அம்மா உடன் ஸ்கூட்டரில் ஆன்மீகப் பயணம்: தாய்பாசத்தைப் பாராட்டி ஆனந்த் மஹிந்திரா அறிவித்த பரிசு!
தாயின் ஆசையை நிறைவேற்ற ஸ்கூட்டரில் நாடு முழுவதும் ஆன்மீக சுற்றுலா சென்ற மகனின் பாசத்தை கண்டு வியந்த மஹிந்திரா. பதிலுக்கு அவர் அளித்திருக்கும் பரிசு என்ன தெரியுமா?
நாம் அன்றாடம் கடந்து செல்லும் பல கசப்பான சம்பவங்கள் மனிதர்கள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும். சொல்லப்போனால் மனிதர்களே இல்லாத உலகிற்கு சென்று விடலாம் என்று வாழ்க்கையில் ஒரு சமயமேனும் நினைக்காதவர்களே இருக்க மாட்டார்கள். எனினும் அன்பு, பாசத்திற்கு தலைவணங்கும் ஒரு சில நல்ல மனித உள்ளங்களினாலேயே வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தாய்க்கொரு தலைமகன் இந்த கிருஷ்ணகுமார். மைசூரைச் சேர்ந்த 39 வயதான இவர் தனது தாய்க்காக செய்திருக்கும் செயல் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. கிருஷ்ணகுமாரின் தாயார் சூடாரத்னாவிற்கு 70 வயதாகிறது, இவரது கணவர் தட்சிணாமூர்த்தி 4 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் டீம் லீடராக பணியாற்றி வந்த கிருஷ்ணகுமார் தனது முன்னேற்றத்திலேயே கவனம் செலுத்தி வந்துள்ளார். கணவர் இறந்த பின்னர் சூடாரத்னா மைசூரில் தனிமையில் வசிந்து வந்துள்ளார்.
கிருஷ்ணகுமார் ஒரு முறை தனது அம்மாவை பார்ப்பதற்காக மைசூரு வந்த போது அவரிடம் ஆன்மீக சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் என்று தனது விருப்பத்தை கூறி இருக்கிறார் சூடாரத்னா. அதுவரை தனது தாயாரை பற்றி சிந்திக்காத கிருஷ்ணகுமார் அப்போது தான் முதன் முறையாக அம்மாவின் ஆசையை பற்றி யோசித்துப் பார்த்திருக்கிறார்.
“எங்களுடைய குடும்பம் கூட்டுக்குடும்பம் அப்பா உயிருடன் இருந்த வரை அம்மாவின் வாழ்நாள் முழுவதும் சமையலறையிலேயே கழிந்து விட்டது. வீட்டை விட்டே வெளியே வராத அவருக்கு என்னுடன் நேரம் செலவிடுவதோடு நாடு முழுவதும் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்தேன்,” என்கிறார் கிருஷ்ணகுமார்.
வாழ்வதற்கு ஏற்ற பணம் சேமித்து வைத்த பிறகு தனது பணியை ராஜினாமா செய்தவர் அம்மாவுடன் சேர்ந்து இந்தியா முழுவதும் உள்ள கோயில்களுக்கு சுற்றுலா சென்று வர திட்டம் போட்டுள்ளார். சாலை போக்குவரத்தே சிறந்தது என்று நினைத்து தன்னுடைய 20 ஆண்டு பழமையான பஜாஜ் சீட்டா ஸ்கூட்டரை இந்த யாத்திரைக்கு பயன்படுத்தியுள்ளார்.
“முதல் முறை அம்மாவுடன் பேருந்து போக்குவரத்தில் யாத்திரை சென்ற போது சில சிரமங்களைச் சந்தித்தேன் அதை தவிர்ப்பதற்காகவே 2வது யாத்திரையின் போது ஸ்கூட்டரை தேர்வு செய்தேன். அம்மா வசதியாக உட்காருவதற்காக சீட்டை மாற்றியமைத்தேன்,” என்கிறார் கிருஷ்ணகுமார்.
கிருஷ்ணகுமாரின் ஸ்கூட்டரில் பழங்கள், காய்கறிகள், தலையணை, மழை பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்ட அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 46,000 கிலோமீட்டர் மகனும் தாயும் ஸ்கூட்டரிலேயே பயணித்து இந்தியாவின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் பயணம் செய்து ஆன்மீக ஸ்தலங்களை சுற்றிப் பார்த்து வந்துள்ளனர்.
“என் அம்மாவிற்கு என்னுடன் நேரத்தை செலவிட்டது போலவும் ஆனது அவரின் ஆசையான கோவில்களுக்கு யாத்திரை செல்வது நிறைவேறிவிட்டது,” என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் கிருஷ்ணகுமார்.
கிருஷ்ணகுமார் தனது தாயுடன் ஸ்கூட்டரில் யாத்திரை செல்லும் வீடியோ வைரலானதையடுத்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் நண்பர் மனோஜ் குமார் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் “மைசூரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி கிருஷ்ணகுமார் வங்கிப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தன்னுடைய தாயாருடன் ஸ்கூட்டரில் யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். மொத்தம் 48,100 கிலோமீட்டர் ஸ்கூட்டரிலேயே எதற்காக பயணம் செய்திருக்கிறார். மைசூரைத் தாண்டாத தன்னுடைய தாயாருக்கு இந்தியாவை சுற்றிக் காட்டுவதற்காக அவர் எடுத்த முயற்சி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
நண்பரின் பதிவிற்கு பதில் பதிவிட்டுள்ள ஆனந்த் மஹந்திரா, இது ஒரு அழகான கதை என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தாய் மீதும் தாய்நாட்டின் மீதும் உள்ள அன்பின் வெளிப்பாடு. இந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு நன்றி மனோஜ். அவருடைய தொடர்பு கிடைக்கும் பட்சத்தில் கிருஷ்ணனுமாருக்கு நான் ஒரு மஹிந்திரா KUV100NXT காரை பரிசளிக்க விரும்புகிறேன். எனவே அடுத்த முறை அவர் தன்னுடைய அம்மாவை காரில் யாத்திரை அழைத்துச் செல்லாம் என்று ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளத்தில் பொறுப்புடன் செயல்பட்டு வருபவர். தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டின் முக்கியமான பிரச்னைகளில் தன்னுடைய கருத்து என்பதை உடனுக்குடன் பதிவிட்டு வருகிறார்.
இதுமட்டுமல்ல மஹிந்திரா நிறுவனத்தின் பழைய மாடல் ஆட்டோ, ஸ்கூட்டர், ஜீப் உள்ளிட்டவற்றை அக்கறையோடு ஆண்டுகள் கடந்தும் பாதுகாத்து வருபவர்கள் பற்றிய சுவாரஸ்ய செய்திகள் ஏதேனும் வந்தால் அவர்களைத் தேடிப்பிடித்து சர்ப்ரைஸாக தனது நிறுவனத்தின் காரை பரிசளித்தும் வருகிறார். என்ன இருந்தாலும் பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான்பா.
தகவல் உதவி : தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், நியூஸ் 18