அசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்!
வியாழன் அன்று ஃபின்லாந்தில் நடைப்பெற்ற உலக அண்டர் 20 சாம்ப்பியன்ஷிப் 400மீ ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ்(18). 18 மாதங்களுக்கு முன்பே தனது ஓட்ட பயணத்தை துவங்கிய இந்த இளம் பெண், தங்கம் வென்று உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அசாம், சிவசாகரை சேர்ந்த நெல் விளைவிக்கும் விவசாயி மகளான இவர், உலகளாவிய ஓட்ட பந்தய போட்டியை 51.46 வினாடியில் முடித்து இந்தியாவிற்கு முதல் தங்கம் பெற்று கொடுத்து பெருமை சேர்த்துள்ளார். ஆரம்பத்தில் மெதுவாக தனது ஓட்டத்தை துவங்கி 4வது இடத்தில் பின் தங்கிய ஹிமா, கடைசி 80மீ-ல் புயல் போல் தனது வேகத்தை கூட்டி முன்னிருந்த மூன்று பேரை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தார்.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு பேட்டி அளித்த ஹிமாவின் பயிற்சியாளர் நிப்பான் தாஸ் துவக்கத்தில் ஹிமா முதல் மூன்று இடத்தை பிடிக்காத பொது தனக்கு எந்த பதட்டமும் இல்லை என்றார்.
“கடைசி 80மீ-ல் தான் அவருடைய போட்டி தொடங்கியது. தன் பயணத்தை துவங்கி இரண்டு வருடங்கள் கூட முடியவில்லை என்றாலும் அவரது முன்னேற்றம் அவளது திறமையை காட்டியது,” என தெரிவித்தார் நிப்பான் தாஸ்.
முதலில் தோழர்களுடன் ஃபுட்பால் விளையாடத் துவங்கிய ஹிமா, பயிற்சியாளரின் அறிவுரை கேட்டு அத்லட் பயணத்தை துவங்கினார். அதன் பின்னர் ஒரு மாவட்ட சந்திப்பில்தான் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் இயக்குநரகம் பயிற்சியாளர் நிப்பான் தாஸ் பார்வையில் பட்டார் ஹிமா.
“ஓட்ட பந்தையத்திற்கு ஏற்ற ஷூ கூட அவளிடம் இல்லை இருப்பினும் போட்டிகளில் தங்கம் வென்றார். காற்றை போல் ஓடும் திறமை இவளைத் தவிர வேறு யாரிடமும் நான் பார்க்கவில்லை,” என புகழ்கிறார் நிப்பான் தாஸ்.
ஹிமாவின் திறமையை கண்ட நிப்பான் தாஸ், ஹிமா பெற்றோர்களின் அனுமதியோடு குவஹாத்திக்கு அழைத்து வந்து பயிற்சி அளித்துள்ளார். இளைய மகளை அனுப்ப ஹிமா பெற்றோர்கள் தயங்கினாலும், முடியாது என்பதை கேட்க நிப்பான் தாஸ் தயாராக இல்லை.
குஹாத்தியில் தங்கும் வசதி செய்தி கொடுத்து ஹிமாவை குத்துச்சண்டை மற்றும் கால்பந்து ஸ்டேட் அக்கடமியில் இணைத்தார். அத்லட்ஸ்-க்கு என்று தனியாக எந்த அகடமியும் இல்லை, அசாமில் ஓட்ட பந்தயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை இருப்பினும் இவரது ஆட்டத்தை கண்டு அகடமியில் இணைத்துக் கொண்டனர் என தெரிவித்தார் தாஸ்.
“நான் ஹிமாவிடம் சொல்லியது ஒன்று மட்டும் தான்; பெரிய கனவு காண வேண்டும், பிறப்பால் இது போன்ற திறமை கிடைத்திருப்பது அனைவருக்கும் கிடைக்காது,” என முடிக்கிறார் தாஸ்.
ஓட்ட பந்தயத்தில் முதல் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஹிமாவிற்கு பாராட்டுகள். பிரதமர் மோடி முதல், நடிகர் ஷாருக் கான், இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி என பலரும் ஹீமாவுக்கு பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.
தகவல் உதவி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் |தமிழ் கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்