1000 படுக்கைவசதி; ரூ.230 கோடி - கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் என்னென்ன சிறப்புகள்?
சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்துள்ளார். அதன் சிறப்பம்சங்கள் என்ன, என்னென்ன மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...
சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ’கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்துள்ளார்.
அதன் சிறப்பம்சங்கள் என்ன, என்னென்ன மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...
தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழாவை ஓராண்டிற்கு சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிண்டியில் கட்டப்பட்ட கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
முதலில் இந்த மருத்துவமனையானது ஜூன் 5ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த தேதியில் குடியரசுத் தலைவர் செர்பியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்ததால் மருத்துவமனை திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனையை ஜூன் 15-ம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால், குடியரசுத் தலைவர் வருகை குறித்து எவ்வித அறிவிப்பையும் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிடாததையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனையை திறந்துவைத்தார்.
கட்டுமானப் பணிகள்:
கடந்த 2021-ம்ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளன்று, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், புதிதாக பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தினமும் 1000 பணியாளர்கள் 3 பிளாக்குகளைக் கொண்ட மருத்துவமனையை கட்டி முடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கிட்டத்தட்ட 5.53 லட்சம் சதுர அடியில் ஆறு மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையின் கட்டுமானம் 15 மாதங்களில் நிறைவடைந்துள்ளது.
3 பிரம்மாண்ட கட்டிடங்கள்:
'ஏ' பிளாக் ரூ.78 கோடியில் 16,736 சதுர மீட்டர் பரப்பளவில் நிர்வாக கட்டிடம் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுகளுடன் இயங்கும். 'பி' பிளாக் ரூ.78 கோடியில் 18,725 சதுர மீட்டர் பரப்பளவில் அறுவை சிகிச்சை பிரிவு இயங்கும். 'சி' பிளாக் 15,968 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.74 கோடியில் கதிரியக்க நோய்க்கான பிரிவு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று பிளாக்குகளில் ஒரு கட்டிடத்தில் வெளிநோயாளர் சிகிச்சை வசதி, நிர்வாகப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு பிளாக்குகளில் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை, எக்ஸ்ரே, ஸ்கேன் பிரிவுகள் மற்றும் உள்நோயாளிகளுக்கான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தளத்திலும் பல்வேறு சூப்பர் ஸ்பெஷாலிட்டி துறைகள் மற்றும் ஆபரேஷன் தியேட்டர்ள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் ஆய்வகம், ரத்த வங்கி மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
6 தளங்களில் என்னென்ன வசதி?
கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை சுமார் ஆயிரம் படுக்கைகளுடன், அதிநவீன வசதிகளுடன் கூடிய தரைத்தளம் மற்றும் 6 மாடிகளைக் கொண்டுள்ளது.
இந்த தளங்களில் இதயம், மூளை நரம்பியல், சிறுநீரகம், குடல், ரத்த நாளங்கள், புற்றுநோய், இரைப்பை என முக்கிய உறுப்புகளுக்கான தனித்தனி ஆய்வகம், பரிசோதனை நிலையங்கள், அறுவை சிகிச்சை மையம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
23 துறைகளின் கீழ் சிகிச்சை:
மருத்துவமனையில் சிறுநீரகவியல் , இருதயவியல் , கதிரியக்கவியல் , நரம்பியல் , நுண்ணுயிரியல் , மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை, அவரச சிகிச்சை, பல்வேறு ஆய்வகம் என்று மொத்தம் 20 உயர் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைக்கு இயக்குநர், இரண்டு உதவி நிலைய மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 757 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Ganga Vilas River Cruise - இந்தியாவின் உலகின் நீளமான சொகுசு நதிக் கப்பலின் சிறப்பம்சம், கட்டணம் பற்றி இதோ!