சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நான்கு சகோதர-சகோதரிகள்!
உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளான க்ஷமா, மாதவி, யோகேஷ், லோகேஷ் நால்வரும் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளாக மாறி குடும்பத்தைப் பெருமைப்படுத்தியுள்ளனர்.
குழந்தைகள் சிறு வயதில் தங்களுக்குள் போட்டிப் போட்டுக்கொள்வதையும் சண்டை போட்டுக்கொள்வதையும் நாம் பார்க்கிறோம். உடன்பிறந்தவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எப்போதும் வீட்டில் சண்டைக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஆனால், இதே குழந்தைகள் வளர்ந்து பக்குவமடைந்ததும் சகோதர, சகோதரிகளிடையே பாசம் அதிகரித்துவிடும்.
இப்படிப்பட்ட பாசம் அவர்கள் வாழ்க்கையை எந்த அளவிற்கு மேம்படுத்தியிருக்கிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தை சுட்டிக்காட்டலாம்.
க்ஷமா, மாதவி, யோகேஷ், லோகேஷ் இவர்கள் நால்வரும் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள். உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் லால்கனி இவர்களது சொந்த ஊர்.
யுபிஎஸ்சி தேர்வு
2012-ம் ஆண்டில் ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்திற்காக இவர்கள் அனைவரும் சொந்த ஊரில் ஆஜராகி சந்தித்துக்கொண்டனர். வழக்கமாக உற்சாகமாக இருக்கும் க்ஷமா, மாதவி இருவரிடமும் அந்த சந்தோஷம் தென்படவில்லை. முகத்தில் ஏதோ ஒரு வாட்டம். இவர்களது சகோதரர் யோகேஷ் இதை கவனித்தார்.
இதுபற்றி சகோதரிகளிடம் கேட்டார். அவர்கள் எழுதியிருந்த யுபிஎஸ்சி சிஎஸ்இ தேர்வு முடிவுகள் அதற்கு முந்தைய தினம்தான் வெளியாகியிருந்தது. இருவருமே தேர்ச்சி பெறவில்லை. இதுதான் கவலைக்கான காரணம்.
இதைத் தெரிந்துகொண்ட யோகேஷ் சகோதரிகளுக்கு உதவ விரும்பினார். முதலில் தானே தேர்வெழுந்த முடிவு செய்தார். அந்த சமயத்தில் யோகேஷ் சாஃப்வேர் இன்ஜினியர் வேலையில் இருந்தார். அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு யுபிஎஸ்சி தேர்விற்கு தயார்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்.
2013-ம் ஆண்டு முழுவீச்சில் தேர்விற்கு தயாரான யோகேஷ் அதற்கடுத்த ஆண்டு முதல் முயற்சியிலேயே தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஐஏஎஸ் அதிகாரி ஆனார்.
இந்த தேர்விற்கு எடுத்துக்கொண்ட குறிப்புகளையும் பயிற்சியையும் சகோதரிகளுக்கு கற்றுக்கொடுத்தார். 2015ம் ஆண்டு மாதவி யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆனார். அதற்கடுத்த ஆண்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற க்ஷமா ஐபிஎஸ் அதிகாரியாகவும் லோகேஷ் ஐஏஎஸ் அதிகாரியாகவும் ஆனார்கள்.
குழந்தைகள் அரசுப் பணியில் சேரவேண்டும் என்பது இவர்களது பெற்றோரில் விருப்பம். ஆனால், இந்தப் பெற்றோர், தங்களது கனவை தங்கள் குழந்தைகள் மீது திணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் யோகேஷிற்கு யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதில் விருப்பமில்லை. எனவே, இதற்காக எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை. நொய்டாவில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலையில் சேர்ந்தார். சகோதரிகள் தேர்ச்சி பெறமுடியாமல் தவித்ததைப் பார்த்ததும் தனது லட்சியத்தை மாற்றிக்கொண்டார்.
தேர்விற்கான பாடத்திட்டம்
2011-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. அப்போதுதான் CSAT அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இது மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்ததாக யோகேஷ் கருதுகிறார்.
”தேர்வு முறையில் இதுபோன்ற மாற்றங்கள் செய்யப்படும்போது, புதிதாக தேர்வு எழுதுபவர்களுக்கு பலனளிக்கும். ஏனெனில், இதற்கு முன்பு பலமுறை எழுதியவர்களுக்கும் புதிதாக எழுதுபவர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இருக்காது. அனைவருக்குமே இந்த போட்டிக்களம் புதிதுதான். என் சகோதரிகள் இந்தப் புதிய தேர்வு முறையில் சிரமத்தை சந்தித்ததால் நானே எழுதிப்பார்க்க முடிவு செய்தேன்,” என்கிறார் யோகேஷ்.
தேர்வாணையம் இந்தப் புதிய பாடதிட்டத்தை எந்த நோக்கத்துடன் வடிவமைத்திருக்கிறது என்பதை அவர் ஆய்வு செய்து ஆழமாகப் புரிந்துகொண்டார். இந்தக் குறிப்புகளையும் நுணுக்கங்களையும் சகோதரிகளுக்கும் சகோதரருக்கும் பகிர்ந்துகொண்டார்.
யோகேஷிடம் கற்றுக்கொண்ட அவரது சகோதரியும் சகோதரரும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பெற்றோரைப் பெருமைப்படுத்தியுள்ள பிள்ளைகள்
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாதவி DC பொறுப்பிலும் லோகேஷ் DDC பொறுப்பிலும் க்ஷமா KSRP 3-வது பெட்டாலியன் கமாண்டண்ட் பொறுப்பிலும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
“எங்கள் குழந்தைகள் நால்வரும் நேர்மையானவர்கள். கடுமையாக உழைப்பவர்கள். அவர்களது விடாமுயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது,” என்கிறார் இவர்களது அம்மா கிருஷ்ணா மிஷ்ரா.
இந்த சகோதர, சகோதரிகள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு தங்கள் நிலையை மேம்படுத்திக்கொண்டதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. இவர்களைப் போன்றே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்கிற நோக்கத்தில் உறுதியாகவும் ஆர்வத்துடனும் இருப்பவர்களுக்கு பயிற்சியளிக்க Glory IAS என்கிற பயிற்சி மையத்தையும் இவர்கள் தொடங்கியிருக்கிறார்கள். இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற உதவியிருக்கிறார்கள்.
இதுதவிர இவர்களது யூட்யூப் சேனலில் குறிப்புகளைப் பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் தனிப்பட்ட பயிற்சி அவசியம் என்பதை வலியுறுத்துகிறார் யோகேஷ். பாடதிட்டத்தை சரியாகப் புரிந்துகொண்டு முறையாக பயிற்சி பெற்றால் யுபிஎஸ்சி கனவு எட்டாக்கனி அல்ல என்று இவர் நம்பிக்கையளிக்கிறார்.