சிறிய தொடக்கம்; பல கோடி ரூபாய் வர்த்தகம்: 4 இந்திய ஊதுபத்தி பிராண்ட் கதைகள்!
தொழில் முயற்சியை சிறியளவில் தொடங்கி படிப்படியாக வளர்ச்சியடைந்து பல கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ள 4 இந்திய ஊதுபர்த்தி பிராண்டுகளின் தொகுப்பு இது.
இந்தியாவில் ஆன்மீகத்திலும் கடவுள் வழிபாடுகளிலும் ஈட்படுவோர் எண்ணிக்கை அதிகம். இதனால் அகர்பத்தி, தூபம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களின் தேவையும் இந்தியாவில் அதிகம்.
உலகளவில் முன்னணி ஊதுபத்தி தயாரிப்பாளர்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.
இந்தியாவிலிருந்து 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஊதுபத்திகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்கா, யூகே, மலேசியா, நைஜீரியா போன்ற நாடுகள் முக்கிய சந்தைகளாக உள்ளன.
ஊதுபத்தி தயாரிப்பிற்கான பெரும்பாலான மூலப்பொருட்கள் உள்நாட்டிலேயே கிடைக்கின்றன. தயாரிப்பு செலவும் குறைவு. இதனால், பல தொழில்முனைவோர் இந்தப் பிரிவில் சிறியளவில் தொழில் முயற்சியைத் தொடங்கி பல கோடி மதிப்புள்ள நிறுவனங்களாக வளர்ச்சியடையச் செய்துள்ளனர்.
அப்படிப்பட்ட சில நிறுவனங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்:
Cycle Pure
என்.ரங்கா ராவின் குடும்பத்தில் பலர் ஆசிரியர்களாகவும் புரோகிதர்களாகவும் இருந்தனர். ரங்காவிற்கு எட்டு வயதிருந்தபோதே அவரது அப்பா உயிரிழந்துவிட்டார். இதனால் இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்புகளை சுமக்கவேண்டிய சூழல். கிடைத்த சிறு வேலைகளை செய்து சம்பாதித்து வந்தார். பதின்ம வயதில் ஸ்டோர் சூப்பர்வைசர் வேலை கிடைத்ததால் குன்னூர் சென்றார்.
“என் தாத்தாவிற்கு எப்போதும் தொழில்முனைவில் ஆர்வம் அதிகம். குன்னூர் சென்று சில காலம் வேலை செய்தபோது, மைசூருவிற்குத் திரும்பி குடும்பத்தின் பாரம்பரியத்தைப் பின்பற்றும் வகையில் ஊதுபத்தி வணிகத்தில் ஈடுபடலாம் என்று நினைத்தார்,” என்கிறார் மூன்றாம் தலைமுறை தொழில்முனைவரான அர்ஜுன் ரங்கா. இவர் என் ஆர் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக செயல்படுகிறார்.
ரங்கா ராவ் தனது பாட்டியின் உதவியுடன் வீட்டிலேயே ஊதுபத்தி தயாரித்தார். ஆரம்பத்தில் ’மைசூரு பிராடக்ட்ஸ் அண்ட் ஜெனரல் ட்ரேடிங் கம்பெனி’ எனப் பெயரிடப்பட்டு பின்னர் NR Group என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அவர் தினமும் சந்தைக்குச் சென்று மூலப்பொருட்களை வாங்கி வந்து, தயாரித்து, விற்பனை செய்தார். அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மறுநாள் உற்பத்தி நடக்கும். மீதமிருந்த தொகையை குடும்பத் தேவைகளுக்கு செலவிட்டார்.
“இந்தியாவில் வணிகத்தை வெற்றிகரமாக நடத்த ஒரு பிராண்ட் அவசியம் என்பதை உணர்ந்த என் தாத்தா ‘சைக்கிள் அகர்பத்தி’ தொடங்கி வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்,” என்கிறார் அர்ஜுன்.
1948ம் ஆண்டு ரங்கா ராவ் அனைத்து விதமான போராட்டங்களையும் கடந்து மைசூருவில் தொழிற்சாலை ஒன்றை அமைத்தார். இன்று என்.ஆர் குழுமத்தின் டர்ன்ஓவர் 1,700 கோடி ரூபாய். 75 நாடுகளில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் 1,000 கோடி ரூபாய் மதிப்புடைய 12 பில்லியன் அகர்பத்திகளை கடந்த ஆண்டு விற்பனை செய்துள்ளது.
MDPH
பிரகாஷ் அகர்வால் சேல்ஸ் அசிஸ்டெண்டாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். வேலையை விட்டுவிட்டு தொழில் முயற்சியில் ஈடுபட்டார். சோப்பு, டிடர்ஜெண்ட், கூந்தல் எண்ணெய் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார். ஆனால், இந்தத் தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை.
இந்தத் தொடர் தோல்வியை சகித்துக்கொள்ள முடியாத பிரகாஷின் அம்மா ஜவுளிக் கடையில் நிரந்தர வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், பிரகாஷ் சொந்த தொழிலில் மட்டுமே ஈடுபடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
1992ம் ஆண்டு திடீரென்று ஒரு நாள் பிரகாஷிடம் பேசிய அவரது அம்மா தயாரிப்பு முயற்சியைக் கைவிட்டு ஊதுபத்தி விநியோகஸ்தராக களமிறங்கலாம் என்கிற யோசனையை முன்வைத்துள்ளார்.
தயாரிப்பாளராக வெற்றியடைய முடியாது என்று அவரது அம்மா கூறியதைக் கேட்டதும் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ளத் தீர்மானித்தார் பிரகாஷ். அதேசமயம் ஊதுபத்தி பிரிவில் செயல்படுவது சிறந்த யோசனையாகவே அவர் மனதில் பட்டது. 90-களில் ஊதுபத்திகளுக்கு இந்திய சந்தையில் அதிகளவில் தேவை காணப்பட்டது.
”என் அப்பாவிடம் மூலதனம் எதுவுமில்லை. 1992ம் ஆண்டு உறவினர்கள் சிலரிடம் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கி Mysore Deep Perfumery House - MDPH என்கிற பெயரில் ஊதுபத்தி தயாரிக்கத் தொடங்கினார். ‘பூரப் பஷ்சிம் உத்தர் தக்ஷின்’ என்கிற பிராண்ட் தொடங்கப்பட்டது. இவரது தம்பிகள் ஷியாம், ராஜ்குமார் இருவரும் இந்த வணிகத்தில் இணைந்து கொண்டார்கள்,” என்று பிரகாஷ் அகர்வாலின் மகன் அன்கித் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்த சகோதரர்கள் இந்தூரில் இருந்த தங்கள் வீட்டின் சிறிய கேரேஜில் இருந்து ஊதுபத்தி தயாரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இவர்களது அம்மா தயாரிப்புப் பணிகளை மேற்பார்வையிட்டார்.
பிராண்டிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வண்ணமயமான பேக்கேஜிங் செய்யப்பட்ட புதிய பெயரில் புதிய பிராண்ட் ஒன்றை அறிமுகப்படுத்த விரும்பினார் பிரகாஷ். இதன் விளைவாக 2000-ம் ஆண்டு MDPH தாய் நிறுவனத்தின்கீழ் Zed Black என்கிற பிராண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த பிராண்ட் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்று துரிதமாக வளர்ச்சியடையும் ஊதுபத்தி பிராண்டாக உருவெடுத்தது.
இன்று இந்நிறுவனம் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊதுபத்திகளை பிராசஸ் செய்கிறது. இந்தியாவில் Zed Black ஊதுபத்திகள் தினமும் 15 லட்சம் சில்லறை வர்த்தக பாக்கெட்டுகள் வரை விற்பனை செய்யப்படுகின்றன. 2021 நிதியாண்டின் டர்ன்ஓவர் 650 கோடி ரூபாய்.
Hari Darshan
இந்தியாவில் கடவுளை வழிபடுபவர்களின் வீட்டில் நறுமணங்களைக் கமழச் செய்கிறது ஹரி தர்ஷன் ஊதுபத்திகள்.
ஊதுபத்தி, தூபம், அரோமாதெரபி போன்றவற்றைப் பொருத்தவரை இது மிகவும் பழமை வாய்ந்த பிராண்ட்.
1800-களில் இந்தக் குடும்பத்தினர் மூலிகைகள் மற்றும் நறுமண எசென்ஷியல் ஆயில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், 1947ம் ஆண்டு இந்தியப் பிரிவினையின்போது வணிகம் தடைபட்டது.
பின்னர், 1970-ம் ஆண்டு டெல்லியின் சதார் பஜாரில் Hari Darshan தொடங்கப்பட்டது.
”எங்கள் தூபம் மற்றும் ஊதுபத்தி தயாரிப்புகளைப் பயன்படுத்தி வழிபடும் மக்கள் எங்களை நினைவில் கொள்கின்றனர்,” என்கிறார் நான்காம் தலைமுறை தொழில்முனைவர் மற்றும் Hari Darshan Sevashram Pvt Ltd நிர்வாக இயக்குநர் கோல்டி நாகதேவ்.
தற்சமயம் இந்திய சந்தையில் இந்த பிராண்ட் ஆண்டிற்கு 300 கோடி ரூபாய் மதிப்புடைய ஊதுபத்தியைத் தயாரித்து பங்களித்து வருகிறது.
“மக்கள் அதிக நம்பிக்கையுடன் எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். நாங்கள் தரத்தில் சற்றும் சமரசம் செய்துகொள்வதில்லை. இதுவே எங்களை நிலைநிறுத்திக்கொள்ள உதவுகிறது. எங்கள் மொத்த தயாரிப்பின் அளவைக் கணக்கிட்டுக் கூறுவது கடினம் என்றாலும்கூட தினமும் 35-40 ட்ரக் மூலம் 70-75 வகையான தயாரிப்புகளை அனுப்பி வருகிறோம்,” என்கிறார் கோல்டி.
Chamundi Agarbatti
காந்திலால் பர்மரின் சகோதரர் ஏராளமான ஊதுபத்தி தயாரிப்பாளர்களுக்கு பேக்கேஜிங்கில் பிரிண்ட் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தார். 2003-ம் ஆண்டு இந்த சகோதரர்கள் இருவரும் ஊதுபத்தி தயாரிப்பிற்கான மூலப்பொருட்களை ட்ரேடிங் செய்ய ஆரம்பித்தனர்.
“ஊதுபத்தி தயாரிப்பிற்குத் தேவைப்படும் பர்ஃப்யூம், பேக்கேஜிங் பொருட்கள் போன்றவற்றை ட்ரேடிங் செய்தோம். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் வரை இதே வேலையைத் தொடர்ந்தோம். அதன் பின்னரே சொந்தமாக தொழிற்சாலை திறக்க திட்டமிட்டோம்,” என்கிறார் காந்திலால்.
2009ம் ஆண்டு சொந்த சேமிப்பையும் சொத்து மீது வாங்கப்பட்ட கடன் தொகையையும் கொண்டு 15 லட்ச ரூபாய் முதலீட்டில் 1,200 சதுர அடியில் ஊதுபர்த்தி தொழிற்சாலையைத் தொடங்கியுள்ளனர்.
”சந்தையில் தொடர்பு இருந்தபோதும் ஆரம்பத்தில் ஆர்டர்கள் பெறுவது கஷ்டமாக இருந்தது. ஓராண்டு கால கடின போராட்டத்திற்குப் பிறகு நல்ல வரவேற்புக் கிடைத்தது,” என்று காந்திலால் குறிப்பிட்டார்.
படிப்படியாக வளர்ச்சியடைந்த இந்நிறுவனம், 2012-ம் ஆண்டு 320 விநியோகஸ்தர்கள் நெட்வொர்க்குடன் விரிவடைந்தது. இந்த அபார வரவேற்பைக் கண்டு 8,000 சதுர அடியில் மற்றொரு தொழிற்சாலையை அமைக்க காந்திலால் முடிவு செய்தார்.
2012ம் ஆண்டு எம்எஸ்எம்ஈ திட்டத்தின்கீழ் Chamundi Agarbatti பதிவு செய்தார். மூன்றாண்டுகளில் இந்த பிராண்ட் முன்னணி ஊதுபத்தி தயாரிப்பாளர்களில் ஒருவராக வளர்ச்சியடைந்தது. 2020 நிதியாண்டில் இந்நிறுவனத்தின் டர்ன் ஓவர் 20 கோடி ரூபாய்.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா