Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

உங்கள் ‘வாழ்க்கையின் 5 பந்துகள்’ பத்திரமா? - முன்னாள் சி.இ.ஓ-வின் ‘வைரல்’ அட்வைஸ்

‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்றில்லாமல் ‘இப்படித்தான் வாழ வேண்டும்’ என மகத்தானவர்கள் பலரும் உதிர்த்துள்ள அறிவுரைகளில், ‘வாழ்க்கையின் 5 பந்துகள்’ எனும் சிற்றுரை, மிக எளிதாகவும் சுவைபடவும் நமக்கு வாழ்க்கையைச் சொல்லித் தருவதுதான் இதன் ஹைலைட்.

உங்கள் ‘வாழ்க்கையின் 5 பந்துகள்’ பத்திரமா? - முன்னாள் சி.இ.ஓ-வின் ‘வைரல்’ அட்வைஸ்

Sunday September 18, 2022 , 3 min Read

கோக-கோலா நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ பிரையன் டைசன் ஆற்றிய உரை ஒன்றின் ‘வாழ்க்கையின் 5 பந்துகள்’ என்ற பகுதி மீண்டும் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருவதை கவனிக்க முடிகிறது.

‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்றில்லாமல் ‘இப்படித்தான் வாழ வேண்டும்’ என மகத்தானவர்கள் பலரும் உதிர்த்துள்ள அறிவுரைகளில், ‘வாழ்க்கையின் 5 பந்துகள்’ எனும் சிற்றுரை, மிக எளிதாகவும் சுவைபடவும் நமக்கு வாழ்க்கையைச் சொல்லித் தருவதுதான் இதன் ஹைலைட்.

இந்த வைரல் சிற்றுரை நெட்டிசன்களை வெகுவாக வசீகரித்துள்ள நிலையில், அது வெவ்வேறு பிரபலங்களின் பெயரிலும் வலம் வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, ‘கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பேசியது’ என இந்த ‘வாழ்க்கையின் 5 பந்துகள்’ சிற்றுரை பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.

உண்மையில், 1986 முதல் 1991 வரை கோக-கோலா நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்த பிரையன் டைசன், 1991 செப்டம்பர் 6-ம் தேதி ஜார்ஜியா டெக் நிறுவனத்தில் பேசிய மிகச் சிறிய உரைதான் அது. உருவக பாணியிலான அந்த வாழ்க்கைத் தத்துவம் மக்களை வெகுவாக ஈர்த்ததன் விளைவாகவே இப்படி வேறு வேறு பெயர்களில் பகிரப்பட்டு வருகிறது.

life balls

உங்கள் ‘வாழ்க்கையின் 5 பந்துகள்’

சரி, பில்டப் இருக்கட்டும். வெறும் 30 நொடிகளே நீடிக்கும் அந்த சிற்றுரையின் முக்கிய அம்சம் இதுதான்:

“வாழ்க்கை என்பதை காற்றில் ஐந்து பந்துகளை தட்டிவிட்டபடி ஆடும் ஒரு விளையாட்டாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்தப் பந்துகளுக்கு வேலை, குடும்பம், ஆரோக்கியம், நண்பர்கள் மற்றும் உத்வேகம் என பெயர் சூட்டுங்கள். ஒரே நேரத்தில் அந்த ஐந்து பந்துகளையும் நீங்கள் காற்றில் தட்டிவிட்டு விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் கையிலுள்ள பந்துகளில் ஒன்று ‘ரப்பர் பால்’. அதை வேலை என்று புரிந்துகொள்ளலாம். அந்தப் பந்து கீழே தவறி விழுந்தாலும் பவுன்ஸ் ஆகி மீண்டும் கையின் வசமாகிவிடும். ஆனால், மற்ற பந்துகளான குடும்பம், ஆரோக்கியம், நண்பர்கள் மற்றும் உத்வேகம் ஆகிய ஐந்தும் கண்ணாடிப் பந்துகள். அவற்றில் ஏதாவது ஒன்றைத் தவறவிட்டால், அது மீளமுடியாமல் சிதறிவிடலாம், கீறல் விழலாம், சேதமடையலாம் அல்லது முற்றிலும் சிதைந்துவிடலாம். அந்தப் பந்து முன்பு போல இருக்காது. ஆக, வாழ்க்கையில் பேலன்ஸ் செய்வதை நீங்கள் நிச்சயம் உணர்ந்து செயல்பட வேண்டும்” - பிரையன் டைசன்

வேலை - ஏன் ரப்பர் பால்?

நாம் செய்யும் வேலை, தொழிலை ரப்பர் பால் என்கிறார் பிரையன் டைசன். இதைப் புரிந்துகொள்வதும் எளிது. ‘ஒரு வேலை போய்விட்டால், இன்னொரு வேலை’ என்று சொல்லிவிடலாம். அதேபோல், தொழிலில் நஷ்டம் என்பது நிலையானது அல்ல. மிகத் தீவிரமாகவும், சிறப்பாகவும் செயலாற்றினால் நஷ்டத்தில் இருந்து மீண்டுவிட முடியும். அதனால்தான், வேலையையும் தொழிலையும் ரப்பர் பால் உடன் உருவக்கப்படுத்துகிறார் பிரையன்.

மற்ற 4 பந்துகள் ஏன் முக்கியம்?

குடும்பம்: நம் குடும்பம் ஒரு கண்ணாடிப் பந்து. அதை மிகவும் ஜாக்கிரதையுடன் அணுக வேண்டும். குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டால், அது மனரீதியாக நம்மைத் தாக்கும். அந்தத் தாக்குதலின் விளைவாக, அந்தத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாதவர்களுக்கு வேலையிலும் தொழிலிலும் சரியாக ஈடுபட முடியாமல் போய்விடும். வாழ்க்கையில் மீள்வது கடினமாகவிடும். எனவே, நாம் வேலையைத் தாண்டி குடும்பத்துக்கு முதன்மை முக்கியத்துவம் தரவேண்டியது அவசியம்.

ஆரோக்கியம்: துடிப்பான இளமைக் காலத்தில் மற்ற அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்திவிட்டு, நம் உடல் ஆரோக்கியம் மீது அக்கறை கொள்ளாது செயல்பாட்டால், அது பிற்காலத்தில் பெரும் துயரைத் தரும். ஆரோக்கியத்தைப் பேணாமல் போய்விட்டால், என்னதான் பொருளையும் புகழையும் ஈட்டியிருந்தாலும் செயல்பட முடியாமல் வாழ்க்கையில் முடங்கிப்போகும் அபாயம் உண்டு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நண்பர்கள்: நமக்கு மகிழ்ச்சி அளிப்பதில் மட்டுமல்ல, நம் துயரங்களைக் களைவதற்கும் நட்பின் துணை தேவை. கொரோனா காலத்தில் நம்மில் பலரும் கையறு நிலையில் இருந்தபோது, நமக்கு உறுதுணையாக இருந்தது நண்பர்கள்தானே. அதேபோல், நண்பர்களுக்கு உறுதுணையாக இருந்ததும் நாம்தானே. நட்பும் ஒரு கண்ணாடிப் பந்துதான். நட்பை வளர்ப்பதும் பேணுவதும் குடும்பத்தையும் ஆரோக்கியத்தையும் பேணுவதற்கு ஈடானது என்பதும் உண்மை.

உத்வேகம்: வாழ்க்கையில் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் இழந்துவிட்டால் எதன்மீதும் பிடிப்பு இல்லாமல், மற்ற அனைத்துப் பந்துகளும் ஒவ்வொன்றாக நம் கையை விட்டு நழுவிவிடும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

வாழ்க்கையின் 5 பந்துகள் உடன் பிரையன் நிறுத்திக்கொள்ளவில்லை. அவர் தன் பேரனுபவத்தின் மூலம் மேலும் சில விஷயங்களையும் நமக்குச் சொல்கிறார். அது:

“வாய்ப்புகள் மிகுந்தவண்ணம் இருக்கும் வரலாற்றின் வியத்தகு உலகத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த உலகில் உங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு மிகவும் முக்கியமானதுதான் கல்வி. நீங்கள் கல்வியில் சிறந்து விளங்கியிருக்கிறீர்கள் என்றால், உங்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்.

கல்வி என்றால் என்ன?

கல்வி என்பது அறிவைப் பெறுவதா அல்லது முக்கியத்துவம் பெறுவதா? உங்களுடைய பதிலில் எந்த வித்தியாசத்தை உணர்வீர்கள்? அறிவு என்பது ஒரு கருவி போன்றதே.

”அர்ஜெண்டினா என்றாலும் சரி, சிங்கப்பூர் என்றாலும் சரி, உங்களது டிகிரி ஒன்றுதான். அந்தப் படிப்பை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில்தான் வித்தியாசம் உள்ளது. கல்வி என்பது வாழ்வாதாரத்துக்காகவா அல்லது வாழ்க்கைக்கா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்,” என்றார் பிரையன்.

சரி, பிரையனின் வாழ்வனுபக் குறிப்புகளை நாம் எப்படி உள்வாங்கலாம்?

சிம்பிள். வேலை முக்கியம்தான். தொழில் முக்கியம்தான். அந்த ஒற்றைப் பந்துக்காக, அதுவும் கீழே விழுந்தாலும் நம்மிடம் திரும்பி அப்படியே வரக் கூடிய ரப்பர் பந்துக்காக அதிக நேரம் செலவிடாமல், கொஞ்சம் அசந்தாலும் அம்பேலாகக் கூடிய நம் குடும்பம், நண்பர்கள், ஆரோக்கியம், உத்வேகம் ஆகிய மற்ற 5 வாழ்க்கைப் பந்துகளுக்காக கூடுதல் நேரத்தைப் பயனுள்ளதாக செலவிடுவோம். வாழ்வோம்!