Ganga Vilas River Cruise - இந்தியாவின் உலகின் நீளமான சொகுசு நதிக் கப்பலின் சிறப்பம்சம், கட்டணம் பற்றி இதோ!
வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக திப்ருகர் வரை பயணிக்கக்கூடிய உலகின் மிக நீளமான நதிக் கப்பலான 'கங்கா விலாஸ்' பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 13ம் தேதி அன்று கொடியசைத்து தொடங்கிவைத்துள்ளார். இந்த கப்பலின் சிறப்பம்சங்கள் என்னென்ன?, பயண விவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்...
வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக திப்ருகர் வரை பயணிக்கக்கூடிய உலகின் மிக நீளமான நதிக் கப்பலான 'கங்கா விலாஸ்' பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 13ம் தேதி அன்று கொடியசைத்து தொடங்கிவைத்துள்ளார்.
நீண்ட கப்பல் பயணம் ‘கங்கா விலாஸ்’
இந்த கப்பலின் சிறப்பம்சங்கள் என்னென்ன? பயண விவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்...
வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிக் கப்பல்-எம்வி கங்கா விலாஸை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், டென்ட் சிட்டியையும் திறந்து வைத்தார். மேலும், ரூ.1000 கோடி ரூபாய் மதிப்பிலான உள்நாட்டு நீர்வழித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எம்வி கங்கா விலாஸ் கப்பல்:
எம்வி கங்கா விலாஸ் (MV Ganga Vilas) உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் இருந்து தனது பயணத்தை இன்று தொடங்கியுள்ளது. 51 நாட்களில் 3,200 கிமீ பயணம் செய்து, இந்தியா மற்றும் பங்களாதேசில் உள்ள 27 நதி அமைப்புகளைக் கடந்து அசாமில் உள்ள திப்ருகரை அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி,
“இந்தியாவில் நீர்வழிப் பாதைகளை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான வளர்ச்சி செயல்முறை குறித்துக் குறிப்பிட்டார். வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கு வலுவான இணைப்பு அவசியம். இந்தியாவின் நதி நீர் ஆற்றலுக்கும், நாட்டின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கும் புதிய உயரங்களைத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது, அனைத்து பயணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்,” எனக்கூறினார்.
இந்தியா மற்றும் பங்காளதேசின் கலை, கலாச்சாரம், வரலாறு மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றில் ஈடுபடுவதற்கும், அனுபவமிக்க பயணத்தைத் தொடங்குவதற்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தப் பயணம் வாய்ப்பளிக்கும். நதிக் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்தும் பிரதமரின் முயற்சி, இந்தச் சேவை தொடங்கப்பட்டதன் மூலம், நதிக்கப்பல் பயணங்களின் மிகப் பெரிய சாத்தியக்கூறுகளுடன், இந்திய சுற்றுலாத்துறைக்கு புதுயுகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிவர் குரூஸ் கப்பலின் சிறப்பம்சங்கள்:
- உலகிலேயே மிகவும் நீளமான எம்வி கங்கா விலாஸ் கப்பலில் மொத்தம் மூன்று தளங்கள் உள்ளன. 18 சொகுசு அறைகள், 36 சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதியுடன், அனைத்து ஆடம்பர வசதிகளும் உள்ளன. முதல் பயணத்தில் சுவிட்சர்லாந்தில் இருந்து 32 சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்துள்ளனர்.
- உலகின் மிக நீளமான நதி கப்பலான எம்வி கங்கா விலாஸ், இந்தியாவில் கட்டப்பட்ட முதல் பயணக் கப்பலாகும்.
- வாரணாசியில் இருந்து பயணத்தைத் தொடங்கியுள்ள கப்பலானது, காசிபூர், பக்சர் மற்றும் பாட்னா வழியாக கொல்கத்தாவை அடைந்து, அங்கிருந்து பங்களாதேஷை அடைய உள்ளது. பங்களாதேஷ் நாட்டு நதிகளில் பதினைந்து நாட்கள் பயணித்து குவஹாத்தி வழியாக மீண்டும் இந்தியாவின் திப்ருகரை அடையும் உள்ளது.
- ‘கங்கா விலாஸ்’ கப்பல் இந்தியாவின் இரண்டு பெரிய நதிகளான கங்கை மற்றும் பிரம்மபுத்திரா மீது பயணிக்கிறது.
- கப்பலில் இசை, கலாச்சார நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி கூடம், ஸ்பா மற்றும் திறந்தவெளி கண்காணிப்பு தளம் போன்ற பல வசதிகள் இருக்கும் எனத் தெரிகிறது.
எம்வி கங்கா விலாஸ் கப்பல், நாட்டின் சிறந்தவற்றை உலகுக்குக் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய தளங்கள், தேசிய பூங்காக்கள், நதி தொடர்ச்சி மலை, பீகாரில் உள்ள பாட்னா, ஜார்கண்டில் உள்ள சாஹிப்கஞ்ச், மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, பங்களாதேஷின் டாக்கா, அசாமில் உள்ள கவுகாத்தி போன்ற முக்கிய நகரங்கள் உட்பட 50 சுற்றுலா தலங்களுக்கு 51 நாட்கள் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
- சொகுசு கப்பலில் ஒரு நாளைக்கு பயணிக்க நபருக்கு ரூ.25 ஆயிரமும், 51 நாள் பயணத்துக்கு ஒரு பயணிக்கு ரூ.20 லட்சமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
- 62 மீட்டர் நீளமும், 12 மீட்டர் நீளமும் கொண்டது. 1.4 மீட்டர் வரைவு கொண்ட 12 மீட்டர் நீளமுள்ளது. இதில், 39 பணியாளர்கள் பயணிக்கின்றனர்.
- ஆற்றில் மாசு ஏற்படாமல் இருக்க கப்பலில் ஆர்ஓ பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பயணத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட மாட்டாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சுவிஸ் நிறுவனம் மார்ச் 2024 வரை முன்பதிவு செய்திருப்பதால், ஏப்ரல் 2024 முதல் இந்தக் கப்பல் பொதுப்பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.