தந்தையின் எருமைப் பண்ணை தொழிலை நடத்தி, இன்று மாதத்துக்கு 6 லட்சம் ஈட்டும் 22 வயது இளம்பெண்!
இளம்பெண் அசத்தல் சாதனை!
"எனது குடும்பத்திற்காக இந்த பொறுப்பை சுமக்க மறுத்திருந்தால்தான் வெட்கப்பட்டிருப்பேன். வெட்கப்படுவதும், பின்வாங்குவதும் என் தந்தைக்குப் பிடிக்காத ஒன்று...''
மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நிகோஜ் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ரத்தா தவான்.
1998ம் ஆண்டு ஒரே ஒரு எருமை மாடு மட்டுமே அவரது வீட்டில் இருந்ததாகவும், தற்போது 80 எருமை மாடுகளுடன் 450 லிட்டர் பால் விற்பனை செய்வதாகவும் கூறுகிறார்.
அந்த காலக்கட்டத்தில் அவரது தந்தை சத்யவன், எருமைகளைக்கொண்டு பிழைப்பை நடத்தி வந்தார். எருமை மாட்டு பாலை விற்பனை செய்தார். மாற்றுத்திறனாளியான அவரால் உடல் பிரச்னைகள் காரணமாக ஒரு கட்டத்துக்கு மேல் பால் விற்பனை செய்ய முடியவில்லை.
இந்நிலையில் தான் 2011ம் ஆண்டு எருமைகளிடமிருந்து பால் கறக்கவும், அதனை விற்கும் பொறுப்பையும் தனது மகளிடம் ஒப்படைத்தார். அப்போது எல்லாமுமே தலைகீழாக மாறியது.
“என் தந்தையால் பைக் ஓட்ட முடியவில்லை. எனது சகோதரர் எந்தவொரு பொறுப்பையும் ஏற்க முடியாத அளவுக்கு இளமையாக இருந்தார். ஆகவே, நான் என்னுடைய 11 வயதில் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். இருப்பினும் இது மிகவும் விசித்திரமாகவும், தனித்துவமாகவும் இருந்தது. ஏனென்றால் எங்கள் கிராமத்தில் எந்தப் பெண்ணும் இதற்கு முன்பு அத்தகைய பணியை மேற்கொள்ளவில்லை,” என்கிறார் ஷ்ரத்தா.
காலையில், ஷ்ரத்தாவின் வகுப்பு தோழர்கள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர் கிராமத்தைச் சுற்றி பைக்கில் பால் பண்ணைகளுக்கு பால் வழங்கிக் சென்றுகொண்டிருப்பார். அவருடைய இந்தப் பொறுப்பு கல்வி கற்பதை கடினமாக்கியது என்றாலும், வகுப்பு தோழர்கள் பார்த்துவிடுவார்கள் என அவர் வெட்கப்படவில்லை.
இரண்டு மாடி கட்டிடத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட எருமைகளுடன், ஷ்ரத்தா தனது தந்தையின் தொழிலை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார். அந்த மாவட்டத்திலேயே பெண் ஒருவரால் தலைமை தாங்கி நடத்தப்படும் மாபெரும் கால்நடை கொட்டகையில் இதுதான் பெரியதும் புதியதும்கூட.
தற்போது ஷரத்தா குடும்பத்தின் பொருளாதாரமும் மேம்பட்டுள்ளது. அவர்கள் ஒரு மாதத்திற்கு ரூ.6 லட்சம் சம்பாதிக்கிறார்கள்.
“எனது தந்தை பண்ணையின் பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்தபோது, தொழில் வளரத் தொடங்கியது. எருமைகள் குடும்பத்தின் ஒருபகுதியாக மாறின. 2013க்குள், பெரிய பால்கேன்களைக் கொண்டு செல்ல ஒரு மோட்டார் சைக்கிள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில், நாங்கள் ஒரு டஜன் எருமைகளை வைத்திருந்தோம், அதே ஆண்டில் எருமைகளுக்கான ஒரு கொட்டகை கட்டினோம்," என்கிறார் ஷரத்தா.
2015 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, ஷ்ரத்தா ஒரு நாளைக்கு 150 லிட்டர் பாலை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
"2016 ஆம் ஆண்டளவில், எங்களிடம் சுமார் 45 எருமைகள் இருந்தன, மேலும் ஒரு நிலையான வியாபாரத்தை நடத்தி மாதத்திற்கு ரூ.3 லட்சம் சம்பாதித்தோம்.”
ஆரம்பத்தில் சற்று அசிங்கமாகவும், தயக்கத்துடனும் இந்தத் தொழிலை செய்தேன். எனது பகுதியில் பால் விற்க ஒரு பெண் பைக் சவாரி செய்ததை இதுவரை நான் பார்த்ததில்லை; அறிந்ததில்லை. இருப்பினும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பலரும் பெருமிதம் அடைந்து என்னை ஊக்குவித்தனர்.
அவர்களின் உன்னதமான வார்த்தைகளே எனது வேலையின் அருமையை எனக்கு புரிய வைத்தது. எனது நம்பிக்கையை அதிகரித்தது. ஆரம்பத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் பல சவால்களை எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது. அதற்காக தீவனம் வாங்குவது லாபத்தை பெரிதும் பாதித்தது. கோடையில் தீவனத்துக்கான விலைகள் அதிகரித்தன.
சில நேரங்களில் பற்றாக்குறையின் போது, மாதாந்திர செலவினங்களுக்காக எங்களுக்கு 5,000-10,000 ரூபாய் மட்டுமே எஞ்சியிருந்தது, எங்கள் கொட்டகையை ஒரு நாளைக்கு இரண்டு முறை சுத்தம் செய்வோம். மேலும் அனைத்து விலங்குகளும் வழக்கமான சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்துகிறோம்.
"கால்சியம் குறைபாடு அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்னை இருந்தால் நாங்கள் எருமைகளுக்கான உணவில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.”
80 எருமைகள் பண்ணையில் இருப்பதால், ஒரு நாளைக்கு சுமார் 450 லிட்டர் பாலை விற்பனை செய்கிறோம். 2019 ஆம் ஆண்டில், விலங்குகளை வளர்ப்பதற்காக இரண்டாவது தளத்தை நாங்கள் கட்டினோம். எங்கள் கிராமத்திலேயே நான் தான் இயற்பியல் பட்டப்படிப்பை முடித்திருக்கிறேன்.
“வாய்ப்புகளுக்காக பெரிய நகரங்களுக்கு செல்ல முடியவில்லை என வருந்தவில்லை. நான் தாழ்ந்தவளாக உணரவில்லை அச்சங்கள் அனைத்தையும் நான் வென்றுவிட்டேன். இந்த பொறுப்பிலிருந்து அன்றே நான் விலகியிருந்தால் வெற்றியை சுவைத்திருக்க மாட்டேன்,” என்கிறார் ஷ்ரத்தா.
எனது குடும்பத்திற்காக இந்த பொறுப்பை சுமக்க மறுத்திருந்தால்தான் வெட்கப்பட்டிருப்பேன். வெட்கப்படுவதும், பின்வாங்குவதும் என் தந்தைக்கு பிடிக்காத ஒன்று. தனது சகோதரியிடம் இருந்து பெற்ற இன்ஸ்பிரேஷன் காரணமாக அவரது தம்பி கார்த்திக் கால்நடை வளர்ப்பில் பட்டம் பெற்றிருக்கிறார்,” என்கிறார் அவர்.
ஷ்ரத்தா தற்போது முதுகலையில் இயற்பியல் பாடப்பிரிவை படித்து வருகிறார். மேலும் விரிவுரையாளராகவும் ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகிறார்.
படங்கள் மற்றும் தகவல் உதவி - TheBetterindia | தொகுப்பு: மலையரசு