இந்திய இ-சைக்கிள் பிரிவில் புதிய மாடல் அறிமுகம் செய்துள்ள சென்னை நிறுவனம்!
வோல்ட்ரிக்ஸ் மொபிலிட்டி அறிமுகப்படுத்தியுள்ள டிரெஸார் இ-சைக்கிள் நகர்ப்புறங்களில் அலுவலகம் செல்வோருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் இன்றைய சூழலில் பொதுமக்களின் கவனம் மின் வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பல நிறுவனங்கள் மின் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ‘வோல்ட்ரிக்ஸ் மொபிலிட்டி’ நிறுவனம் மின் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. ’டிரெஸார்’ (Tresor) என்கிற இந்த மின் சைக்கிள் நகர்ப்புற போக்குவரத்திற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வளிப்பதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுமே ‘டிரெஸார்’ இ-சைக்கிளின் முக்கிய நோக்கம்.
டிரெஸார் சிறப்பம்சங்கள்
மோட்டார்: டிரெஸார் மின் சைக்கிளில் 250 வாட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
பேட்டரி: இதிலுள்ள லித்தியம் அயன் பேட்டரி மற்ற தயாரிப்புகளிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. சார்ஜிங் மையங்களைத் தேடி அலைய வேண்டிய அவசியமிருக்காது.
திறன்: ஒரு மணி நேரத்திற்கு 25 கி.மீட்டர் வேகத்தை எட்டக்கூடிய டிரெஸார் சைக்கிளை ஒரு முறை சார்ஜ் செய்தால் 60-80 கி.மீட்டர் தூரம் வரை செல்ல முடியும்.
இயக்கம்: ஐந்து நிலைகள் கொண்ட பெடல், த்ராட்டில் (பைக்கில் இருப்பது போன்ற வசதி), கால்களால் மிதித்து இயக்கும் அம்சம் போன்றவற்றுடன் இந்த சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் நவீன தொழில்நுட்பங்களுடன் டிரெஸார் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.
Tresor வாகனத்தின் தேவை மற்றும் தீர்வு
டிரெஸார் மின் சைக்கிள் தேவைகளைப் பற்றியும் அதனால் கிடைக்கக்கூடிய தீர்வுகளைப் பற்றியும் விவரிக்கிறார் வோல்ட்ரிக்ஸ் மொபிலிட்டி நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான விவேக் எம் பழனிச்சாமி.
இன்று தொழில்நுட்பம் நமக்குத் தேவையான அனைத்தையும் நம் கைகளில் கொண்டு சேர்த்துவிடுகிறது. இதனால் சோம்பலான வாழ்க்கைக்கு நாம் பழகிவிட்டோம். போதிய உடலுழைப்பு இல்லாததே நோய் ஏற்படக் காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.
உடலுழைப்பு இல்லாத வாழ்க்கைமுறை காரணமாக நீரிழிவு, உடற்பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற நோய்கள் இன்றைய தலைமுறையுடன் முடிந்துவிடுவதில்லை. பரம்பரை நோயாக அடுத்து வரும் தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கப்படுகின்றன. எனவே,
”உடலுழைப்பு இல்லாத வாழ்க்கைமுறையை மாற்ற சைக்கிள் ஓட்டுவது சிறந்தது என்று சுட்டிக்காட்டுகிறார். டிரெஸார் சைக்கிளை பெடல் செய்து ஓட்டும்போது இதயத்திற்கும் இரத்த நாளத்திற்கும் நன்மை கிடைக்கிறது,” என்கிறார்.
வோல்ட்ரிக்ஸ் மொபிலிட்டி தலைமை தொழில்நுட்ப அதிகாரி சக்திவிக்னேஷர் டிரெஸார் இ-சைக்கிள் பற்றி கூறும்போது,
“வோல்ட்ரிக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள டிரெஸார் இ-சைக்கிள் அலுவலகம் செல்வோருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் பங்களிக்கும் இவர்களின் போக்குவரத்து தொடர்பான சிக்கல்களுக்கும் உடல்நலன் சார்ந்த சிக்கல்களுக்கும் ஒருசேர தீர்வளிக்க விரும்பியே இந்தத் தயாரிப்பை சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்,” என்றார்.
அவர் மேலும் கூறும்போது,
“நகர்ப்புற போக்குவரத்தின் சராசரி வேகம் ஒரு மணி நேரத்திற்கு 16 முதல் 20 கி.மீட்டர் என்கிற அளவிலேயே இருக்கிறது. இந்த சூழலில் வேலைக்கு செல்வோர் விரைவாகவும் சிரமமின்றியும் பயணிக்க டிரெஸார் உதவும். வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆறு மாதங்களில் மேலும் இரண்டு வகைகளை அறிமுகப்படுத்த இருக்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு கவனம் – வருங்காலத் திட்டங்கள்
வோல்ட்ரிக்ஸ் மொபிலிட்டி தலைவர் டாக்டர் குமார் லோகநாதன் கீழ்கண்டவாறு விவரித்தார்.
”மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கவேண்டும் என்பதையே எப்போதும் எங்கள் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறோம். இவற்றில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய பகுதிகளைக் கண்டறிந்திருக்கிறோம். அதாவது:
- இந்தியாவில் இ-பைக் பிரிவிற்குத் தேவையான எலக்ட்ரானிக் பாகங்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.
- 2024-ம் ஆண்டிற்குள் 6 நகரங்களில் 150 சில்லறை வர்த்தக பகுதிகளை நிறுவ திட்டமிட்டிருக்கிறோம்.
- இந்த நடவடிக்கைகள் மூலம் இந்திய சாலைகளில் 40,000-க்கும் மேற்பட்ட வோல்ட்ரிக்ஸ் எலக்ட்ரிக் சைக்கிள்கள் பயன்பாட்டில் இருக்கும்.
- மொத்த சந்தை அளவில் 4-5% வரை பங்களிக்கும்.
டிரெஸார் எலக்ட்ரிக் ஆரம்பச் சலுகை விலை 55,999 ரூபாய். 999 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். வாடிக்கையாளர்களுக்கு இதற்கான நிதி வசதியும் செய்து கொடுக்கப்படும்.
தொடர்புக்கு: www.voltrix.bike