'உலக இட்லி தினம்'- இந்தியர்கள் காலையில் அதிகம் ஆர்டர் செய்யும் உணவு இட்லி...
உலக இட்லி தினத்தை முன்னிட்டு உபெர் ஈட்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டு தகவல், இந்தியாவில் பெங்களூர் நகரம் இட்லியை அதிகம் விரும்பி ஆர்டர் செய்யும் இடமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இட்லி காலை உணவில் முக்கிய இடம் பிடித்திருப்பதையும் உணர்த்துகிறது.
உலகில் பல்வேறு தினங்கள் கொண்டாடப்படுவது போல, மார்ச் 30 ம் தேதி ’உலக இட்லி தினம்’ ஆக கொண்டாடப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த பிரபல இட்லி நிறுவனத்தை நடத்தி வரும் இனியவன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. இட்லி தினத்தை முன்னிட்டு டிவிட்டரில் #WorldIdliDay எனும் ஹாஷ்டேகும் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
இன்று உலக இட்லி தினம் கொண்டாடப்படும் நிலையில், உணவு டெலிவரி சேவையான உபெர் ஈட்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் இட்லி ஆர்டர் செய்யப்படுவது தொடர்பாக ஆய்வு நடத்தி சுவையான தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் காலை உணவாக இட்லி இருப்பதாகவும், இந்திய நகரங்களில் பெங்களூர் இட்லி ஆர்டர் செய்வதில் முதலிடம் வகிப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் 2 வது மற்றும் 3 வது இடங்களில் வருகிறது.
உலக அளவில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மற்றும் நியு ஜெர்சி நகரங்களில் இட்லி அதிகம் விரும்பி ஆர்டர் செய்யப்படுகிறது. மேலும், இந்தியர்கள் காலையில் அதிகம் ஆர்டர் செய்யும் உணவாக இட்லி இருக்கிறது.
நாடு முழுவதும் உள்ளவர்களால் இட்லி விரும்பி உண்ணப்படும் நிலையில் ஆரோக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் காய்கறி இட்லியை விரும்பி ஆர்டர் செய்கின்றனர். பிப்ரவரி 23 ம் தேதி மும்பை வாடிக்கையாளர் அதிகபட்சமாக 110 தட்டு இட்லி ஆர்டர் செய்துள்ளார்.
இந்தியர்கள் இட்லியை விரும்பி ஆர்டர் செய்வதுடன் அதுனுடம், கூடுதலாக சட்னி, சாம்பர், மிளகாய் பொடியும் கேட்கும் பழக்கமும் கொண்டுள்ளனர். மேலும், இட்லியுடன் லைம் சோடா விரும்பி பருகுகின்றனர். மசாலா லஸ்ஸியும் விரும்புகின்றனர்.
பெங்களூருவில் தட்டு இட்லி விரும்பி ஆர்டர் செய்யப்படுகிறது என்றால் சென்னையில் அரசி மாவு இட்லி அதிகம் நாடப்படுகிறது. தில்லி, சண்டிகரில் காய்கறி இட்லி அதிகம் விரும்பப்படுகிறது. இட்லி மஞ்சூரியன், சிக்கன் பிரை இட்லி, சாக்லெட் இட்லி போன்றவையும் பிரபலமாக உள்ளன. பிரெஞ்சு பிரை இட்லி மற்றும் மஷ்ரூம் இட்லியும் பிரபலமாக உள்ளன.
“வாடிக்கையாளர்கள் இரவு உணவு மற்றும் மதிய உணவோடு, காலை உணவையும் ஆர்டர் செய்யத்துவங்கியுள்ளனர். இந்நிலையில் காலை உணவை நாடும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இட்லி விருப்ப உணவாக இருப்பதில் வியப்பில்லை,” என்று உபெர் ஈட்ஸ் இந்தியா செயல்பாடுகள் தலைவர் தீபக் ரெட்டி கூறினார்.
இட்லியை விஷேமாக வழங்கும் பல ரெஸ்டாரண்ட்கள் இருப்பதகாவும் அவர் கூறுகிறார். உலக இட்லி தினத்தை முன்னிட்டு, அனைத்து இட்லி விரும்பும் நகரங்களிலும், சிறப்பு இட்லி திட்டங்களை அளிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
”இந்தியாவில் இட்லி விரும்பும் நகரமாக பெங்களூர் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இட்லி அதிகம் விரும்பப்படும் காலை உணவாக இருப்பதில் வியப்பிலை,” என்று பெங்களூருவின் பிராமின்ஸ் தட்டு இட்லி நிறுவன இணை நிறுவனர் சுபாஷ் சர்மா கூறுகிறார்.
ஆக, நீங்களும் நாளை உலக இட்லி தினத்தை கொண்டாடுங்கள். அப்படியே #WorldIdliDay ஹாஷ்டேகையும் மறக்க வேண்டாம்.