மல்யுத்தத்தில் மற்றொரு பதக்கம்: வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
குவியும் வாழ்த்துக்கள்!
டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் கிடைத்துள்ளது. இந்த முறை இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பதக்கத்தை வசப்படுத்தி இருக்கிறார்.
முன்னதாக, அரையிறுதியில் தோல்வியுற்ற பஜ்ரங் புனியா இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்திருந்தார். என்றாலும் இன்று வெண்கல பதக்கத்திற்கான மல்யுத்த போட்டியில் கஜகஸ்தான் நாட்டு வீரரை எதிர்கொண்டு விளையாடினார். 65 கிலோ எடைப்பிரிவில் 8-0 என்ற கணக்கில் வெற்றியை தன் வசமாக்கிய பஜ்ரங் புனியா இறுதியில் வெண்கலப் பதக்கத்தை வென்று இந்திய கனவை நனவாக்கினார்.
பஜ்ரங் புனியா யார்?
பஜ்ரங் புனியாவுக்கு இது தான் முதல் ஒலிம்பிக். என்றாலும் இந்த தருணத்திற்காக சிறு வயதில் இருந்து உழைத்து வரும் மனிதர் பஜ்ரங் புனியா. மல்யுத்த விளையாட்டுக்கு பெயர்பெற்ற ஹரியானாதான் இவரின் பூர்வீகமும்கூட. ஹரியானாவின் ஜஜ்ஜார் என்ற சின்ன மாவட்டத்தில் பிறந்த புனியா, 7ம் வயதில் இருந்தே மல்யுத்தம் விளையாடி வருகிறார்.
புனியா மல்யுத்தத்தை தேர்வு செய்யக் காரணம், அவரின் தந்தை. ஆம், அவரின் தந்தையும் ஒரு மல்யுத்த வீரர். அவரின் ஊக்கத்தால் மல்யுத்தம் விளையாடத் தொடங்கினார் புனியா. அவர் தான் முதலில் தொடக்கக் கால பயிற்சிகளை கற்றுக்கொடுத்தும் இருக்கிறார்.
ஆரம்பத்தில் தனது கிராமத்தில் சிறிய அளவிலான போட்டிகளில் ஆடிய விளையாட்டின் மீது கொண்ட தீராக் காதலால் விரைவாகவே முன்னேறி தேசிய அளவில் கவனம் பெற தொடங்கினார்.
பெரிய கனவை நினைத்துக்கொண்டிருந்த புனியாவுக்கு பணம் தடையாக இருந்தது. அதனை சமாளித்து தான் இந்தநிலைக்கு உயர்ந்த்துள்ளார். குடும்பத்தின் ஆதரவு அவருக்கு இருந்தது. ஒருகட்டத்த்தில் தேசிய அளவிலான போட்டிகளில் ஆட வேண்டும் என்பதற்காக அவரின் மொத்தக் குடும்பமும் சோனிபட் மாறியது. இதன்பின்னர் தான் தேசிய அளவிலான போட்டிகளில் ஆடி கவனம் ஈர்த்தவர், தொடர்ந்து ஆசிய போட்டிகளில் மூலம் இந்திய பாக்சிங் தேர்வாளர்களை திரும்பி பார்க்க வைத்தார்.
2013 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம், 2013 உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் வெண்கலம், 2014 காமன்வெல்த் போட்டியில் வெள்ளி, 2014 ஆசிய போட்டிகளில் மீண்டும் வெள்ளி, 2017 ஆசிய கோப்பை போட்டியில் தங்கம், 2018 ஆசிய கோப்பை போட்டியில் தங்கம், 2018 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி, 2019ல் வெண்கலம் என மல்யுத்தத்தில் சாதனைகளை செய்த புனியா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக கடந்த சில வருடங்களாக தேசிய அளவிலான போட்டிகளில் பெரிதாக ஆடாமல் பயிற்சி எடுத்துவந்தவர் தற்போது இந்தியாவின் பதக்கக் கனவை நிறைவேற்றி இருக்கிறார்.
இருவருக்கு இது தான் முதல் ஒலிம்பிக். முதல் ஒலிம்பிக்கிலேயே பதக்கம் வென்று தனது சாதனையின் மணிமகுடமாக மாற்றி இருக்கும் பஜ்ரங் புனியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது!