழந்துள்ளார்.

“எங்களிடம் இரண்டரை ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆனால் கடுமையான வறட்சி காரணமாக விவசாயம் செய்யமுடியவில்லை. என் கணவர் சீரியல் விளக்கு வணிகத்தை நடத்தி வருகிறார். வருமானம் போதவில்லை. என் கணவருக்கு தொழிலில் உதவி செய்ய முடிவெடுத்தேன்,” என்கிறார் தனலட்சுமி.

அசோக் ஈடுபட்ட சீரியல் விளக்கு தொழிலில் குறைவான லாபமே கிடைத்துள்ளது. சீரியல் விளக்குகள் பொருத்துவதற்கான ஆர்டர்கள் கிடைத்தபோதும் வேலையை செய்து முடிக்க வேலையாட்களை நியமிக்க முடியாமல் போனது.

1

தனலட்சுமிக்கு இந்த வேலையில் ஆர்வம் இருந்தது. கணவரிடம் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் மின்சாரம் தொடர்பான வேலை என்பதால் பரிச்சையமில்லாத வேலையில் தனலட்சுமியை ஈடுபடுத்துவது ஆபத்து என்று எண்ணினார் அசோக். இதனால் தனலட்சுமியின் விருப்பத்தை மறுத்துள்ளார்.


ஒருமுறை பக்கத்து நகரில் அமைந்துள்ள கோயில் ஒன்றில் விழா ஒன்று ஏற்பாடாகியிருந்தது. குறைவான நேரத்தில் சீரியல் விளக்குகள் பொருத்தும் பணியை செய்து முடிக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.


அசோக் வேறுவழியின்றி தனலட்சுமியின் உதவியைப் பெற்றுக்கொண்டார். சீரியல் விளக்குகள் பொறுத்துவதற்கு கடவுள், அரசியல் தலைவர்கள், கட்சி சின்னம் , பறவைகள், விலங்குகள் போன்ற வடிவங்களுக்கு ஏற்ப மூங்கிலை வளைக்கவேண்டும். இந்த வேலையில் தனலட்சுமியின் உதவியைக் கேட்டுள்ளார்.


தனலட்சுமியின் ஆசை நிறைவேறியது. இதற்காகவே காத்திருந்த அவர் உடனே களமிறங்கினார்.

இவரது ஆர்வத்தையும் துடிதுடிப்பையும் கண்ட அசோக் வியப்படைந்தார். தனலட்சும் விரைவாகவே வேலை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். சுறுசுறுப்பாக வேலை செய்தார். இருவரும் சேர்ந்து சொன்னபடி வேலையை சரியான நேரத்தில் சிறப்பாக செய்து முடித்தார்கள்.

படிப்படியாக சீரியல் விளக்குகள் பொருத்தும் வேலையை தனலட்சுமி நிர்வகிக்கத் தொடங்கினார். அசோக் கூடுதல் ஆர்டர்களைப் பெறுவதில் கவனம் செலுத்தினார். இந்தத் தம்பதி தங்கள் மகள்களுக்கு திருமணம் செய்து முடித்தனர். பெற்றோரின் வணிகத்தில் அவர்களும் உதவுகின்றனர். டிசைன்களை உருவாக்க கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் பயன்படுத்தத் தொடங்கினர்.


ஆர்டர் எண்ணிக்கைகள் அதிகரிக்கையில் கிராமத்தில் உள்ள மற்ற பெண்களையும் பணியமர்த்தி வேலை வாய்ப்பு வழங்கியுள்ளனர்.

“எங்கள் கிராமம் தொலை தூரத்தில் அமைந்துள்ளது. முறையான போக்குவரத்து வசதி இல்லை. பெண்களுக்கான வேலை வாய்ப்புகளும் குறைவு. நான் வணிகத்தில் ஈடுபட்டு வெற்றிகரமாக செயல்படுவேன் என்று பத்தாண்டுகளுக்கு முன்பு நினைத்துக்கூட பார்த்ததில்லை,” என்கிறார்.

இன்று மகாமாரியம்மன் சுய உதவிக்குழு – சீரியல் பல்பு யூனிட் இவரது முயற்சியால் இயங்கி வருகிறது. இந்தக் குழு பதாகைகளுக்கான எல்ஈடி விளக்குகளை வழங்குகிறது. விழாக்கள், அரசியல் பிரச்சாரங்கள், திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு சீரியல் விளக்குகளை ஏற்பாடு செய்கிறது.

தனலட்சிமி 50 பெண்கள் அடங்கிய குழுவை நிர்வகித்து வருகிறார். கிட்டத்தட்ட 550-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சியளித்துள்ளார். இவர்களில் பலர் சொந்தமாக தொழில் செய்து வருகின்றனர். ஒவ்வொருவரும் 20-30 பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியுள்ளனர்.

இந்த சுய உதவிக்குழு விரிவடைவதற்குத் தேவையான கடன் கிடைக்கவும் இந்தியா முழுவதும் இவர்களது வணிகத்தைக் கொண்டு செல்லவும் ஸ்ரீனிவாசன் டிரஸ்ட் (SST) உதவியுள்ளது.

2

இதுதவிர சமூக நலத்துறை அதிகாரி, உள்ளூர் காவல்துறை அதிகாரி போன்றோரும் ஆதரவளித்து வழிகாட்டியுள்ளனர்.

தனலட்சுமி வணிகத்தில் இணைந்து பத்தாண்டுகள் கடந்த நிலையில் இன்று 10 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டு வருகிறார்கள்.

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் மக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் இவர்களது வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டாலும் படிப்படியாக மீட்சி இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் தனலட்சுமி.


ஏராளமான பெண்கள் தற்சார்புடன் செயல்பட உதவியது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவிக்கிறார் தனலட்சுமி.

”இந்த முயற்சியால் இன்று பல பெண்கள் தற்சார்புடன் செயல்படுகிறார்கள். இவர்களின் நிலை மேம்பட உதவி, சமூக நலனில் சிறியளவில் என்னால் இயன்ற வகையில்  பங்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர்: தியா கோஷி ஜார்ஜ் | தமிழில்: ஸ்ரீவித்யா