முற்றிலும் பெண் விமானிகள் குழு இயக்கிய நெடுந்தூர ஏர் இந்தியா விமானம்!

By MalaiArasu|12th Jan 2021
பெண் விமானிகளால் இயக்கப்பட்ட விமானம்!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

’அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு?’ என்ற கூறிய காலம் மலையேறிவிட்டது. இன்று பெண்கள் தனியாக மலையேறும் அளவுக்கு தங்கள் சொந்த முயற்சியில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். அவர்களைக் கட்டிப்போட நினைத்தவர்களுக்கு எதிராக தட்டி எழுந்து, இருக்கும் அனைத்து துறைகளிலும் கோலோச்சி முன்னேறி வருகின்றனர்.


ஆண்களுக்கு நிகராக, சொல்லப்போனால் ஆண்களைவிட ஒருபடி மேலாகவே, ஆண்கள் கோலோச்சும் துறையில் அவர்களுக்கே சவால் விடுகின்றனர். வானைத்தொடும் சாதனை அரசிகள் வானில் பறந்து, புது வரலாறு ஒன்றை படைத்துள்ளனர்.


முழுக்க முழுக்க பெண் விமானிகளைக் கொண்டு, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் நேற்று உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டது. இது வடதுருவத்தின் மேலே சென்று, அட்லாண்டிக் பாதையில் பயணித்து, உலகின் மற்றொரு முனையான கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு வந்து அடைகிறது.

விமானி
சான் பிரான்சிஸ்கோவிற்கும், பெங்களூருக்கும் இடையிலான வான்வழி தூரம் உலகின் மிக நீளமான ஒன்றாகும். ஏர் இந்தியாவின் ஏஐ176 விமானம்தான், உலகின் மிக நீண்ட வணிக விமானம். இந்த பாதையில் மொத்த விமான நேரம், குறிப்பிட்ட நாளில் காற்றின் வேகத்தை பொறுத்து 17 மணி நேரத்துக்கும் மேலாக இருக்கும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இரண்டு எதிர் எதிர் முனையில் உள்ள சான்பிரான்சிஸ்கோ, பெங்களூரு நகரங்கள் இடையேயான தூரம் என்பது மொத்தம் 13 ஆயிரத்து 993 கி.மீ. ஆகும்.

மேலும், முழுமையாக பெண்களைக் கொண்ட விமானி அறையில், கேப்டன் சோயா அகர்வால், கேப்டன் பாபகரி தன்மாய், கேப்டன் அகன்ஷா சோனாவேர், கேப்டன் சிவானி மன்ஹாஸ் ஆகியோர் இருந்து, இந்த வரலாற்று தொடக்க விமானத்தை இயக்குவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி ஏர் இந்தியா விடுத்துள்ள அறிக்கையில், கேப்டன் சோயா அகர்வால் 8 ஆயிரம் மணி நேரத்துக்கும் அதிகமாக பறந்த அனுபவமும், பி-777 விமானத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கட்டளை அனுபவமும் கொண்ட திறமையான விமானி எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏர் இந்தியாவின் பெண் சக்தி உலகம் முழுவதும் உயரமாகப் பறக்கிறது. பெங்களூரு-சான் பிரான்சிஸ்கோ இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்க விமானத்தை கேப்டன் சோயா அகர்வால், கேப்டன் பாபகரி தன்மாய், கேப்டன் அகன்ஷா சோனாவேர் மற்றும் கேப்டன் சிவானி மன்ஹாஸ் ஆகியோரைக் கொண்ட அனைத்துப் பெண்கள் காக்பிட் குழுவினரும் இயக்குவார்கள்," என பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.