Zomato-வின் 10 நிமிட டெலிவரி திட்டத்திற்கு சிக்கல்: விளக்கம் கேட்ட சென்னை மாநகர காவல்துறை!
10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும் என ஜொமேட்டோ நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், டெலிவரி பார்ட்டனர்களின் சாலை பாதுகாப்பு குறித்து தெளிவுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும் என ஜொமேட்டோ நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், டெலிவரி பார்ட்டனர்களின் சாலை பாதுகாப்பு குறித்து தெளிவுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
குருகிராமைச் சேர்ந்த ஆன்லைன் உணவு டெலிவரி ஜாம்பவான் நிறுவனமான ஜொமேட்டோ, விரைவில் 10 நிமிட டெலிவரி சேவையை அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த 22ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
ஜொமேட்டோ இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ., தீபிந்தர் கோயல், தனது ட்விட்டர் பக்கத்தில்,
“விரைவு டெலிவரி வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, டெலிவரி பங்குதாரர்கள் மீது உணவை வேகமாக வழங்க எந்தவித அழுத்தமும் அளிக்க மாட்டோம். தாமதமான டெலிவரிக்காக தண்டிக்கவும் மாட்டோம்,” என்று தெரிவித்திருந்தார்.
தீபிந்தரின் இந்த அறிவிப்பு சோசியல் மீடியாக்களில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்தியாவில் பெங்களூரு, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறித்து நன்றாக அறிந்திருந்தும் ஜொமேட்டோ நிறுவனம் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது எப்படி சாத்தியமாகும் என கேள்விகள் எழுந்தன.
ஜொமேட்டோ நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றி வரும் டெலிவரி பார்ட்டனர்கள் கசக்கிப் பிழியப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. குறைந்த ஊதியம், பணி நிரந்தரம் கிடையாது, உயிருக்கு ஆபத்தான பணிச்சூழலால், அதிகமான இலக்கு என ஏற்கனவே ஊழியர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டு ஜொமேட்டோ நிறுவனம் சிக்கலில் சிக்கியது.
நாடு முழுவதும் ஜொமோட்டோ நிறுவனத்தின் 10 நிமிட டெலிவரி குறித்த அறிவிப்பு சர்ச்சையை கிளப்பிய நிலையில், அந்நிறுவனம் தனது டெலிவரி பணியாளர்களின் சாலைப் பாதுகாப்பு குறித்து தெளிவுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
“10 நிமிட டெலிவரி திட்டம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஜொமேட்டோ நிறுவனத்திடம் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் உரிய விளக்கம் கேட்டுள்ளது.”
10 நிமிட டெலிவரி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால், பணியாளர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து டெலிவரிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும், உடனடி டெலிவரி பாதுகாப்பற்றது மற்றும் தேவையற்றது என்றும் கடும் விமர்சனங்கள் ஜொமோட்டோ நிறுவனம் மீது முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.