Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘குழந்தைகள் ஆபாச படம்’ - அடிமை ஆகும் காரணம் என்ன? தடுத்தலும்; தவிர்ப்பது எப்படி?

‘சைல்டு போர்னோகிராஃபி’-க்கு எதிராக இந்தியாவில் வலுவான சட்டங்கள் இருந்தும் அவை அதிகரித்துள்ளது ஏன்? என ஒரு பார்வை!

‘குழந்தைகள் ஆபாச படம்’ - அடிமை ஆகும் காரணம் என்ன? தடுத்தலும்; தவிர்ப்பது எப்படி?

Monday September 26, 2022 , 4 min Read

நாடு முழுவதும் ‘சைல்டு போர்னோகிராஃபி’ (Child Pornography) எனப்படும் குழந்தைகளை வைத்து ஆபாசப் படங்கள் எடுப்பதும், அவை பரவலாகப் பகிரப்பட்டு, சுலபமாக மொபைல் போன்களில் பார்ப்பதும் அதிகரித்துள்ளது என தற்போதைய சிபிஐ ரெய்டு உணர்த்துகிறது.

ஆபரேஷன் மேக் சக்ரா பின்புலம் என்ன?

குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை இணையத்தில் பரப்புவதற்கு சிபிஐ சனிக்கிழமை நாடு முழுவதும் பெரிய அளவிலான சோதனை ஒன்றில் ஈடுபட்டது.

‘ஆபரேஷன் மேக்-சக்ரா’ (Operation Megh Chakra) என்ற அந்தச் சோதனை 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 56 இடங்களில் நடத்தப்பட்டது. குழந்தைகளை வைத்து உருவாக்கப்படும் ஆபாச வீடியோக்கள் (செக்ஸ் படங்கள்), படங்களை பகிர்வது, சிறுவர்களை மிரட்டும் தனிநபர், குழுக்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

child pornography

இன்டர்போல் போலீஸாரின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை, சமூக ஊடகத்தின் பல்வேறு தளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை வெளியிட்டவர்கள், அவற்றை பரிமாறிய நபர்கள் குறித்து பெறப்பட்ட தகவலில் அடிப்படையில் நடந்துள்ளது.

சர்வதேச இன்டர்போலில் சிபிஐயும் ஓர் அங்கத்தினராக இருக்கிறது. சர்வதேச அளவில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் படங்கள், வீடியோ பற்றிய தகவல்களைக் கொண்ட அமைப்பின் மூலம் குழந்தை பாலியல் சுரண்டல் பற்றிய தகவல்களை உறுப்பு நாடுகளுக்கு இடையில் பரிமாறிக் கொள்ள முடியும் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

தடை செய்தும் பலனில்லையா?

கடந்த 2018-ம் ஆண்டு இந்தியாவில் 850-க்கும் மேற்பட்ட ஆபாச வலைதளங்கள் தடை செய்யப்பட்டன. அதற்கு உண்மையில் எந்தப் பலனும் இல்லை என்பதையே, அந்த அதிரடி நடவடிக்கைக்குப் பின் இந்தியாவில் டவுன்லோடு செய்யப்பட்ட விபிஎன் செயலிகளின் எண்ணிக்கை காட்டின.

இணையப் பயனர்கள் தங்களின் இருப்பிடத்தை மறைத்து, மிகவும் பாதுகாப்பாக உலாவ அனுமதிக்க வகை செய்யும் விபிஎன் மூலம் ஆபாச வலைதளங்கள் அதிகம் பார்க்கப்பட்டதாக நிபுணர்களும் தரவுகளும் தெரிவித்தன.

அதன் தொடர்ச்சியாக, விபிஎன் இல்லாமலேயே கூட ட்யூப்ளிகேட் வெர்ஷன்களில் ஆபாச வலைதளங்களை அணுகப்படுவது அதிகரிப்பதும் தெரியவந்தது. கடந்த ஆண்டில் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 வலைதளங்களின் பட்டியலில் மூன்று பிரபல ஆபாச வலைதளங்கள் இடம்பெற்றிருப்பதே இதற்குச் சான்று.

இந்திய தண்டனைச் சட்டங்கள் சொல்வது என்ன?

‘சைல்டு போர்னோகிராஃபி’-க்கு எதிராக இந்தியாவில் வலுவான சட்டங்கள் உள்ளன. குறிப்பாக, 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் திருத்தப்பட்ட ‘போக்சோ’ சட்டத்தின்படி, குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வரையும், குழந்தைகளின் ஆபாசப் படங்களை வெளியிடுவோர், பரப்புவோர், பார்ப்போர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டன.

‘Child Pornography' என்பதன் விளக்கம் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. அந்தப் புதிய சட்டத்தின்படி , புகைப்படம், வீடியோ, டிஜிட்டல் படம் அல்லது கணினியில் உருவாக்கிய படம் என எந்த வடிவில் குழந்தைகளை ஆபாசமாக சித்திரிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் படம் குழந்தைகளை வைத்து நேரடியாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அல்லது குழந்தைகளின் படத்தை எடிட் செய்து சேர்த்திருந்தாலும்கூட, அது சட்ட விரோதம்தான். அத்துடன், பெரியவர்கள் சிறியவர்களைப் போல நடித்திருந்தாலும் அது ‘சைல்டு போர்னோகிராஃபி' எனும் வகைப்பாட்டில்தான் வரும்.

குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள், பகிர்ந்தவர்களைப் பட்டியல் தயாரித்து வைத்திருக்கும் காவல் துறை, அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறது.

Child porno

குறிப்பாக, புதிய சட்டத் திருத்தத்தின்படி,

  • ஒருவர் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் குறித்து காவல் துறைக்குத் தகவல் கொடுக்காமல், அத்தகைய படங்களை முழுவதும் அழிக்காமல் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தாலும் அவர்களுக்கு ரூ.5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

  • இரண்டாவது முறையும் அதே தவறைச் செய்தால், அபராதத் தொகை ரூ.10,000 ஆக உயரும். வாட்ஸ்-அப் உட்பட எந்த வகையில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பகிர்ந்திருந்தாலும், அவர்கள் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் வரை சிறையும் அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67B-யைப் பொறுத்தவரையில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் ஆகியவற்றை வெளியிடுவது, பகிர்வது மட்டுமின்றிப் பார்ப்பதும் கூட குற்றம். மேலும், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் இழைப்பவர்களுக்கு அபராதமும், 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் இந்தச் சட்டம் வழங்குகிறது.

அதிகம் பேசப்படாத ஆபத்து:

ஆபாசப் படங்களுக்கு எதிராக அரசு ஒருபக்கம் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், மற்றொருபுறம் வேறொரு வடிவில் இந்தியர்களை ஆபாசப்பட அடிமையாக்குவதில் ஒரு தொழில் இயக்கமே சுழன்றுகொண்டிருப்பதை கவனிக்க முடிகிறது.

எழுபது, எண்பது, தொண்ணூறு காலகட்டத்தில் ‘பி’ கிரேடு சினிமா கோலோச்சி இருந்தன. அந்த பாணி சினிமா இப்போது வேறு ரூபம் எடுத்துள்ளன என்றே சொல்ல வேண்டும். அக்கால பி கிரேடு சினிமா கூட ஆபாசம் மிகுந்து இருக்காது. ஆனால், இப்போது அந்த ரக சினிமாக்களும், சீரிஸ்களும் அப்பட்டமான ஆபாசப்பட வடிவங்களாகவே உற்பத்தியாகின்றன. இவை கிடைக்கும் இடத்துக்கும் ஓடிடி என்று பெயர்தான்.

நெட்ஃப்ளிக்ஸ், அமேசன் ப்ரைம் போன்றவை அல்ல இந்த ஓடிடி தளங்கள். இவை இந்தியில்தான் அதிகம் உள்ளன. கூகுள் ப்ளே ஸ்டோரில் எளிதில் கிடைக்கக் கூடிய இந்த ஓடிடி தளங்கள் ‘பொழுதுபோக்கு’ என்ற அடைமொழியுடன் வலம் வருகின்றன. இவற்றை கோடிக்கணக்கான மக்கள் பதிவிறக்கம் செய்து பார்த்து வருவது நம்பக்கூடிய உண்மையே.

பொழுதுபோக்கு என்ற பெயரில் அனுமதிக்கப்படும் இந்த ஓடிடி தளங்களில் முழுக்க முழுக்க ஆபாச சினிமாக்களும், சீரிஸ்களும் புதிது புதிதாக பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பி கிரேடு சினிமாவை விட பணம் கொழிக்கும் தொழிலாகவும் இது மாறிவிட்டது. இதை அரசு கவனித்து, இதற்கும் சென்சாரை கட்டாயமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Image : shutterstock

உளவியலும் குற்றங்களும்

ஆபாசப் படங்களுக்கு அடிமையாதல் என்பது அனைத்து விதமான போதைக்கும் அடிமையாவதைப் போன்றதுதான். மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள் உதவியுடன் நிச்சயம் மீளக்கூடிய ஒன்றுதான்.

புரொஃபஷனலான போர்னோகிராஃபி என்பது காலம் காலமாக வழக்கத்தில் உள்ளதுதான். அதற்கு அடிமை நிலைக்கு ஆகும்போது ஏற்படும் சிக்கல்கள் ஒருபக்கம் என்றாலும், போர்ன் படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள் மெது மெதுவாக விபரீத நிலைக்குச் செல்வதன் பின்னணியில் உளவியல் மட்டுமின்றி ஆபாசத் தளங்களின் அல்கரிதமும் உள்ளது.

ஆபாசத் தளங்களில் புரொஃபஷனல் போர்னோகிராஃபி படங்களைப் பார்ப்போருக்கு, அவைத் திகட்டத் தொடங்கியதும் வெவ்வேறு த்ரில் அனுபவம் கொண்டவற்றை நாடுவதற்கும் அந்தத் தளங்கள் வழிகாட்டுகின்றன. அப்படித்தான் அமெச்சூர் வீடியோக்கள் அவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.

அந்த வரிசையில் சிறுவர்களை வைத்து எடுக்கப்படும் ஆபாசப் படங்களும் அவர்களைச் சென்றடைகிறது. அதில் நாட்டம் கொள்ளும் அந்தப் பயனர்களில் பலரும் நிஜ வாழ்க்கையிலும் தாங்கள் ஆபாசத் தளங்களில் கண்டவற்றை நாட முற்படுகின்றனர்.

சிறுவர்கள் எப்போதுமே எளிதாக வீழ்த்தப்படும் விக்டிம்கள் என்பதாலும், வெளியே தெரியாமல் தங்களுக்கு வேண்டியதைச் செய்துகொள்ள முடியும் என்ற எண்ணத்தில் காரணமாகவும் குறிவைக்கப்படுகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகவே, பெரும்பாலும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதாக தரவுகளும் சொல்கின்றன. எனவேதான், போக்சோவில் சைல்டு போர்னோகிராஃபிக்கு எதிராக வலுவான சட்டப்பிரிவுகளை இயற்ற வேண்டிய நிலை கட்டாயம் ஏற்பட்டது.

என்னதான் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டாலும், சமூகத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்கள்தான் இதற்கும் தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை. மது, போதைப் பொருட்களுக்கு அடிமையாவோருக்கு வழங்கப்படும் மனநல ஆலோசனைகள், மனநல மருத்துவச் சிகிச்சைகள், மீட்பு நடவடிக்கைகள் போலவே ஆபாசப் படங்களுக்கு அடிமையாவோருக்கும் இவை அனைத்தும் எளிதில் கிடைக்க வேண்டும்.

இதுபோன்ற பழக்கங்களுக்கு ஆளானவர்கள் தயக்கமின்றி மனநல ஆலோசனைப் பெறுவதற்கு ஏற்ற சூழலை சமூகமும், நம் குடும்ப அமைப்புகளும் ஏற்படுத்தித் தர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நம் நாட்டில் பள்ளிகளில் உருப்படியான பாலியல் கல்வி புகட்டப்பட வேண்டும். அதுதான் எதிர்காலை தலைமுறையை நல்ல மனிதர்களாக உருவாக்கவும், குற்றங்களுக்கு இலக்கு ஆகாமல் தங்களைக் காத்துக்கொள்ளவும் வழிவகுக்கும்.