'இந்திய சுகாதாரத் துறையின் மிகப்பெரிய வணிக ஒப்பந்தம்’ - 4500 கோடிக்கு Thyrocare விற்றது பற்றி Dr.வேலுமணி
PharmEasy-யின் தாய் நிறுவனமானம் API Holdings Limited தைரோகேர் நிறுவனத்திடம் இருந்து 66.1% பங்குகளை வாங்கியுள்ளது. இதற்காக, டாக்டர்.ஏ.வேலுமணி ஆண்ட் அபிலியேட்சிடம் இருந்து பங்கு ஒன்று ரூ.1,300 விலையில் மொத்தம் ரூ.4546 கோடிக்கு இந்த டீல் முடிவடைந்துள்ளது.
2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் Hidden Gems என்னும் கவர் ஸ்டோரியை ஃபோர்ப்ஸ் இந்கியா வெளியிட்டிருந்தது. அதில் சில நிறுவனங்கள் குறித்து விரிவாக எழுதப்பட்டிருந்தது. அதில் ஒரு நிறுவனம்தான் ‘தைரோகேர்’. எதிர்காலத்தில் பெரும் வளர்ச்சியை அடையும் இந்த நிறுவனத்தை கோவையைச் சேர்ந்த வேலுமணி தனது கடின உழைப்பால் இந்நிலைக்கு கொண்டு வந்தார்.
2016-ம் ஆண்டு தைரோகேர் நிறுவனம் பட்டியலிடும்போது ரூ.3000 கோடி அளவுக்கு சந்தை மதிப்பு இருந்தது. தற்போது ரூ.7,600 கோடிக்கு மேல் இருக்கிறது. கோவை அருகே சிறிய குக்கிராமமான அப்பனாயக்கன்பட்டிபுதூரில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் வேலுமணி. கையில் 400 ரூபாயுடன், ஒருவழி டிகெட் எடுத்து மும்பைக்கு வேலை தேடிச் சென்ற வேலுமணி, பின்னர் பாபா ஆட்டாமிக் ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்து, பணிவாழ்க்கையோடு பயோ டெக்னாலஜி படிப்பில், முதுகல, பிச்.டி பெற்று தன்னை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார்.
அதோடு நின்றுவிடாமல், சுயகாலில் நிற்க நினைத்த டாக்டர்.வேலுமணி, 2 லட்ச ரூபாய் முதலீட்டில் 200 சதுர அடி இடத்தில் தைராய்டு டெஸ்டிங் லேப் ‘தைரோகேர்’ 1999 இல் தொடங்கினார். அன்று தொடங்கிய பயணம் இன்று 4000+ கோடி மதிப்பு நிறுவனமாக கொண்டு நிறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் உற்சாகம் குறையாமல் பேசும் அவர், தற்போது தைரோகேர் நிறுவனத்தை PharmEasy என்ற மருந்துத்துறையில் இயங்கி வளர்ந்து வரும் ஒரு நிறுவனத்திடம் விற்றுவிட்டார். PharmEasy-யின் தாய் நிறுவனமானம் API Holdings Limited தைரோகேர் நிறுவனத்திடம் இருந்து 66.1% பங்குகளை வாங்கியுள்ளது. இதற்காக, டாக்டர்.ஏ.வேலுமணி ஆண்ட் அபிலியேட்சிடம் இருந்து பங்கு ஒன்று ரூ.1,300 விலையில் மொத்தம் ரூ.4546 கோடிக்கு இந்த டீல் முடிவடைந்துள்ளது.
இந்த திடீர் முடிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், அவர் அதை உற்சாகத்தோடு நம்மிடம் பேசினார். இது குறித்து பிரத்யேக உரையாடலில் தைரோகேர் நிறுவனத்தை விற்றதன் காரணம், அடுத்து என்ன? போன்ற பல விஷயங்களைச் பகிர்ந்தார்.
சில நாட்களுக்கு முன்பே இந்த PharmEasy-Thyrocare கையகப்படுத்தல் குறித்து செய்தி வெளியானது. அவரிடம் பேச முயற்சித்தபோது, பின்னர் பேசுவதாக கூறிய அவர், வெள்ளிக்கிழமை மாலை முறையான அறிவிப்பு வெளியான பிறகு யுவர்ஸ்டோரி ஆசிரியர் இந்துஜா மற்றும் என்னிடம் விரிவாக இது பற்றி கான்காலில் பேசினார்.
நிறுவனத்தை விற்க வேண்டிய காரணம் என்ன? நீங்களே நடத்தி இருக்கலாம், அல்லது உங்கள் மகன், மகள் அல்லது நடத்தி இருக்கலாமே?
2016-ம் ஆண்டு நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. அதற்கும் ஒரு மாதத்துக்கு முன்பாக என் மனைவி இறந்துவிட்டார். அது எனக்கு மிகப்பெரிய ஷாக். ஆனால் ஐபிஓ கொண்டுவர வேண்டும் என்பது மிக அவசியம். காரணம் முதலீட்டாளர்கள், பணியாளர்கள் என பலரின் பங்கு இருக்கிறது. அதனால் அப்போது முதலே ஒரு மாற்று வழியை நான் தேடினேன்.
ஆனால் அந்த வழி நல்ல வழியாக, அனைவருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என நினைத்தேன். இந்த இடைப்பட்ட காலத்தில் எங்களுடைய செயல்பாடுகளில் எந்த சிக்கலும் இல்லை.
தவிர 25-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் நிறுவனங்கள் எங்களை வாங்குவதாற்கான விருப்பம் தெரிவித்தன. கோவிட் தாக்கம், வயோதீகம் எல்லா இணைந்து இந்த முடிவுக்கு ஒரு முக்கியக் காரணம் எனலாம்.
PharmEasy வாங்குவதன் மூலம் அவர்களுக்கு மட்டுமல்லாமல் தைரோகேர் எதிர்காலத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்னும் நம்பிக்கை இருந்தது. இது ஒரு சிறப்பான டீலாக இருந்தது, அதனால் ஃபார்ம் ஈஸியுடன் இணைந்தோம்.
தைரோகேர் விற்பனை என்பது உங்களின் தனிப்பட்ட முடிவா? உங்கள் மகன் அல்லது மகளிடம் கலந்தாலோசித்தீர்களா? ஏன் இந்தத் தொழிலில் அவர்களுக்கு விருப்பம் இல்லையா?
இந்த முடிவு என்பது ஒரு நாளில் எடுத்ததல்ல. என் மனைவியின் மறைவுக்குப் பின்னர் எனக்குள் ஒரு மாற்றமும், வெற்றிடம் இருந்தது. அதை யாராலும் நிரப்பமுடியாது. பல ஆஃபர்கள் இதுவரை வந்தாலும், 30 நாட்களில் PharmEasy உடனான இந்த டீல் முடிவடைந்தது. இது சுகாதாரத்துறையில் நாட்டில் நடைப்பெற்ற மிகப்பெரிய மற்றும் சிறந்த ஒப்பந்தமாக இருக்கும்.
இப்போதும் கூட என் மகன், மகள் நிறுவனத்தில் இணை நிர்வாக இயக்குனர்களாக 15 ஆண்டுகளாக சம்பளமின்றி முக்கியப் பொறுப்புகளில்தான் இருக்கிறார்கள். அவர்களால் இந்நிறுவனத்தை எடுத்து நடத்த முடியும் ஆனால் அவர்களுக்கு விருப்பம் இல்லை.
ஒவ்வொருவருக்கும் வேவ்வேறு விருப்பங்கள் இருக்கும். என் மகன்/மகளின் திருமணம் மற்றும் தொழில் குறித்து நான் எந்த முடிவும் எடுப்பதில்லை. அவர்களுக்கு என்ன தேவையோ அவர்கள் செய்யட்டும். அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது மட்டும்தான் என்னுடைய வேலை.
”தைரோகேர் விற்பது பற்ரிய இந்த முடிவு நாங்கள் கூட்டாக குடும்பத்தில் எடுத்த ஒரு சிறந்த முடிவு ஆகும்.”
தவிர நிறுவனத்தைத் தொடங்கிவிட்டதால் அதனைத் தொடர்ந்து நடத்தியாகவேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. நம்மை விட சிறப்பாக நடத்துபவர்கள் கிடைத்தால் அவர்களிடம் விடுவதே நிறுவனத்துக்கு நல்லது.
ஒரு பங்கினை ரூ.1300க்கு விற்பனை செய்திருக்கிறீர்கள். ஆனால் தற்போதைய சந்தை விலை ரூ.1450க்கு மேல் இருக்கிறது. ஏன் குறைந்த விலை?
பரிசோதனை என்பது கடந்த சில ஆண்டுகளாக சீராக இருந்து வந்தது. ஆனால் கோவிட் வந்த பிறகு பரிசோதனைகளுக்கான தேவை அதிகமாக இருந்தது. அதனால்தான் தைரோகேர் மட்டுமல்லாமல் ஃபார்மா துறையின் ஒவ்வொரு பிரிவை சேர்ந்த பங்குகளும் விலை உயர்ந்தன. இந்தச் சூழலில்தான் பரிசோதனை மற்றும் மருந்து விற்பனை நிறுவனங்கள் இணையும்போது பெரிய வளர்ச்சி இருக்கும் என்று நாங்கள் கணித்தோம்.
இந்த டீலை ரூ.1300 என நாங்கள் முடித்தோம். ஆனால் அப்போது சந்தை விலை ரூ.1000- மட்டுமே. ஒரு மாதத்துக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிட்டால் 30 சதவீதம் பிரீமியம். ஆனால் தற்போதைய சந்தை விலையுடன் ஒப்பிட்டால் 10 சதவீத தள்ளுபடி. சந்தையில் விலை உயர்கிறது என்பதற்காக ஏற்கெனவே ஒப்புக்கொண்டதை மாற்ற முடியாதே.
தைரோகேரை விற்றுள்ள ஏபிஐ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் (பார்ம் ஈஸி நிறுவனத்தின் தாய் நிறுவனம்) மீண்டும் நீங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? அப்படியே முதலீடு செய்வதாக இருந்தாலும் 5 சதவீதத்துக்கு மேல் இருக்கும் பட்சத்தில் இயக்குநர் குழுவில் இருந்திருக்கலாமே? ஏன் 4.9% மட்டுமே முதலீடு?
நான் ஏபிஐ ஹோல்டிங்கில் முதலீடு செய்தாக வேண்டும் என்னும் எந்த கட்டாயமும் கிடையாது. எங்களுக்குள் புரிதல் இருந்தால் நீங்கள் இணைந்தால் நன்றாக இருக்குமே என்பதுபோல உரையாடல் அதனால் ரூ.1,500 கோடி அளவுக்கு முதலீடு செய்தேன்.
5 சதவீத பங்குகள் இருந்தால் இயக்குநர் குழுவில் இருக்கலாம். ஆனால் இனிமேல் போர்டில் அமர எனக்கு விருப்பமில்லை என்று தோன்றியது. இயக்குநர் குழு என்பது அலங்காரமான வேலை கிடையாது. அதில் பல பொறுப்புகளும் வேலைகளும் உள்ளன. இனி நான் இ-மெயிலை அலுவலக வேலைக்காக அல்லாமல் சொந்த வேலைக்கு பயன்படுத்தலாம் என்று இருக்கிறேன். தவிர இதற்கு மேலும் பேராசைக் கூடாது என்று முடிவு செய்தேன்.
நீங்கள் பார்த்து பார்த்து தொடங்கி, வளர்ச்சியடையச் செய்த நிறுவனம் தைரோகேர்? இனி ஃபார்ம் ஈசி நிறுவனர்கள் அதை எப்படிக் கொண்டு செல்கின்றனர் என்று பின்பற்றுவீர்களா?
மகளை திருமணம் செய்து கொடுக்கும் பெற்றோர் போல், நிச்சயம் வெளியில் இருந்து கொண்டு அவர்களின் செயல்பாடுகளை கவனிப்பேன். ஃபார்ம் ஈசி நிறுவனர்கள் அனைவரும் இளம் வயதினர்கள், சிறப்பாக இதைக் கொண்டு செல்வார்கள் என நம்புகிறேன், அவர்களும் என் மீது மரியாதையும், மதிப்பும் வைத்திருக்கின்றனர்.
25 ஆண்டுகளுக்கு மேலான தைரோகேர் நிறுவனத்தை பிரியும் முன்னர் உங்கள் ஊழியர்களிடம் பேசினீர்களா?
இது ஒரு எமோஷனலான தருணம். இருந்தாலும் தலைமைபொறுப்புகளில் இருக்கும் 50-க்கும் மேற்பட்டவர்களிடம் உரையாட முயற்சி செய்தேன். ஆனால் அனைவரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்ததால் ஒரு கட்டத்துக்கு மேல் எங்களால் உரையாட முடியவில்லை. கூட்டத்தை பாதியில் முடித்துக்கொண்டோம்.
அடுத்தகட்டம் என்ன? ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய இருக்கிறீர்களா? சமூக சேவையா என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
இப்போதைக்கு ஒரு திட்டமும் இல்லை. முதலீடு செய்ததுபோக மீதமுள்ள தொகை கிடைக்கவே சில மாதங்கள் ஆகும். பல யோசனைகள் இருக்கின்றன. இனிதான் ஒவ்வொன்றாக பரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் முதல் வேலையாக என் மகன்/மகளுக்கு ஒரு வீடு வாங்கவேண்டும். நாங்கள் இதுவரை தைரோகேர் வளாகத்தில்தான் இருந்துவருகிறோம். இனி வசிப்பதற்கு இடம் பார்க்க வேண்டும்.
கோவையில் இருந்து மும்பை சென்றீர்கள். பார்க்-ல் வேலை கிடைத்தது. தொழில் தொடங்கினீர்கள். வெற்றிகரமாக ஐபிஓ மட்டுமல்லாமல் நிறுவனத்தையும் விற்றுவிட்டீர்கள். மீண்டும் கோவை திரும்பும் திட்டம் இருக்கிறதா?
ரஜினிகாந்த் எப்படி சென்னை வந்து தமிழ் பேசி செட்டில் ஆகிவிட்டாரோ அதுபோல நான் மும்பை வந்து மராத்தி பேசும் அளவுக்கு செட்டில் ஆகிவிட்டேன். தவிர கோவிட் வந்த பிறகு லோகேஷன் என்பது ஒரு பிரச்சினையே கிடையாது. மும்பையில்தான் இருக்கப்போகிறேன்.
தொழில்முனைவோர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
தொழில் தொடங்குவது மிக முக்கியம். அதே சமயத்தில் தொழிலில் இருந்து சரியான நேரத்தில் சரியான நபர்களிடம் கொடுத்துவிட்டு வெளியேறுவதும் முக்கியம். தொழிலை உங்களுடன் சுருக்கிக்கொள்ளாமல் அந்தத் தொழிலுக்கு இருக்கும் வாய்ப்பு, பணியாளர்கள் உள்ளிட்ட பலவற்றையும் கருத்தில்கொண்டே முடிவெடுக்க வேண்டும்.
இந்த புரிதல் இல்லாததால் குறிப்பிட்ட எல்லையை தாண்டி பல நிறுவனங்களால் வளர்ச்சி அடைய முடியவில்லை, எனக் கூறி உற்சாகமாக முடித்துக் கொண்டார் டாக்டர்.வேலுமணி