டெக்னாலஜி நிறுவனங்களுக்கு தகுதி வாய்ந்த ஊழியர்களை நேர்காணல் செய்து கொடுக்கும் 'InterviewDesk'
மூன்று ஆண்டுகளில் 25000, அடுத்த ஓர் ஆண்டில் ஒரு லட்சம் நேர்காணலுக்கு இலக்கு
நேர்காணல் என்பது தவிர்க்க முடியாதது. நாம் வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் இண்டர்வியூ குறித்து தெரிந்திருக்க வேண்டும். நாமே சொந்தமாக ஒரு நிறுவனம் நடத்துகிறோம் அல்லது உயர்பதவியில் இருக்கிறோம் என்றாலும் இண்டர்வியூ எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
கார்ப்பரேட் வாழ்க்கையில் இண்டர்வியூ என்பது முக்கியமான அங்கம். ஒரே ஒரு முறை மட்டும் நேர்காணலுக்கு சென்றால் வேலை கிடைக்காது. அதே சிக்கல்தான் நிறுவனங்களுக்கும் ஒரு பதவிக்கு ஒருவரை மட்டும் நேர்காணல் செய்தால் போதாது.
வேலைக்கான இண்டர்வியூ என்பது ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முக்கியமானது. அந்த நேர்காணல்கள் செய்து தரும் பொறுப்பை ‘இண்டர்வியூ டெஸ்க்’ ‘Interview Desk' எனும் நிறுவனம் செய்துவருகிறது.
2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இதுவரை 25,000-க்கும் மேற்பட்ட நேர்காணல்களை முடித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் பிச்சுமணி துரைராஜ் உடன் உரையாடினோம். இந்த தொழில் ஐடியா குறித்தும் அடுத்தக் கட்ட திட்டம் குறித்தும் யுவர்ஸ்டோரி தமிழ் உடன் உரையாடினார்.
ஆரம்பகாலம்
சென்னையைச் சேந்த பிச்சுமணி துரைராஜ், அமேசான் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார். அதனால் சர்வதேச அளவில் பல நாடுகளுக்குச் சென்று பணியாற்றிய அனுபவம் இருப்பதால் மனிதவளத்துறை குறித்து பொதுவான புரிதல் இருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு Hunt and Badge என்னும் மனிதவள நிறுவனத்தை தொடங்கினார். அதாவது நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களைக் கண்டறிவதுதான் இந்த நிறுவனத்தின் பணி. இந்த நிறுவனத்தை நடத்திவரும்போதுதான் இண்டர்வியூ டெஸ்க் என்னும் நிறுவனத்துக்கான ஐடியா பிறந்திருக்கிறது.
தகுதி வாய்ந்த பணியாளர்களை அடையாளம் காண்பித்தாலும் நேர்காணல் முடிந்து அவர்கள் வேலையில் சேர்வதற்கான கால தாமதம் ஏற்பட்டது. அதனால் ஊழியர்களை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், முதல் கட்ட நேர்காணலும் செய்துகொடுக்கும் பட்சத்தில் நேரம் மீதமாகும் என்பதால் 2017-ம் ஆண்டு ‘இண்டர்வியூ டெஸ்க்’ என்னும் நிறுவனத்தை தொடங்கினார் பிச்சுமணி துரைராஜ்.
நீங்கள் எப்படி நேர்காணல் செய்ய முடியும் என்பது பெரும்பாலானவர்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால், நாங்கள் செய்வது முதல் கட்ட தேர்வு மட்டுமே. முதல் கட்டத்திலே பல நபர்களின் நேரம் வீணாகிறது. நிறுவனத்துக்கு வந்திருக்கும் ரெஸ்யூம்களை வடிகட்டி தகுதிவாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பது நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவால். இதில் அதிக நேரம் வீணாகிறது. அதே சமயம், வேலைக்கான விண்ணப்பித்திருப்பவர்களின் நேரமும் வீணாகிறது.
ஒரு நிறுவனத்துக்கு விண்ணப்பித்திருக்கிறோமே, முடிவு என்ன அடுத்த கட்டத்துக்கு செல்வோமோ இல்லையா எனப் பலர் காத்திருக்கின்றனர். சாதகமான முடிவாக இருந்தால் அடுத்த கட்ட நேர்காணலுக்கு தயாராகலாம். எதிர்மறை முடிவாக இருந்தால் அவர்கள் அடுத்த நிறுவனத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
”இந்த இடைவெளியை குறைப்பதுதான் எங்களுடைய முக்கியமான பணி. எந்தப் பிரிவில் தகுதி வாய்ந்த பணியாளர்கள் தேவை என்று நிறுவனம் சொல்லிவிட்டால், அதில் தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுத்து நிறுவனங்களிடம் கொடுப்போம். நேர்காணல் செய்யும் இருவர் ஒரே டெக்னாலஜியில் ஐந்தாண்டுகள் அனுபவம் இருந்தாலும் இருவரின் திறமையும் அறிவும் வேறாக இருக்கும். இதனை எங்களுடைய நேர்காணல் குழு கண்டறிந்து நிறுவனங்களிடம் வழங்குவோம்,” என பிச்சுமணி துரைராஜ் விளக்கினார்.
முதல் கட்டத்தில் தேர்வாகும் நபர்களை நிறுவனங்களிடன் கொடுத்துவிட்டால், அதன் பிறகு அவர்களுக்குத் தேவையான நபர்களை சம்பளம் என்ன எனபதை பேசி தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். எங்களை நிறுவனங்கள் இணைத்துக் கொள்வதன் காரணம், முதல் கட்ட நேர்காணலுக்கு செலவாகும் அதிக நேரத்தை நாங்கள் மீதம் செய்வதே ஆகும்.
வருமானம்
இதுவரை நாங்கள் 25,000-க்கும் மேற்பட்ட நேர்காணல்களைச் செய்திருக்கிறோம். டெக்னாலஜியில் மட்டுமே இதுவரை கவனம் செலுத்தி வருகிறோம். நேர்காணல் செய்வதற்கு எனத் துறையில் உள்ள வல்லுநர்களை நாங்கள் இணைத்து வருகிறோம். அவர்கள் நேர்காணல் முடித்து ரிப்போர்ட் கொடுப்பார்கள்.
ஒரு நேர்காணல்களுக்கு இவ்வளவு என நாங்கள் நிறுவனங்களுக்கு பில் அனுப்பி வைப்போம். நிறுவனங்களுக்கு மீதம் ஆகும் நேரத்துடன் ஒப்பிட்டால் எங்களுக்கு வழங்கும் தொகை நிறுவனங்களுக்கு அதிகம் இல்லை என்பதால் எங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.
தவிர தற்போதைய சூழலில் இணையம் மூலம் நேர்காணல் நடத்துவது பலருக்கும் வசதியாக இருக்கிறது. தவிர தற்போது தேவையும் உயர்ந்திருப்பதால் தினமும் நடக்கும் நேர்காணல்கள் உயர்ந்திருக்கின்றன.
பைஜூ’ஸ். சார்ஜ்பீ, டெகியான், காமன் எனர்ஜி 45-க்கும் மேற்ட்ட வாடிக்கையாளர்கள் இவர்களுக்கு உள்ளனர். சென்னையைத் தலைமையாகக் கொண்டு செயல்படும் நிறுவனமாக இருந்தாலும் அமெரிக்காவிலும் சில வாடிக்கையாளர்கள்கள் உள்ளனர். அங்கும் ஒரு சிறு குழு பணியாற்றுகிறது.
நாங்கள் வாடிக்கையாளர்களை இணைக்கும் அதே வேகத்தில், நேர்காணல் செய்வதற்கான சந்தை வல்லுநர்களையும் இணைத்து வருகிறோம். இப்போதைக்கு 20 நபர்கள் கொண்ட குழு செயல்பட்டுவருகிறது. அமெரிக்க குழுவுக்கு பிரியா தலைமை வகிக்கிறார்.
நிதி திரட்டல்
இதுவரை சுயநிதியில் (Bootstrapped) இந்நிறுவனம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. ஆனால் இந்தத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்துவருகிறது. அதனால், நிதித் திரட்டுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம், என்றார் பிச்சுமணி.
Online recruitments சந்தை வேகமாக வளர்ந்துவருகிறது. 2027-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 7 சதவீத வளர்ச்சி அடையும் எனக் கணிக்கபட்டிருக்கிறது. தவிர அடுத்த சில ஆண்டுகளுக்கு டெக்னாலஜி துறையும் நல்ல வளர்ச்சி அடையும் என்பதால் எங்களின் வளர்ச்சியும் நன்றாகவே இருக்கும் என நினைக்கிறோம்.
”தவிர இந்தத் துறையில் முக்கியப் போட்டியாளர்களாக இரு அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அதனால் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது மற்றும் வளர்ச்சி அடைவதற்காக நிதி திரட்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம். இன்னும் சில மாதங்களில் நிதி திரட்டும் நடவடிக்கை முடிவடையும்,” என்றார்.
நிதித் திரட்டும் நடவடிக்கையில் இருப்பதால் வருமானம் குறித்த தகவல்களை இப்போதைக்கு பொதுவெளியில் அறிவிக்க முடியாது என்று கூறிய பிச்சுமணி, அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் நேர்காணல்கள் என்னும் இலக்கை அடைவோம் எனக் கூறினார்.
மனிதவள துறையினரின் முக்கியப் பணியே திறமையான பணியாளர்களை தேர்ந்தெடுப்பதுதான். அதற்கான முன்களப் பணியை செய்கிறது இண்டர்வியூடெஸ்க்.