ஏரிகளில் உள்ள கழிவுகளை தினமும் அகற்றும் போலியோ பாதிக்கப்பட்ட முதியவர்!
கால்கள் முடங்கிப்போன நிலையிலும் தினமும் ஏரியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி வருகிறார் 69 வயதான ராஜப்பன்.
ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் இன்றைய நவீன வாழ்க்கை முறையில் தவிர்க்கமுடியாத அங்கமாக மாறியதுடன் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கின்றன். இதனால் சாலைகள் போன்ற நிலப்பரப்புகள் மட்டுமின்றி நீர்நிலைகளும் மாசுபடுகின்றன.
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிரம் காட்டி வந்தாலும் பிளாஸ்டிக்கினால் தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகின்றன.
69 வயதான என்.எஸ் ராஜப்பன் என்பவர் தனது வீட்டிற்கு அருகே உள்ள ஏரியில் கொட்டப்படும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றி வருகிறார்.
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜப்பன் நாட்டுப் படகு ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தினமும் வேம்பநாட் ஏரியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கக் கிளம்புகிறார்.
“இதில் எனக்கு பெரிதாக வருமானம் ஒன்றும் கிடைக்காது. படகு முழுக்க பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரித்தாலும் ஒரு கிலோவிற்கு குறைவாகவே இருக்கும். ஒரு கிலோ பிளாஸ்டிக்கிற்கு 12 ரூபாய் கிடைக்கும். ஆனால் யாரோ ஒருவர் நீர்நிலைகளில் இருந்து கழிவுகளை அகற்றித்தானே ஆகவேண்டும். நான் இந்தப் பகுதியில்தான் என் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து வருகிறேன். என்னால் இயன்றதை செய்கிறேன். அவ்வளவுதான்,” என்று ராஜப்பன் ‘தி நியூஸ் மினிட்’ இடம் தெரிவித்துள்ளார்.
ராஜப்பனுக்கு இளம் வயதிலேயே போலியோ பாதிப்பு ஏற்பட்டு கால்கள் முடங்கிப்போனது. இதனால் கிடைத்த சிறு வேலைகளைச் செய்து வந்தார். இவர் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஏரியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வருகிறார். சாலைகளில் செல்வதைக் காட்டிலும் படகை செலுத்துவது எளிதாக இருப்பதாகக் கருதுகிறார்.
“எனக்கு ஏற்கெனவே படகை செலுத்தத் தெரியும். நான் சொந்தமாக பெரிய படகு வாங்க விரும்புகிறேன். அப்படிச் செய்தால் அதிக நேரம் செலவிட்டு அதிக பிளாஸ்டிக் கழிவுகளை என்னால் சேகரிக்கமுடியும்,” என்று ‘தி பெட்டர் இந்தியா’-விடம் அவர் தெரிவித்துள்ளார்.
இவர் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்ததும் அவற்றை வகைப்படுத்தி வைக்கிறார். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உள்ளூர் ஏஜென்சி வந்து இவரிடம் பெற்றுக்கொள்கிறது.
கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் ஏரிகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் அளவும் குறைந்துள்ளது. கோவிட்-19 காரணமாக ராஜப்பனின் வருவாய் பாதிக்கப்பட்டாலும் ஏரிகள் சுத்தமாக இருப்பது அவருக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA