பிறரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி மகிழ்வித்து மகிழும் 'தி6.இன்'
அடுத்தவரின் சந்தோஷத்தின் சாவியாக விளங்கும் ஒரு புதிய நிறுவனம்!
இன்றிருக்கும் இயந்திரத்தனமான வாழ்க்கையில் நம்மில் எத்தனை பேருக்கு, நம்மை சுற்றி இருப்பவரை மகிழ்ச்சியாக வைத்திருத்தல் அத்யாவசியம் என்று தோன்றுகிறது? நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்களை அவர்களது சுபதினத்தன்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சியில் திளைக்க வைக்க நாம் முற்படுவோமா? பிறந்தநாள், திருமணநாள், மற்றும் சில முக்கிய தருணங்களில் நம் அன்பானவர்க்கு பரிசுகள் வழங்குவதோடு புதுவித இன்ப அதிர்ச்சியை அளித்தால் எப்படி இருக்கும்?
இது போன்ற பொன்னான தருணத்தை வித்தியாகமாக கொண்டாட உதவ துவக்கப்பட்டுள்ள நிறுவனம் "தி 6.இன்" (THE6.IN). தருணங்களுக்கு ஏற்ப மற்றவர்களை ஆச்சர்யப்படுத்தவும், சந்தோஷத்தில் ஆழ்த்தவும் தி6.இன் குழு, பிரத்யேக ஐடியாக்களை உருவாக்குகின்றனர். கிடார் கலைஞர்களை வரவழைத்தல், புதுமையான குழு நடனங்களில் ஈடுபடுத்துதல், சொகுசு காரில் பயணம் , நடுக்கடல் வரை கப்பலில் செல்லும் ஒரு இனிமையான அனுபவம் ஏற்படுத்துதல் போன்றவற்றை கட்டண சேவை அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார்கள். தமிழ் யுவர்ஸ்டோரி தி6.இன் நிறுவனர்களுடன் நடத்திய உரையாடல்...
தி6.இன் தொடங்கிய கதை
தி6.இன், இரண்டு பொறியியல் பட்டதாரி நண்பர்கள் ராதகிருஷ்ணன் மற்றும் சக்திவேல் யோசனையில் உருவானது. அடுத்தவரின் சந்தோஷமே இவர்களின் மகிழ்ச்சியாதலால் இந்நிறுவன்ம் தொடக்கும் முன்பே இவர்கள் இந்த வேலையை முழுமூச்சாக செய்து வந்தனர். ராதகிருஷ்ணன், சுமார் எட்டு வருடங்களுக்கு மேலாக விற்பனை மற்றும் வியாபாரத்துறையில் அனுபவம் மிக்கவர். சக்திவேல் பதிமூன்று வருடத்துக்கு மேலாக இயந்தரவியலில் திறன்பட்டு செயலாற்றி வந்தார்.
"எங்களது இந்த எண்ணமானது ஒரு நாளில் துவங்கிவிடவில்லை. சிறுவயது முதல், பள்ளி, கல்லூரி நாட்களில் அடுத்தவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதில் நாங்கள் தனித்து விளங்கினோம். ஒரு முறை எங்கள் நண்பர்கள் மத்தியில் ஒருவர் அவரது மனதுக்கு பிடித்த பெண்ணிடம் தன் காதலை வெளிபடுத்த நாங்கள் விநோதமாக ஒரு காலிபிளவரை பூங்கொத்து போல வடிவமைத்து பிரத்யேக குழு நடனம் ஒன்றையும் வடிவமைத்து அவர் காதலை தெரியப்படுத்த உதவினோம். ஆனால் பின்நாளில் இதுவே எங்களது முழுநேர வேலையாக மாறும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை" என்கிறார் இந்த நிறுவனத்தின் இணை நிறுவனரான சக்திவேல்
எண்ணம் முதல் செயல்பாடு வரை
எதற்குமே ஒரு துவக்கம் வேண்டும் என்பது போல் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் துவங்க காரணமாக ஒரு முன்கதை சுருக்கம் உள்ளது. ஒரு முறை தம் நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு இவர்களால் நினைத்ததுபோல் அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தமுடியவில்லை. இது பற்றி மேலும் சிந்தித்து கொண்டிருந்த வேளையில், இப்படி ஒரு நிறுவனத்தை துவக்கலாம் என்ற எண்ணம் இந்த நண்பர்களுக்கு தோன்றியிருக்கிறது.
இந்த நிறுவனத்தைத் துவக்கும் முன்பு இருவருமே இயந்திரத்தனமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். "ஆச்சர்யப்படுத்து, மனதை ஈர்த்துவிடு, வெளிபடுத்து", என்ற தாரகமந்திரத்தின் அடிப்படையை கொண்டு தி6.இன் பெயரை சூட்டி 2009 ல் இவர்கள் இந்நிறுவனத்தை துவக்கினர்.
“நாங்கள் இருவருமே நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால், முழுநேர பணியாக ஒரு தொழில்முயற்சி நிறுவனத்தை தொடங்க குடும்பத்தினரிடமிருந்து அனுமதி வாங்குவதே பெரும் பிரயத்தனமாக இருந்தது. நாங்கள் முதல் தலைமுறை தொழில்முனைவர்கள் என்பதால் எங்களுக்கு வணிக திட்டங்கள் பற்றி ஒன்றுமே தெரியாது. எங்கள் ஆற்றலையே நம்பி, திறனை முதலாக போட்டு உழைக்க ஆரம்பித்து, இன்று சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் எங்களது சேவையை துவக்கி உள்ளோம். மேலும் இப்போது 3 முழுநேர ஊழியர்களும், 5 பகுதிநேர ஊழியர்களும், 45 தனித்து இயங்கும் ஊழியர்களும் எங்களிடம் செயல்பட்டு வருகின்றனர்” என்று கூறுகின்றனர்.
எல்லா தருணங்களுக்கேற்றார் போலவும் தி 6.இன் விசேஷமான சிந்தனைகளை கருத்தில் வைத்து செயல்படுகிறது. தனிப்பயனாக்கப்பட்ட பரிசுப்பொருட்கள் தொடங்கி அனைவரையும் ஈடுபடுத்தும் விதமாக குழு நடனங்கள் அமைத்தல் வரை இவர்களின் சிறப்பம்சங்கள் நீள்கிறது. மேலும் சமீபத்தில், காதலை வெளிப்படுத்த விரும்புகின்ற பல இளைஞர்கள் பல்வேறு வித்யாசமான முறைகளை செய்து பார்க்க நினைப்பதால் இவர்களின் சேவையை நாடுகின்றனர். அண்மையில் வித்தியாசமாக இவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்வைப் பற்றி ராதாகிருஷ்ணன் கூறுகையில், "காதலியிடம் காதலன் ஹெலிகாப்டரில் சென்று காதலை வெளிபடுத்த ஏற்பாடு செய்தோம். அதை பார்த்த காதலியின் கண்கள் கலங்கி ஆச்சர்யத்தில் திளைத்தது, இது எங்களை மேலும் பூரிப்படைய செய்து மேலும் மேலும் புதுவித யுக்திகளை முயற்சிக்க ஊக்கப்படுத்தியது" என்கிறார்.
அனைத்து இடங்களிலும் தேவைக்கேற்ப சந்தோஷங்களை அடுத்தவர்களுக்கு அளிப்பதில் வல்லுனர்களாக தி 6.இன் விளங்குகிறார்கள். “முன்பெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு எங்களை பற்றி நாங்கள் கூற வேண்டியிருந்தது. இப்போது அவர்களே எங்களுக்கு நிறைய புதுப்புது எண்ணங்களை பரிந்துரைக்கின்றனர். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கு இதுவே சான்று”, என்று இணைந்து கூறுகின்றனர்.
தற்போதைய நிலை
பரிசாக்க சந்தையின் இன்றைய நிலை இந்தியாவில் சுமார் 7 பில்லியன் டாலரை எட்டியுள்ளது என்று புள்ளி விவரம் கூறுகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்குள் மட்டுமே பரிசுப்பொருள் மற்றும் அன்பளிப்புகளில் செலவு செய்தல் இரட்டிப்பாக ஆகியுள்ளது என்று கூறலாம். இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகத்தின் ஆதிக்கம் காரணமாக நமக்கு விருப்பமுள்ளவரை சந்தோஷப்படுத்துவது, வெளியிலுள்ள பன்மடங்கு மக்களுக்கு தெரியவருகிறது என்பதாலும் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கக் கூடும்.
இவர்களை பொறுத்தமட்டிலும் இவர்களது வாடிக்கையாளர்களே இவர்களது நற்செய்தியாளர்கள். இம்மாதிரியான நிறுவனங்களுக்கு வாய் வழி விளம்பரம் மட்டுமே ஆதாரமாக உள்ளது. வரையறையற்ற இலக்குகளை நோக்கி ஒவ்வொரு வாடிக்கையாளரையும் இவர்கள் அணுகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
மேக் எ விஷ் பிரச்சாரம்
இதுவரை 2000 வாடிக்கையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ள இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், இப்போது வர்த்தகத்தில் கோலோச்சி, சீரான வேகத்தில் நடை போட்டு வருகிறது. இப்போது இவர்களது கவனம் நிராகரிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளின் மீதும் திரும்பியுள்ளது.
“சமீபத்தில் சென்னை அடையாரில் உள்ள குழந்தைகளுக்கான புற்று நோய் மையத்தில், எங்களது இந்த #மேக் எ விஷ் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு, அவர்களது ஆசை என்ன என்பதை தெரிந்து கொண்டு அவர்களின் உற்சாகத்தில் பங்கெடுத்துக்கொண்டோம். இந்த சிறுவர்களின் கள்ளம் கபடமற்ற சிரிப்பில் எங்களையே தொலைத்தோம் என்றே கூறவேண்டும். இனிமேலும் ஒவ்வொரு மாதமும் இவர்களது சிரிப்பில் பங்கெடுப்போம்” என்று சக்திவேல் குறிப்பிடுகிறார்.
ஒருபோதும் எடுத்த வேலையை முடிக்காமல் திரும்பக்கூடாது என்பதையே தாரக மந்திரமாக கருதி வந்துள்ளது எங்கள் நிறுவனம். அடுத்தவரின் சந்தோஷமே எங்களது உண்மையான சன்மானமாக நாங்கள் கருதுகிறோம். ஒரு செய்கையை செய்வதன் மூலம் நன்மை கிட்டும் பட்சத்தில் அதை எந்நிலையிலும் துணிந்து செய்து விடவேண்டும் என்பதையே நாங்கள் கொள்கையாக வைத்து மகிழ்வித்து மகிழ்கிறோம்” என்று பெருமை கொள்கின்றனர் இவ்விருவரும்.
இணையதள முகவரி: The6.in