சிறு மற்றும் நடுத்தர சில்லறை விற்பனையாளர்களுக்காக ஜோஹோ அறிமுகம் செய்த நவீன பில்லிங் சேவை Zakya
சில்லறை விற்பனையாளர்கள் கையிருப்பு நிர்வாகத்தை மேம்படுத்திக்கொள்ள உதவுவதோடு, ஆம்னிசேனல் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை மேம்பாட்டிற்கும் இந்த சேவை கைகொடுக்கும் என ஜோஹோ தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த சாஸ் சேவை யூனிகார்ன் நிறுவனமான ஜோஹோ கார்பரேஷன், சிறு மற்றும் நடுத்த சில்லறை விற்பனை நிலையங்களின் செயல்பாடுகளை சீரமைக்க மற்றும் மத்திய கண்காணிப்பு வசதியை வழங்கும் 'ஜக்யா' (
) எனும் நவீன பாயிண்ட் ஆப் சேல் (POS) சேவையை அறிமுகம் செய்துள்ளது.சரக்கு கையிருப்பு நிர்வாகம் மேம்பாடு, ஆம்னிசேனல் விற்பனை, வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றில் இந்த சேவை உதவும். மிக அதிக கையிருப்பு கொண்ட வர்த்தகங்களுக்கு மிகவும் ஏற்றது மற்றும் ஒரு மணி நேரத்திற்குள் செயல்படுத்தக்கூடியது என ஜோஹோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜக்யா சேவை, பி.ஒ.எஸ் பில்லிங் வசதியை கொண்டுள்ளது. இதன் மூலம் இணையம் இல்லாமலும் பில்லிங் செய்யலாம். விற்பனை உச்சமாக இருக்கும் நேரத்தில், ஜக்யா செயலி மூலமும் பில்களை கையாளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை அதிகம் நாடத்துவங்கியுள்ள நிலையில், போட்டித்தன்மையோடு இருக்க விரும்பும் சில்லறை விற்பனையாளர்களுக்கு டிஜிட்டல் தீர்வுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இருப்பினும், சந்தையில் தற்போதுள்ள தீர்வுகள் சில்லறை விற்பனையாளர்களின் அன்றாட செயல்பாடுகள் சார்ந்த தேவைகளுக்கு போதுமானதாக இல்லை அல்லது பயன்படுத்த சிக்கலான பாரம்பரிய மென்பொருள் சேவையாக இருக்கின்றன,” என்று ஜக்யாவின் முதன்மை தூதர் ஜெயகோபா தெரனிகல் கூறியுள்ளார்.
"இந்த இடைவெளிக்கு தீர்வு காணும் ஜக்யா, வேகமாக செயல்படுத்தக்கூடிய, சிறிய வர்த்தகங்கள் தொழில்நுட்பதை எளிதாக அணுகக் கூடிய சேவையாக அமைகிறது’ என அவர் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலம் தவிர, இந்த செயலி தமிழ், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், வங்காளம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட பத்து மொழிகளில் இயங்குகிறது. முன்னதாக இந்த மாத துவக்கத்தில் ஜக்யா, இந்தியாவில் பிஒ.எஸ் மென்பொருள் ஏற்பு தொடர்பாக அறிவதற்காக ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது.
சில்லறை, மொத்த விற்பனை, சேவை பிரிவைச் சேர்ந்த 1040 சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் மத்தியில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
தற்போது கைகளால் பில்களை கையாள்பவர்களில் 95 சதவீதம் பேர், 2029 வாக்கில் நவீன டிஜிட்டல் பி.ஒ.எஸ் சேவைக்கு மாற விரும்புவதாக தெரிய வந்துள்ளது. எளிதான பயன்பாடு, செலவு சிக்கனம், நவீன பில்லிங் வசதி ஆகியவற்றை இந்த வர்த்தகங்கள் எதிர்பார்க்கின்றன.
ஜக்யா சேவை மூலம் வர்த்தகங்கள், கையிருப்பு, விற்பனை போன்றவை குறித்த விரிவான அறிக்கைகள் மூலம் விற்பனை நிலையை செயல்பாடுகள் குறித்த ஆழமான புரிதலை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் அணுகி பொருட்களை வாங்கும் வகையில் பிரத்யேக செயலிகளையும் உருவாக்கிக் கொள்ளலாம். டெலிவரி மற்றும் கடையில் வாங்கும் வசதியையும் அளிக்கலாம்.
பைன் லேப்ஸ், ரேஸர்பே, போன்பே உள்ளிட்ட முக்கிய பண பரிவர்த்தனை சேவைகள் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கடைக்கார்கள், வாடிக்கையாளர்கள் என இருத்தரப்பினருக்கும் இது பயனுள்ளதாக அமையும்.
ஆப்டர்ஷிப் மற்றும் ஈஸிபோஸ்ட் ஆகிய சேவைகள் மூலம் ஆர்டர்களை நிறைவேற்றும் வசதியும் அளிக்கப்படுகிறது. மேலும், மூன்றாம் தரப்பு சேவைகளையும் இதில் ஒருங்கிணைக்கலாம்.
Edited by Induja Raghunathan