தானியங்கி சானிடைசர் டூ க்வாரன்டைன் ரோபோ: கொரோனா எதிர்ப்பில் சிறுவர்களின் கண்டுபிடிப்புகள்!
விடுமுறை நேரத்தில் வித்தியாசமான கண்டுபிடிப்புகள்!
கொரோனாவை எதிர்க்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த நான்கு குழந்தைகள் எப்படி, சுத்திகரிப்பு அமைப்பு முதல் ஒரு ஸ்மார்ட் குப்பைத்தொட்டி வரை உருவாக்கியுள்ளார்கள் என்பதை இங்கே விரிவாகப் பார்க்கலாம்!
2020ல் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவத் தொடங்கியவுடன், பல பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், அதிகரித்து வரும் தொற்றுநோயைத் தடுக்கவும் மூட வேண்டியிருந்தது.
இதன்காரணமாக, பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் மாணவர்கள் வீட்டிலேயே நேரத்தை கழிக்க வேண்டிய சூழ்நிலை நிலவியது. இந்த நேரத்தை மாணவர்கள் சிலர், நல்ல முறையில் பயன்படுத்த ஒரு வழியைக் கண்டறிந்துள்ளனர்.
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு பல குழந்தைகள் UV சானிடைசர்கள் மற்றும் கிருமிநாசினி தெளிப்பு போன்ற தனித்துவமான கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர்.
யுவர்ஸ்டோரி சார்பாக இந்த குழந்தைகளில் சிலரிடம் அவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி பேசினோம்.
நந்தினி பல்லா - UV Rakshak

தொற்றுநோய் மிகவும் பயத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மக்கள் தங்களைச் சுற்றியுள்ள காற்றை சுவாசிக்கக் கூட பயப்படுகின்ற இந்த சூழ்நிலையில் 13 வயதான நந்தினி பல்லா என்ற சிறுமி காற்றில் கிருமி நீக்கம் செய்ய ஒரு சுத்திகரிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளார்.
UV ரக்ஷக் எனப் பெயரிப்பிடப்பட்டுள்ள இந்த கருவிக்கு UV-C கதிர்வீச்சு உமிழ்ப்பு மற்றும் தொலைதூரத்தில் இயக்கும் திறனை வழங்க, நந்தினி அதிக டார்க் மோட்டார்கள், Arduino மெகாவைப் பயன்படுத்தி, UV ரக்ஷக்கைத் தொடங்க ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறார்.
இந்த அமைப்பு தற்போது இரண்டு மருத்துவமனைகளில் வேலை செய்கிறது. விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் போது நந்தினி இதனை தனது பள்ளியில் பயன்படுத்த விரும்புகிறார்.
”நமக்குத் தேவை வைரஸை மேற்பரப்பில் மட்டுமல்ல, காற்றிலும் கொல்லக்கூடிய ஒரு அமைப்பு. காற்றில் உள்ள வைரஸை செயலிழக்கச் செய்வதற்காக நான் UV ரக்ஷக்கை வடிவமைத்தேன். இதனை தொலைவிலிருந்து ரிமோட் மூலமாக இயக்கலாம். மருத்துவமனைகள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற நெரிசலான இடங்களில் வைரஸைக் கொல்ல இந்த அமைப்பைப் பயன்படுத்தலாம்," என்று தனது கண்டுபிடிப்பு பற்றி நந்தினி கூறுகிறார்.
சாக்ஷாம் மாத்தூர் - குவாரன்டைன் உதவியாளர்!

ஏப்ரல் மாதத்தில், 12 வயது சக்சம் மாத்தூரின் சகோதரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, அதன் பிறகு, அவரது தந்தையும் நோய்வாய்ப்பட்டார். இதனால் தனிமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு உணவு சென்றடைவதை உறுதிப்படுத்த விரும்பிய சக்சம் 7 அடி தூரத்திலிருந்து உணவு மற்றும் மருந்துகளை வழங்க உதவும் ‘குவாரன்டைன் உதவியாளர்' என்ற ரோபோவை உருவாக்கினார்.
தனிமைப்படுத்தலில் இருந்த அவரின் தந்தை மற்றும் சகோதரிக்கு தின்பண்டங்கள், பானங்கள் மற்றும் மருந்துகளை அனுப்புவதற்கு இந்த ரோபோ அவரின் குடும்பத்தில் உள்ள மற்றவர்களால் பயன்படுத்தப்பட்டது.
கியான்ஷ் காஷ்யப் - Rakshak

டெல்லியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் கியான்ஷ் காஷ்யப். இவர் காண்டாக்ட்லெஸ் டஸ்ட்பின் எனப்படும் குப்பைத் தொட்டி மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு தூரத்திலிருந்து உதவக்கூடிய ரோபோவை கண்டுபிடித்தார். இதற்கு ரக்ஷக் என்று பெயரிட்டுள்ள சிறுவன் கியான்ஷ்,
"ஏஎம்எஸ் பயன்பாட்டின் உதவியுடன் இது தொலைதூரத்தில் இருந்து இயக்க முடியும். அதனுடன் ஒரு ஸ்மார்ட்போனையும் இணைத்துள்ளேன். இதனால் கொரோனா நோயாளிகள் குடும்பத்துடன் பேச முடியும். ஹோஸ்ட் அப்ளிகேஷனை இயக்கும் மற்ற சாதனங்களால் அதை தொலைவிலிருந்து அணுக முடியும்."
நடைமுறை பயன்பாட்டிற்குப் பிறகு, அது நோயாளிக்கு முழுமையாக உதவக்கூடிய வகையில் இன்னும் சில அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று கண்டேன். எனவே, நான் ஒரு ஸ்மார்ட் ஹேண்ட் சானிடைசர் டிஸ்பென்சர் மற்றும் தானியங்கி நீர் விநியோகிப்பாளரையும் சேர்த்துள்ளேன், என்று தெரிவித்து இருக்கிறார்.
கியான்ஷின் தந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது இந்த ரக்ஷக் இயந்திரம் தான் பாதுகாப்பான தூரத்திலிருந்து மருந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போன்றவற்றை அவருக்குக் கொடுத்து குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு கொரோனா பாதிப்படையாமல் காப்பாற்றி இருக்கிறது.
இதற்கிடையே, கியான்ஷ் தனது கண்டுபிடிப்பில் மேலும் சில அம்சங்களைச் சேர்க்க விரும்புகிறார், இது சுகாதாரத் துறைகளுக்கு உதவும். கோவிட் -19 காரணமாக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கூடுதல் நேரம் வேலை செய்கிறார்கள் மற்றும் கியான்ஷ் ரக்ஷக்கை சில AI அம்சங்களுடன் மேம்படுத்தி பங்களிக்க விரும்புகிறார், அது ஒரு நர்ஸாக வேலை செய்ய உதவும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவிக்கிறார்.
நவ்யா மோங்கியா - ஆட்டோட்ராப் சேஃப்ஹேண்ட்ஸ்!
டெல்லியைச் சேர்ந்த 13 வயது சிறுமி நவ்யா மோங்கியா, சானிடைசர்கள் மற்றும் சோப்பு இரண்டையும் வழங்கக்கூடிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். இவரின் ‘ஆட்டோட்ராப் சேஃப்ஹேண்ட்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரம் கொரோனா வைரஸின் பரவலைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், கைகளை எப்போதும் சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

தனது தயாரிப்பு குறித்து பேசும் நவ்யா மோங்கியா,
“டிஸ்பென்சரின் முனையின் கீழ் கையை வைப்பதன் மூலமும், மார்க்கர்போர்டில் உள்ள புஷ் பொத்தான்களைப் பயன்படுத்துவதன் மூலமும் திரவத்தை விநியோகிக்க இதைப் பயன்படுத்தலாம். பம்புடன் இணைக்கப்பட்ட ஐஆர் சென்சார் பயன்படுத்தி, இயந்திரம் திரவத்தை வெளியிடுகிறது. ஐஆர் சென்சார் ஒரு கையை உணரும்போது, அது பம்பிற்கு ஆன் செய்ய ஒரு செய்தியை அனுப்புகிறது. அழுத்தும்போது, பம்ப் ஆன் செய்ய சமிக்ஞை செய்யப்படுகிறது, மேலும் அது திரவத்தை வெளியிடுகிறது. குறிப்பிட்ட அளவை விட திரவ நிலை குறைவாக இருந்தால் மார்க்கர்போர்டு ஒலிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது," என்று கூறுகிறார்.
இவர் மேலும் மூன்று டிஸ்பென்சர்களை உருவாக்கியுள்ளார். இதனை பள்ளிகள் திறந்தவுடன் பள்ளியில் நிறுவ விரும்புகிறார்.
தமிழில்: மலையரசு