கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ள 9 வயது சிறுவன்!
கடினமாக பயிற்சிகள் மேற்கொண்டு ஆப்ரிக்காவின் உயரமான மலையான கிளிமாஞ்சாரோ மலையைச் சென்றடைந்துள்ளார் ஒன்பது வயது அத்வைத் பார்தியா.
பெரும்பாலான குழந்தைகள் விளையாட்டு, படிப்பு என்றிருக்கும் வயதில் ஒன்பது வயது சிறுவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார். புனேவைச் அத்வைத் பார்தியா சமீபத்தில் கிளிமாஞ்சாரோ மலையில் ஏறியுள்ளார்.
தான்சானியாவில் உள்ள இந்த மலை அடிவார முகாமில் இருந்து 4,900 மீட்டர் தொலைவிலும் கடல் மட்டத்தில் இருந்து 5,885 மீட்டர் உயரத்திலும் உள்ளது. இது ஆப்ரிக்காவிலேயே மிக உயரமான மலையாகும். அத்வைத் ஏழு நாட்களில் மலையில் ஏறியுள்ளார். இவரது பயணம் ஜூலை மாதம் 31-ம் தேதி முடிவடைந்துள்ளது.
அத்வைத் இரண்டு மாதங்கள் தீவிரமாக பயிற்சி செய்த பிறகு ஜூலை 31, 2019 அன்று மலை உச்சியை சென்றடைந்ததாக இந்தியா டுடே தெரிவிக்கிறது. பிடிஐ உடனான உரையாடலில் அவர் கூறும்போது,
“இந்த மலையேற்றம் கடினமாக இருந்தபோதும் வேடிக்கையாகவும் இருந்தது. நான் எவரெஸ்ட் அடிவார முகாமை சென்றடைந்தபோது நாங்கள் மர வீடுகளில் வசித்தோம். ஆனால் கிளிமாஞ்சாரோ மலையேற்றத்தின்போது கூடாரத்தில் வசித்தோம். பனி படர்ந்த அந்தச் சூழல் அருமையான அனுபவமாக அமைந்தது,” என்றார்.
ஒரு மணி நேர நீச்சல் பயிற்சி, இதயம் மற்றும் ரத்த நாளங்களுக்கு பயிற்சியளிக்கும் விதமாக கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடுவது என அத்வை அன்றாடம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். அத்துடன் ராணுவத்தில் தடைகளைக் கடந்து செல்வதற்கு அளிக்கப்படும் பயிற்சிகளையும் 100 மாடிகள் ஏறும் பயிற்சியிலும் ஈடுபட்டார்.
மலையேற்ற பயணத்திற்கு எடுத்துக்கொண்ட நேரம் குறித்து என்டிடிவி உடனான உரையாடலில் அவர் கூறும்போது,
“நான் மலையேற்றத்தை விரைவாக முடித்திருப்பேன். ஆனால் மலைகள் மிகவும் அழகாக காட்சியளித்தது. அத்தகைய அழகை ரசிப்பதற்காக இடையிடையே நேரம் ஒதுக்கினேன்,” என்றார்.
மலையேற்றம் என்பது எளிதாக செயல் அல்ல. 21 முதல் 25 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பநிலையில் மலையேற்றம் மேற்கொண்டபோது இந்த ஒன்பது வயது சிறுவனுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. சிம்பம் டோட்டோ (குட்டி சிம்பா) என்றழைக்கப்படும் அத்வைத் பயணத் தலைவர் சமீர் பாதத்தின் மேற்பார்வையில் மலையேற்றம்ன் மேற்கொண்டார்.
இந்த மலையேற்றத்தின்போது அத்வைதின் அம்மா பாயலும் உடன் இருந்தார். எனினும் அதிக உயரத்திற்கு அவரால் ஈடுகொடுக்க முடியாமல் போன காரணத்தால் தனது பயணத்தை 1,000 அடி குறைத்துக் கொண்டார்.
பாயல் தனது மகனின் வெற்றி குறித்து பேசும்போது,
“அத்வைத் இந்த மலையேற்றத்தை முடிப்பதில் காட்டிய அர்ப்பணிப்பை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். பயணத்தின் இறுதி நாள் அத்வைத் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். போர்டர்கள், கூடாரம் அமைத்தவர்கள், சமையல் குழுவினர் போன்றோரின் பங்களிப்பிற்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக்கொண்டார்,” என்றார்.
ஆறு வயதில் எவரெஸ்ட் அடிவார முகாமைச் சென்றடைந்த அத்வைதின் பயணம் தொடர உள்ளது. ஐரோப்பாவின் உயர்ந்த மலையான எல்பிரஸ் மலையில் ஏறவேண்டும் என்பதை புதிய இலக்காக நிர்ணயித்துள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA