'காஷா கி ஆஷா': பாண்டிச்சேரியில் பெண்களுக்காக பெண்களால் ஒரு கலை முயற்சி!
பாண்டிச்சேரி என்றதுமே அழகிய கூட்டு கட்டிடங்கள், தேவாலயங்கள், விட்டுப்போன பிரெஞ்சு கலாச்சாரத்தை நினைவூட்டும் சிற்பங்கள் காலனிகள், வீதிகள், என்று இருப்பது ஒரு புறம் இருந்தாலும், பெண் தொழில்முனைவர்களுக்காக சிறந்த வழியும் பாண்டிச்சேரி அமைத்து தருவது மற்றொரு புறம் இருப்பதுண்டு.
நியூயார்க் நகரத்தில் பிறந்து வளர்ந்தார் பிரெஞ்சு-அமெரிக்க வாசியான 'காஷா வண்டே'. தன்னுடைய குழந்தை பருவத்தை வயலின் பயிற்சியிலும், பழைய செங்கல் வீட்டை பெற்றோர்களுடன் சேர்ந்து கட்டுவதிலும், ஆடு மேய்ப்பதிலும், குதிரை சவாரியிலும் என்று குதூகலமாக கழித்திருக்கிறார். "எங்கள் வீட்டிலிருக்கும் மர அடுப்புக்கு அருகிலிருந்த மரவீட்டில் தான் என்னுடைய நேரத்தை அதிகம் செலவழித்தேன். ஏதாவது ஒரு புத்தகத்தின் துணையோடு அங்கே நேரத்தை கழிப்பது என்னுடைய வாடிக்கையாக அப்போது இருந்தது. ஒரு சிறந்த புத்தகம் உடன் இருந்தால், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பது என்னுடைய ஆழமான எண்ணமும் கூட. நான் ஒரு நாடோடி பிரியையாக மாறிய தருணமும் அது தான். சற்று பெரியவளானதும், அருகில் இருக்கும் ஏரியில் படகோட்டி என்னுடைய நேரத்தை கழித்திருந்தேன்" என்று தன்னுடைய நினைவுகளை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார் காஷா.
பின், நியூ ஒர்லியன்ஸ் மாகணத்திலிருக்கும் டுலனே பல்கலைக்கழகத்தில் முதுநிலை கட்டிடக்கலை படித்தார். தன்னுடைய அப்பாவை போல, கட்டிடத்துறையில் காலூன்ற இருந்த ஆர்வம், இவரை ஒரு கட்டுமான பணியிடத்தில் பயிற்சி எடுத்துக்கொள்ள அமர்த்தியது. ஒரே பெண்ணாக அந்த பயிற்சியில் இருந்த இவருக்கு கட்டிடங்கள் என்பது ஒரே விதமான சுலபமான செயல்கள் என்பதையும் உணர்ந்தார்.
அந்த துவக்கம்
தன்னுடைய கணவருக்கு பாண்டிச்சேரி லிசீ ஃபிரான்சிஸ் என்ற இடத்தில் பிரெஞ்ச் கற்றுத்தருவதற்கு வாய்ப்பமைந்தது. இதன் காரணமாக காஷா முதன்முதலாக 1992ம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவிற்கு வருவதை பற்றி இதுவரை நினைத்துப்பார்க்காத காஷாவிற்கு இந்த பயணம் பெரும் மகிழ்ச்சியை தந்தது என்றே சொல்லலாம். "நான் முதல்முறையாக சென்னையில் இறங்கியதுமே எனக்கு இந்த இடத்தின் மீது அவ்வளவு விருப்பம் தொற்றிக்கொண்டது. வேறு இடத்தில் இருப்பதை பற்றி என்னால் யோசிக்கக்கூட முடியவில்லை. வித்தியாசமான மக்கள், நிறங்கள், கலாச்சாரம், கூட்டம் இப்படி எல்லாவற்றுமே எனக்கு சட்டென்று பிடித்துப்போனது." என்று விளக்குகிறார் காஷா.
ஆரம்பத்தில் இந்திய பொருட்களை நியூ யார்க் நகரத்திற்கு ஏற்றுமதி செய்ய துவங்கினார். அங்கிருப்பவர்களுக்கு, இத்தகைய பொருட்கள் மற்றும் ஜவுளிகள் பற்றின விழிப்புணர்வு பெருமளவில் இல்லை என்பதையும் காஷா தெரிவித்தார்.
"இதுவரை நான் எந்தவொரு கடைகளிலும் பணிபுரிந்த அனுபவம் எனக்கு இல்லை. ஒரு முறை குறிப்பிட்ட கட்டிடத்தை தாண்டிய போது தான், இங்கு ஒரு பொடிக்கை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. திடீரென்று அந்த எண்ணம் வந்திருந்தாலும், அதற்கான வேலைகளில் என்னுடைய முழு கவனத்தையும் செலுத்தினேன். அடுத்த ஆறு மாதத்தில் என்னுடைய கடை 'காஷா கி ஆஷா' கலைபொருட்கள் பொட்டிக்' இதே இடத்தில் திறக்கப்பட்டது." என்று பகிர்ந்துக்கொள்கிறார் காஷா.
இந்தியா மற்றும் பாண்டிச்சேரி போன்ற இடங்களிலிருந்து அறிய பாரம்பரியமிக்க பொருட்களை சேகரித்து விற்பதில் காஷா முதலில் செயல்பட்டார். அப்படி பல பொருட்களை சேகரிக்கும் போது அது நியாயமான விலையிலும், பெண்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களாகவும் காஷா தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், தானும் லெதர் பைகள், சில வகையான ஆபரணங்கள் செய்ய துவங்கினார். உள்ளூர் வாசிகளான சோஃபியா, எலிசா, வனஜா, சுமதி, மதிலின் போன்ற பெண்களை குழுவாக திரட்டினார் காஷா.
காஷா கி ஆஷா நிறுவிய அடுத்த இரண்டாண்டுகளில் ஒரு கஃபேவையும் நிறுவினார் காஷா. கார்டன் கஃபே என்ற வகையில் நிறுவப்பட்ட இந்த இடத்தில் ஆர்கானிக் காபி, கேக், ஐரோப்பிய வகையான உணவு வகைகள் மற்றும் சூடான தோசை என்று பல பண்டங்கள் நாவிற்கு விருந்தாக அளிக்கப்பட்டது. அமைதியாக ஒரு புத்தகத்தை மட்டும் விரும்பி நேரத்தை கழித்த காஷாவின் வெளிப்பாடாக இந்த கஃபே இருப்பது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரியின் மொத்த அழகையும் ஒரே இடத்தில் காட்டும் விதத்தில் இந்த கஃபேவை அமைத்ததாக காஷா கூறுகிறார்.
பத்தாண்டுகளுக்கு பிறகு
காஷா கி ஆஷாவை தவிர்த்து, பாண்டி ஆர்ட் எனப்படும் பொது இடங்களில் கலையம்சங்களை காண்பிக்கும் முயற்சியையும் 2013ம் ஆண்டில் துவங்கினார். இந்தியா தற்போது சந்திக்கும் பிரச்சனைகளை மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் விதமாக கலையம்சங்கள் மற்றும் நிகழ்ச்ச்சிகள் நடத்தும் முயற்சியே இந்த பாண்டி ஆர்ட். இதற்கான தகுந்த ஆதரவு, உள்ளூர் மக்களிடமிருந்து அதிகளவில் தனக்கு கிடைப்பதாகவும், "நான் ஆரம்பத்திலேயே சரியான இடத்தை தான் சேர்ந்திருக்கிறேன்." என்று நெகிழ்ச்சியோடு காஷா கூறுகிறார்.
"ஆரம்பத்திலிருந்து இப்போது வரைக்கும் எனக்கு அதே விதமான சவால்கள் இருந்துக்கொண்டே இருக்கின்றது. வருடத்திற்கு 4 அல்லது 5 மாதங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மட்டுமே பயணிகள் அதிகமாக வருகின்றனர். அதனால், வியாபாரம் என்ற விதத்தில் பார்க்கும் போது அது ஒரு மிகப்பெரிய சவாலாக இருப்பதுண்டு. அதுமட்டுமல்லாமல், ஐரோப்பிய பயணிகள், இந்திய பயணிகள் என்ற மாறுதலும் இங்கு நிச்சயமாக இருப்பதுண்டு. இருப்பினும், நாங்கள் புது விஷயங்களை கற்றுக்கொள்வதிலும், அழகான பொருட்களை சேகரித்து பார்வைக்கு வைப்பதிலும், பலவகையான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதாலும், எங்கள் வெற்றிப்பாதை சரியான திசையை நோக்கி செல்கிறது." என்று பகிர்ந்துக்கொள்கிறார் காஷா.
காஷா கி ஆஷா நிறுவி பத்தாண்டுகள் நிறைவடைந்தாலும், இன்றும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வருவதும், நட்போடு தொடர்ந்து இருக்கவும் செய்கின்றனர்.
"என்னுடைய ஊழியர்களுக்கு காஷா கி ஆஷா தங்களுடையது என்ற எண்ணம் அதிகமாக இருப்பதால், புன்னகையோடு எல்லோரிடமும் அன்பாக இருப்பதை என்னால் காணமுடிகிறது. வரும் வாடிக்கையாளர்களும் எங்களுடன் அன்பாகவும், தாராளமாகவும் இருப்பதை உணர்கின்றனர். இந்த அளவில்லாத மனதார மகிழ்ச்சியே காஷா கி ஆஷாவை தொடர்ந்து நிலைக்க செய்கிறது."
இணையதளத்திற்கு Kasha Ki Aasha