350 நிறுவனங்கள்; 190 நாடுகள்; 1.3 கோடி ஊழியர்களுக்குச் சம்பளப் பட்டுவாடா செய்யும் சென்னை நிறுவனம்!
சில நிறுவனங்கள் நாளை தொடங்கப்படுவதாகத் திட்டம் இருக்கும். ஆனால், பல மாதங்களுக்கு முன்பே அதற்கான விளம்பரங்கைளைத் தொடங்கி இருப்பார்கள். இதைத்தாண்டி பல ஆண்டுகளாக அமைதியாக எந்தவிதமாக ஆடம்பரமும் இல்லாமல் சில நிறுவனங்கள் ஒருபக்கம் செயல்பட்டுவரும். அப்படிப்பட்ட ஒரு நிறுவனம்தான் Neeyamo.
இந்த நிறுவனத்தின் பெயரை முதலில் கேள்விப்பட்டபோது இது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் என்றுதான் தோன்றியது. அதன் பிறகு, நிறுவனத்தின் குறிப்பை படித்தபோதுதான் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் 13 ஆண்டுகளாக இந்த நிறுவனம் செயல்படுவது தெரிந்தது.
ஹெச்.ஆர். சேவைகளில் ஈடுபட்டுவரும் இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரங்கராஜன் சேஷாத்திரி-யை சந்தித்து உரையாடினேன். நிறுவனத்தின் தொடக்கக் காலம் முதல் அடுத்த சில ஆண்டுகளில் ஐபிஓ கொண்டுவரும் திட்டம் உட்பட அனைத்தையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.
ஆரம்பகாலம்
ஐந்து நிறுவனர்கள் இணைந்து நிறுவனத்தை நடத்திவருகிறோம். நாங்கள் அனைவரும் ஹெக்சாவேர் நிறுவனத்தில் ஒன்றிணைந்தோம். அங்கிருந்தபோது ’நியாமோ’வுக்கான ஐடியா தோன்றியது. 2009-ம் ஆண்டு நிறுவனத்தைத் தொடங்கினோம். ஹெச்.ஆர். மற்றும் சம்பள பட்டுவாடா பிரிவில்தான் நாங்கள் இருந்தோம். அதில் பல மாற்றங்களை செய்ய முடியும் என தோன்றியதால் நிறுவனத்தைத் தொடங்கினோம்.
மேலோட்டமாக பார்த்தால் பணியாளர்களுக்கான சம்பளத்தை விதிமுறைகளின் படி வழங்க வேண்டும். இதுதான் அடிப்படை. ஆனால், நாங்கள் 190 நாடுகளில் உள்ள 350-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிறோம்.
இதுவரை அந்தந்த நிறுவனமே தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவார்கள். ஆனால், அவுட்சோர்ஸ் மூலமாக சர்வதேச அளவில் சம்பளத்தை பட்டுவாடா செய்வது என்பது நாங்கள் நிறுவனம் தொடங்கும் போது யாரும் இல்லை. பேரோல் டெக்னாலஜி என்னும் பிரிவே அப்போது கிடையாது.
”சம்பளம் வழங்குவதில் என்னென்ன சிக்கல் தோன்றும், என்று அந்த நடைமுறையை புரிந்து கொண்டு நாங்கள் செயல்படுகிறோம். அதனால்தான், 190 நாடுகளில் உள்ள பல நிறுவன பணியாளர்களுக்கு எங்கள் மூலமாக சம்பளம் செல்கிறது. எங்களுடைய பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் ஃபார்ச்சூன் 500 நிறுவனத்தில் உள்ளவர்கள்,” என்றார் ரங்கராஜன்.
ஒவ்வொரு நாடுகளிலும் சம்பள விதிமுறைகள் வேறு, வரிகள் வேறு, தவிர நிறுவனம் ஒரு நாட்டில் இருக்கும், பணியாளர்கள் வேறு நாட்டில் வேலை செய்வார்கள் என பல சிக்கலான நடைமுறைகள் உள்ளன. அதனால், ஒரே சாப்ட்வேரை வைத்து சர்வதேச அளவில் எந்த நிறுவனத்துக்கும் சம்பளத்தை பட்டுவாடா செய்ய முடியும்.
இதுதவிர நேரத்தை கணக்கிடுதல், விடுமுறையை கணக்கிடுதல் என ஒவ்வொன்றுக்கும் சாப்ட்வேர் வைத்திருக்கிறோம். டெஸ்லா வரும் முன்பு எலெக்ட்ரிக் வாகனம் குறித்து யாருக்கும் தெரியாது. அதுபோல நாங்கள் வரும் வரும் பேரோல் டெக்னாலஜி என்னும் துறையே கிடையாது.
அடுத்து என்ன?
ஒவ்வொரு நிறுவனம் மாதத்தின் கடைசி நாள், அல்லது முதல் வேலை நாள் அல்லது 5ம் தேதி என எதாவது ஒரு தேதியில் சம்பளத்தைக் கொடுப்பார்கள். ஆனால், இந்த தேதிக்கு சில நாட்களுக்கு முன்பு வேலை நாள் போன்ற டீடெய்ல் எங்களுக்கு வந்துவிடும். உதாரணத்துக்கு 31ம் தேதி சம்பளம் என்றால் 25ம் தேதியே அந்த பேட்சினை முடித்துவிடுவார்கள். தற்போது நாங்கள் அடுத்தகட்டமாக ரியல் டைமில் சம்பளம் வழங்குவது குறித்து திட்டமிட்டுவருகிறோம்.
உதாரணத்துக்கு ஒரு பணியாளர் 17ம் தேதி சம்பளம் தேவை என விரும்புகிறார் என்றால் (நிறுவனம் அனுமதிக்கும் பட்சத்தில்) ஒரு க்ளிக் செய்தால் அவருக்கு அந்த மாதத்தில் வேலை செய்தவரை சம்பளம் அவருக்குக் கிடைப்பதற்கான நடவடிக்கையில் இருக்கிறோம். இன்னும் சில மாதங்களில் ரியல் டைமில் சம்பளம் வழங்குவோம்.
விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி
இப்போதைக்கு எங்களிடம் 3,000 பணியாளர்கள் உள்ளனர். இந்தியா, சிங்கப்பூர் மற்றும் பிலிபைன்ஸ் (மணிலா) 70 சதவீத பணியாளர்கள் உள்ளனர். இதுதவிர 25 நாடுகளில் எங்களுக்கு பணியாளர்கள் இருக்கின்றனர். இதனை விரிவுபடுத்தி 50 நாடுகளில் பணியாளர்களின் இருப்பை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். சில பிராந்தியத்தில் உள்ளூர் மொழி தெரிந்த பணியாளர்கள் அவசியப்படுகிறார்கள். ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் உள்ளூர் மொழி தெரிந்திந்தால் வளர்ச்சி உயரும், என்றார் ரங்கராஜன்.
Neeyamo-வுக்கு புனே, மதுரை, நாக்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகம் இருக்கிறது. பெரும்பான்மையான பணியாளர்கள் மதுரையில் உள்ளனர். நாக்பூரில் உள்ள அலுவலகம் முழுவதும் பெண்கள் அலுவலகம். அடுத்த ஆண்டில் பணியாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக (6,000) இருக்கும்.
அதே சமயம் இனி பெரிய நகரங்களில் அலுவலகம் தொடங்கவேண்டாம் என்னும் முடிவையும் எடுத்துவிட்டோம். அடுத்து எங்களது இலக்கு வட கிழக்கு மாநிலங்களில் எதாவது இடத்தில் எங்கள் கிளையை தொடங்க இருக்கிறோம். இதுவரை பெரிய நிறுவனங்கள் எதுவும் வட கிழக்கு மாநிலங்களுக்கு செல்லவில்லை.
இதைத் தாண்டி ரிமோட் மாடலில் 11 நகரங்களில் எங்களுக்கு பணியாளர்கள் இருக்கிறார்கள். தஞ்சாவூர், வேலூர், ஈரோடு, பெல்காம், அவுரங்காபாத் உள்ளிட்ட நகரங்களில் எங்களுக்கு அலுவலகம் கிடையாது. வாரம் ஒரு நாள் அல்லது மாதத்துக்கு இரு நாள் எதாவது ஒரு ஓட்டலில் சந்தித்து ஒன்றாக வேலை செய்வார்கள்.
தற்போது, இந்த மாடலை 25 நகரங்களில் விரிவுபடுத்த இருக்கிறோம். திறமையான நபர்கள் அனைத்து ஊர்களிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கான வாய்ப்பை அந்த ஊரிலே வழங்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறோம், என்றார்.
சில ஆண்டுகளில் ஐபிஓ...
13 ஆண்டுகளில் ஏன் மீடியாக்களில் பேட்டியே கொடுக்கவில்லை என்று கேட்டதற்கு, ஒரு நிறுவனம் பி.ஆர்-ல் கவனம் செலுத்து வேண்டும் என்றால் அதற்கு முக்கியக் காரணம் நிதிதான். ஆனால், எங்களுக்கு நிதி தேவைப்படவில்லை. முதல் நாளில் இருந்து லாபம் ஈட்டிவருகிறோம். எங்களுக்கு கடன் கிடையாது. கிடைக்கும் லாபத்தை மீண்டும் முதலீடு செய்துவருகிறோம் என்பதால் நிதி பிரச்சினையில்லை, என்றார் ரங்கராஜன்.
ஆனால், நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பங்குகள் உள்ளன. அந்த பங்குகளை அன்லாக் செய்ய வேண்டும் என்றால் நிதி திரட்டல் அல்லது ஐபிஓ கொண்டுவர வேண்டும். அதனால் அடுத்த சில ஆண்டுகளில் நேரடியாக ஐபிஓ கொண்டுவரலாம், இல்லை பிரைவேட் ஈக்விட்டி நிதி கிடைத்து கொஞ்சம் விரிவாக்கம் செய்த பிறகு ஐபிஓ கொண்டு வரலாம் எனத் திட்டமிட்டிருக்கிறோம்.
வித்தியாசமான நடைமுறை
இந்த வேலையை சரியாகச் செய்தால் எந்த பாராட்டும் கிடைக்காது. ஆனால், தவறு செய்தால் பெரும் சலசலப்பு ஏற்படும் அதனால், கவனமாக கையாள வேண்டி இருக்கும். உதாரணத்துக்கு ஜெர்மனியில் ஒரு உற்பத்தி ஆலையின் சம்பளத்தை நாங்கள் கையாளுகிறோம்.
வெளிப்புர வெப்பநிலையை பொருத்து பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். இரட்டை வரி விதிப்பு முறை சிக்கல்களைக் கையாள வேண்டும். வாரச் சம்பளம், 15 நாள் சம்பளம், மணி நேரத்துக்கு வேலை செய்பவர்களின் சம்பளம் என பல வகையான சம்பளத்தைக் கையாள வேண்டும். பிலிபைன்ஸ் நாட்டை எடுத்துக்கொண்டால் 12+1 மாத சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம், என்று விளக்கினார்.
13 மில்லியன் பணியாளர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்கிறோம். ஒரு பணியாளர்களுக்கு இவ்வளவு என கட்டணம் நிர்ணயம் செய்கிறோம். நிறுவனத்தைப் பொறுத்து, செயல்படும் நாடுகளைப் பொறுத்து, பணியாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து இந்த கட்டணம் மாறும். அதேபோல,
எங்களுடைய சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்வதற்கு ஒரு முறை கட்டணமும் வசூலிக்கிறோம். இதுவரை வருமானத்தை நாங்கள் வெளியிடவில்லை. தற்போது நிதி திரட்டும் நடவடிக்கையில் இருப்பதாலும் வெளியிட முடியாது. தோராயாமாக சொல்ல வேண்டும் என்றால் 150 மில்லியன் டாலர் அளவுக்கு வருமானம் இருக்கும் என ரங்கராஜன் முடித்தார்.
இவருடனான உரையாடல் சர்வதேச அளவில் சம்பளம் வழங்குதலில் உள்ள நடைமுறைகள் மற்றும் மனிதவளக் கொள்கைகளை புரிந்துகொள்வதற்கு உதவியாக இருந்தது.