100 ஏக்கர் தரிசு நிலத்தை பசுமைக் காடாக மாற்றியுள்ள ஆர்வலர்!
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வமுள்ள வருண் ரவீந்திரா கார்ப்பரேட் பணியை விட்டு விலகி ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைத்து 100 ஏக்கர் தரிசு நிலத்தை பசுமை காடாக மாற்றியுள்ளார்.
கார்ப்பரேட் பணியை விட்டு விலகி ஆர்வமுள்ள ஒரு பகுதியில் செயல்பட ஆரம்பிப்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. மன உறுதியும் நேர்மறையான சிந்தனையும் அவசியம். வருண் ரவீந்திராவிற்கு இந்த குணாதிசயங்கள் அதிகமாகவே இருந்தன.
கார்ப்பரேட் துறையில் வேலை பார்த்து வந்த வருணிற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம் அதிகம் இருந்தது.
வருணின் அப்பா இயற்கை ஆர்வலர். விலங்குகள் மீது பரிவு காட்டுபவர். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வருண் அக்கறை காட்ட இவர்தான் முக்கியக் காரணம். வருணின் அப்பா இயற்கை வேளாண் நடைமுறைகளில் ஈடுபடத் தொடங்கினார். 2009-ம் ஆண்டு வருண் தனது குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தில் வேலையை ஆரம்பித்தார்.
“சுற்றுச்சூழலை பாதுகாக்கவேண்டும்; பல வகையான உயிரினங்களுக்கு வாழ்விடத்தை உருவாக்கிக் கொடுக்கவேண்டும்; புவி வெப்பமயமாதலின் தீவிரத்தை மட்டுப்படுத்தவேண்டும்; இவையே எப்போதும் என் கனவாக இருந்து வருகிறது,” என்கிறார் வருண்.
வருண் அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும் அங்குள்ள மரங்கள் வெட்டி சாய்க்கப்படுவதையும் கவனித்தார். இதற்கானத் தீர்வை யோசித்தார். நிலப்பகுதியை சிறு பகுதிகளாக்கி காடு வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களிடம் ஒப்படைப்பது பலனளிக்கும் என்கிற யோசனை அவருக்குத் தோன்றியது. காடுகளை மீட்டெடுக்க இதுவே சரியான வழி என்கிற முடிவிற்கு வந்தார்.
இந்த யோசனையுடன் 2016-ம் ஆண்டு Vanantara தொடங்கினார். கர்நாடக-தமிழக எல்லைப் பகுதியில் 100 ஏக்கர் நிலத்தை வாங்கினார். தற்போது இங்கு 40,000-க்கும் மேற்பட்ட, 250 வகையான மரங்கள் இருக்கின்றன.
தரிசு நிலத்தை செழிப்பாக்கினார்
“நாம் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தால் போதாது. நாம் இயற்கையின் ஒரு பகுதி என்பதை உணரவேண்டும். இயற்கையையும் நம்மையும் நாம் வேறுபடுத்திப் பார்த்ததன் விளைவைதான் நான் இன்று சந்தித்துக்கொண்டிருக்கிறோம்,” என்கிறார் வருண்.
இந்தப் பாதையை தேர்வு செய்ய பலர் விரும்பினாலும் அவர்களது பரபரப்பான நகர வாழ்க்கை அதற்கு அனுமதிப்பதில்லை என்பதை வருண் புரிந்துகொண்டார். எனவே அவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் அதேசமயம் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளையும் மட்டுப்படுத்தும் வகையில் தீர்வை உருவாக்கினார்.
வருண் தனது குழுவினருடன் இணைந்து முதலில் நிலத்தில் மரங்கள் வளர்க்கும் முயற்சியைத் தொடங்கினார். ஒத்த சிந்தனையுடைவர்களின் பங்களிப்பு வரவேற்கப்பட்டது. அனைவரும் ஒன்று சேர்ந்து Vanantara முயற்சியை பெரியளவில் கொண்டு சென்றனர். இது ஒரு கூட்டுமுயற்சி என்றும் தனிநபரால் இது சாத்தியமாகாது என்றும் வருண் தெரிவிக்கிறார்.
சுற்றுச்சூழல் மேம்பாடு
மண் வளத்தை மீட்டெடுப்பதும் பல்லுயிர் வாழ்விற்கு உகந்த சூழலை உருவாக்கித் தருவதுமே Vanantara முக்கிய செயல்பாடாகும். எத்தனையோ ஆண்டுகளாக ரசாயனங்கள் நிறைந்த உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டு வருவதால் மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளது.
உரம் தயாரிப்பு, மண்புழு உரம், ஜீவாம்ருதம் உள்ளிட்ட பயோ உள்ளீடுகள் தயாரிப்பு, நுண்ணுயிரிகளை மண்ணுக்குள் செலுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை Vanantara மேற்கொள்கின்றன.
Vanantara-வில் இருக்கும் கால்நடைகள் பால் கறப்பதற்காகவோ இறைச்சிக்காகவோ வளர்க்கப்படுவதில்லை. அங்குள்ள நிலங்களில் மேய்ந்தாவாறே களைகளை அகற்றுகின்றன. நிலத்திற்கு உரத்தையும் கொடுக்கின்றன.
40,000-க்கும் மேற்பட்ட மரங்களை வளர்க்க முறையான நீர் விநியோகம் அவசியம். இதற்காக பல கிலோமீட்டர் தூரத்திற்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.
“மியாவாகி காடு வளர்ப்பில் பங்களிப்பதற்காக சமூக உறுப்பினர்கள் பலருக்கு அழைப்பு விடுத்தோம். இந்த காட்டில் உள்ள சில குறிப்பிட்ட மரங்கள் இன்று 18 அடி வரை வளர்ந்துள்ளன. பறவை ஆய்வியல் நிபுணர்களையும் ஊர்வன மற்றும் நிலம், நீர் இரண்டிலும் வாழக்கூடிய விலங்குகள் துறை சார்ந்த நிபுணர்களையும் அழைத்து வந்து பார்வையிடச் செய்கிறோம்,” என்கிறார் வருண்.
வருண் மற்றும் அவரது குழுவினர் கடந்த நான்காண்டுகளில் வழக்கமான காடு வளர்ப்பு முறையில் Vanantara-வில் 40,000 மரங்களை வளர்த்துள்ளனர். இதுதவிர பெங்களூரு முழுவதும் மியாவாகி காடுகளில் 40,000 மரங்களை நட்டுள்ளனர்.
”புவி வெப்பமயமாதலைக் குறைக்கும் முயற்சியில் நாங்கள் கணிசமான அளவு பங்களித்துள்ளோம். இதுதவிர பல்லுயிர் வாழ்வதற்கு உகந்த சூழலையும் இந்தக் காடுகள் உருவாக்கிக் கொடுத்துள்ளன. மேலும், நிலத்தடி நீர் ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ளது; அந்தப் பகுதியில் காற்று சுத்தமாகியுள்ளது; காடுகளால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது,” என்கிறார்.
வாழ்வாதாரம்
Vanantara எத்தனையோ உள்ளூர் விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இவர்கள் பருவக் காலத்தில் தங்கள் நிலங்களில் விளைச்சலை கவனித்துக் கொள்ளலாம். மற்ற நேரங்களில் இவர்களுக்கான வாழ்வாதாரத்தை Vanantara ஏற்படுத்திக் கொடுக்கிறது.
பூமியைக் காப்பத்தில் பங்களிக்கும் வகையில் கார்ப்பரேட் மற்றும் ஸ்டார்ட் அப்’களில் பணிபுரியும் ஏராளமானோர் இந்த முயற்சியில் இணைந்துள்ளதாக வருண் தெரிவிக்கிறார். மரம் வளர்ப்பு ஒருபுறமும் சமூகத்தை மேலும் விரிவடையச் செய்யும் முயற்சி மற்றொருபுறம் என வருண் மற்றும அவரது குழுவினர் மும்முரமாக இயங்கி வருகின்றனர்.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா