கம்ப்யூட்டர் பெண்கள் 17 - இணைய தேடலுக்கு அடித்தளம் அமைத்த கரேன் ஸ்பார்க் ஜோன்ஸ்!
இணையமே உருவாகாத காலத்தில் கரேன் ஸ்பார்க் ஜோன்ஸ், கம்ப்யூட்டர் மொழியை கையாள்வதில் மேற்கொண்ட முன்னோடி ஆய்வு, கூகுள் உள்ளிட்ட இணைய தேடியந்திரங்களுக்கு அடிப்படையாக அமைந்தது.
கூகுள் எப்படி, எல்லா வகையான தேடலுக்கும் நொடிப்பொழுதுக்கும் குறைவான நேரத்தில் பதில்களைக் கொண்டு வந்து கொட்டுகிறது என நீங்கள் பலமுறை வியந்திருக்கலாம்.
இப்படி வியக்கும் ஒவ்வொரு முறையும் கூகுளை பாராட்டுவதோடு, கம்ப்யூட்டர் விஞ்ஞானி கரேன் ஸ்பார்க் ஜோன்சையும் (Karen Spärck Jones) நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், ஜோன்ஸ் மேற்கொண்ட ஆய்வில் உருவான தொழில்நுட்பம் தான் கூகுளின் தேடலுக்கான அடிப்படை அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது.
கூகுள் என்றில்லை, எல்லா வகையான இணைய தேடலுக்கும் அடிப்படையான நுட்பம் ஜோன்சின் ஆய்வில் இருந்து உண்டானது தான். கூகுள் தன் பங்கிற்கு தேடல் நுட்பத்தை பல விதங்களில் மேம்படுத்தியிருந்தாலும், தேடலுக்கான அடிப்படை என்று வரும் போது, ஜோன்ஸ் தனது ஆய்வின் மூலம் வகுத்துக்கொடுத்த பாதையில் இருந்து பெரிய அளவில் எந்த மாறுதலும் ஏற்பட்டுவிடவில்லை.
கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்கள், பயனாளிகள் சமர்பிக்கும் கீவேர்டு எனும் குறிச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு தானே இணையத்தில் இருந்து தகவல்களைத் தேடித்தருகின்றன.
இதற்காக எண்ணற்ற அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டாலும், பயனாளிகள் தேடும் அந்த குறிப்பிட்ட சொல், எத்தனை ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன என்பதன் அடிப்படையிலேயே தேடல் அமைகிறது. இந்த மூல உத்தியை முதன் முதலில் முன்வைத்தது ஜோன்ஸ் தான்.
தகவல் தேடல்
ஆவணங்களில் இருந்து தகவல்களைத் தேட சொற்களைப் பயன்படுத்துவதோடு, அந்த சொலின் பொருளுக்கு ஏற்ப ஆவணத்தில் உள்ள தகவல்களின் உள்ளடக்க தன்மையை கண்டறிய ஆவணங்களில் சொற்களை எடை போட்டு பார்க்கும் வழியை அவர் உருவாக்கித்தந்தார்.
ஆவணங்களில் சொற்கள் தோன்றும் விதத்திற்கு ஏற்ப அவற்றின் மதிப்பை எடை போட்டு பார்ப்பது என்பது இணைய தேடலில் இன்று வெகு இயல்பான விஷயமாக கருதப்பட்டாலும், இணைய வெளியில் தகவல்களை தேடுவதற்கான தேவை பற்றி எல்லாம் பலரும் யோசிக்கத் துவங்குவதற்கு முன்னரே, ஜோன்ஸ் தகவல்களை மீட்டெடுப்பதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தார் என்பது தான் விஷயம்.
சொல்லப்போனால், இணையம் உருவாகாத காலத்திலேயே அவர் தகவல் தேடலுக்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அதாவது, கம்ப்யூட்டர் ஆவணங்களில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கான (Information Retrieval) ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பாக அவர் மேற்கொண்ட ஆய்வு செயற்கை நுண்ணறிவின் (ஏ.ஐ) சாயலை கொண்டிருந்ததோடு, அந்த காலத்தில் பலரும் கற்பனை கூட செய்து பார்த்திராத வகையில், புள்ளியியலையும், மொழியிலையும் இணைக்கும் வகையில் அமைந்திருந்தது.
தேடல் அடிப்படை
இதில் வியக்க வைக்கும் விஷயம் என்னவென்றால், ஜோன்ஸ் தானாக கம்ப்யூட்டர் புரோகிராமிங் கற்றுக்கொண்டவர் என்பது தான். அவரே சொல்லியிருப்பது போல, கம்ப்யூட்டர் துறைக்கு அவர் வந்ததே தற்செயலாக தான். அப்படியிருந்தும், மொழி சார்ந்து கம்ப்யூட்டர் உதவியோடு அவர் மேற்கொண்ட ஆய்வின் பலன், நவீன இணைய தேடலுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
கம்ப்யூட்டர் உருவாக்கத்திலும், ஆய்விலும் அமெரிக்கா போலவே முன்னோடியாக திகழும் நாடுகளில் ஒன்றான பிரிட்டனில் 1935ம் ஆண்டு பிறந்து வளர்ந்தவர் கரேன் ஸ்பார்க் ஜோன்ஸ். அவரது அம்மா இடா ஸ்பார்க் நார்வே நாட்டைச்சேர்ந்தவர், அப்பா ஓவன் ஜோன்ஸ் ஆங்கிலேயர். பெற்றோர் இருவருமே, ஜோன்சுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் அக்கரை கொண்டிருந்தனர். குறிப்பாக, ரசாயன பொறியாளரான ஜோன்சின் தந்தை தனது மகள் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலையில் படிக்க வேண்டும் என விரும்பினார்.
தொடக்கப் பள்ளியில் அறிவியல், கணித பாடத்தில் ஆர்வம் காட்டிய ஜோன்ஸ், உயர் நிலை வகுப்புகளை இலக்கண பள்ளியில் படித்தார். அதன் பிறகு ஜோன்ஸ் கேம்ப்ரிடிஜில் சேர்ந்து வரலாறு பாடம் படிக்கத்துவங்கினார். தந்தை விரும்பிய படி கேம்ப்ரிட்ஜில் படித்தாலும், விஞ்ஞானியாக படிப்பதற்கு பதில் வரலாற்று பாடத்தை தேர்வு செய்ததில் அவருக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.
காலத்தின் பாதை
அந்த காலகட்டத்தில் ஜோன்சுக்கு விஞ்ஞானியாக வேண்டும் என்றோ அறிவியல் ஆய்வில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமோ இருக்கவில்லை என்றாலும், காலம் அவரை அந்த திசையில் தான் அழைத்துச்சென்றது. 1956ல் பட்டம் பெற்றவர், பள்ளி ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார். ஆசிரியராவதில் அவருக்கு விருப்பம் இருக்கவில்லை. ஆனால், அந்த காலகட்டத்தில் பெண்களுக்கு என வேறு எந்த வேலை வாய்ப்புகளும் பெரிய அளவில் இல்லாத நிலையில், வேறு வழியில்லாமல் ஆசிரியரானார்.
இதனிடையே, தத்துவ பாடத்தையும் பயின்றிருந்தார். வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் வேலையில் இருக்க முடியாது எனும் எண்ணத்தில் இருந்த நிலையில் தான் தற்செயலாக காலம் அவரை கம்ப்யூட்டர் துறையை நோக்கி அழைத்துச்சென்றது. கல்லூரி காலத்தில் ஜோன்சுக்கு ரோஜர் நீதம் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டிருந்தது. (பின்னாளில் இவரையே மணந்து கொண்டார். நீதமும் புகழ் பெற்ற கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக உருவானர்). நீதமும் கணிதம் மற்றும் தத்துவப் பாடத்தை பயின்றிருந்தார்.
படித்துக்கொண்டிருந்த போதே, கேம்ப்ரிட்ஜில் செயல்பட்டுக்கொண்டிருந்த சிறிய ஆய்வுக்குழு ஒன்று நீதமுக்கு அறிமுகம் ஆகியிருந்தது. கேம்பிரிட்ஜ் மொழி ஆய்வு மையம் எனும் பெயரிலான அந்த குழு மார்கரெட் மாஸ்டர்மேன் என்பவர் தலைமையில் இயங்கி வந்தது. ஆச்சர்யப்படும் வகையில், மார்கரெட், இயந்திரங்கள் உதவியோடு மொழிபெயர்ப்பை மேற்கொள்வது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருந்தார். 1950-களிலியே செயற்கை நுண்ணறிவுக்கான பூர்வாங்க ஆய்வுகள் துவங்கிவிட்டதோடு, இயந்திர மொழிபெயர்ப்பு தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.
ரோஜர் நீதம் அப்போது கம்ப்யூட்டர் தொடர்பான பட்டயப்படிப்பு படித்துக்கொண்டிருந்தார். அவரை பார்க்க வரும் போதெல்லாம், ஜோன்ஸ், மொழி ஆய்வு மையத்திற்கு செல்வது வழக்கம். அவரது ஆர்வத்தை பார்த்த மையத்தின் தலைவர் மார்கரெட், நீ ஏன் இங்கேயே ஆய்வாளராக வேலைக்கு சேரலாமே என்று அழைப்பு விடுத்தார். ஆசிரியர் பணியை அரைகுறை மனதோடு செய்து வந்த ஜோன்ஸ், இந்த அழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். இயந்திர மொழிபெயர்ப்பு தொடர்பான மொழி ஆய்வு மையத்தில் வேலைக்கு சேர்ந்தாலும், அவர் உடனடியாக கம்ப்யூட்டரை பயன்படுத்தத் துவங்கவில்லை.
இயந்திர மொழி
இயந்திர மொழிபெயர்ப்பு தொடர்பான ஆய்வின் ஒரு பகுதியாக அவர் தகவல் மீட்டெடுத்தலில் ஆர்வம் காட்டத்துவங்கினார். தகவல் மீட்டெடுத்தல் என்பது அப்போது பிள்ளை பருவத்தில் இருந்த கருத்தாக்கம். ஏனெனில், மொழிபெயர்ப்புக்கான சொற்களஞ்சியத்தை (thesaurus) பயன்படுத்திய போது, அதை மொழிபெயர்ப்புக்கும் பயன்படுத்தலாம், சொற்களை வகைப்படுத்தவும் பயன்படுத்தலாம் என்பது ஜோன்சுக்கு புரிந்ததால், அதை கொண்டு தகவல் மீட்டெடுத்தலில் கவனம் செலுத்தினார்.
சொற்களஞ்சியம் கொண்டு தானியங்கியாக தகவல் மீட்டெடுத்தல் வழியை உருவாக்கலாம் என ஜோன்ஸ் எண்ணிணார். இதற்கான சோதனையில் ஈடுபட்டிருந்த போது தான் கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆனால், மையத்தில் கம்ப்யூட்டர் வசதி இல்லை. அங்கு பழைய கால அட்டை துளை இயந்திரமே இருந்தது. அதை கொண்டே அவர்கள் கம்ப்யூட்டர் சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
இந்நிலையில், ரோஜர் நீதம் தனது டாக்டர் பட்ட ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். இதன் ஒரு பகுதியாக பல்கலைக்கழகத்தின் எட்சாக் (EDSAC II) கம்ப்யூட்டரில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருந்தார். அவரும் தகவல் மீட்டெடுத்தலில் ஆர்வம் கொண்டிருந்தார். இயந்திர மொழி பெயர்ப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆய்வுக்கான தரவுகளை ஜோன்ஸ், தனது கணவர் நீதம் மூலம் கம்ப்யூட்டர் புரோகிராமாக மாற்றிக்கொண்டார். சொற்களை சேர்ப்பது, வகைப்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கான புரோகிராம்களை நீதம் உருவாக்கிக் கொடுத்தார்.
சொற்களஞ்சியங்கள்
நீதம்; உருவாக்கி இருந்த தானியங்கி சொற்கை வகைப்பாட்டை அவர் தனது ஆய்வுக்காக பயன்படுத்திக்கொண்டார். இந்த கட்டத்தில் தான், மொழியில் சொற்கள் பயன்படும் விதம் பற்றி எல்லாம் ஆழமாக யோசித்தார். இதன் மூலம் தொடர்புடைய சொற்களை எல்லாம் தானாக சேர்த்து வகைப்படுத்த முடியும் என நினைத்தார். இதுவே அவரது ஆய்வின் மையமாகவும் அமைந்தது. சொற்கள் உணர்த்தும் அர்த்தத்திற்கு ஏற்ப அவற்றை தானாக வகைப்படுத்த முடியும் என்பதாக அவரது ஆய்வு அமைந்திருந்தது.
இந்த கட்டத்தில் தான் மொழி தொடர்பான தரவுகளை மற்றவர்கள் புரோகிராமிங் செய்து கொடுப்பதை விட தானே புரோகிராமிங் செய்வது சிறப்பாக இருக்கும் என நினைத்தார். அதன் படி, தானே புரோகிராமிங் கற்றுக்கொள்ளவும் துவங்கினார். ஆய்வை முடித்த பிறகு, தகவல் மீட்டெடுத்தலில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். ஆனால், இடைப்பட்ட காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. குறிப்பாக, இயந்திர மொழிபெயர்ப்பு சாத்தியம் இல்லை என தீர்மாக்கும் வகையில் தொழில்நுட்ப அறிக்கை அமெரிக்க அரசிடம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
1964ல் ஜோன்ஸ் தானே புரோகிராமிங் செய்ய கற்றுக்கொண்டார். இதனிடையே, ஆக்ஸ்போர்டில் நடைபெற்ற கம்ப்யூட்டர் தொடர்பான உரைகளையும் ஆர்வத்துடன் கேட்டார். அவருக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் இன்னொரு ஆய்வுத் திட்டத்திலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆக, மொழி மையத்தின் ஆய்வில் பங்கேற்றபடி இந்த ஆய்விலும் ஈடுபட்டார். தகவல் மீட்டெடுத்தலுக்காக தானியங்கி சொற்களஞ்சியத்தை உருவாக்க முடியுமா என்பதே அவரது ஆய்வின் நோக்கமாக இருந்தது.
ஆய்வு பாதை
இந்த ஆய்வு காலம் முடியும் நிலையில் ஜோன்சிற்கு ராயல் சொசைட்டி சார்பாக ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அவரால் தடையின்றி தனது ஆய்வை தொடர முடிந்தது. மொழி ஆய்வு மையத்தில் இருந்து விடுவித்துக்கொண்டு முழு நேரமாக தகவல் மீட்டெடுத்தல் ஆய்வில் மூழ்கினார். ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு புத்தகமும் எழுதினார். ஆய்வு அவரை புதிய துறையான கணிணியியல் மொழியியலை நோக்கி இழுத்துச்சென்றது. இயற்கை மொழியை கம்ப்யூட்டர் கையாள்வது தொடர்பான நுட்பமாக இது அமைந்திருந்தது. ஆனால், இதற்கான நிதி உதவி கிடைக்கவில்லை.
1966ல் ஜோன்ஸ் ஆறு மாத காலம் அமெரிக்கா சென்று பணியாற்றினார். அவரது கணவர் நீதம், ரேண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றினார். அமெரிக்காவில் இருந்த காலத்தில் அங்கு கம்ப்யூட்டர் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுகளை எல்லாம் கவனித்தார். குறிப்பாக மொழி சார்ந்த ஆய்வுகளைக் கவனித்தார். இந்த காலகட்டத்தில் தான் மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கியின் ஆய்வுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.
பல திசைகளில் சுழன்றபடி ஜோன்ஸ், தகவல் மீட்டெடுத்தல் ஆய்வில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். தகவல் மீட்டெடுத்தல் தொடர்பான ஆய்வில் முன்னேற்றம் காண்பது சவாலாகவே இருந்தது. ஆவணங்களில் காணப்படும் வார்த்தைகளுக்கு ஏற்பவே மீட்டெடுத்தலுக்கான வழி அமைந்திருந்தது. இதற்கான பட்டியல்களை ஜோன்ஸ் பல்வேறு தரவுகளில் இருந்து உருவாக்கிக் கொண்டிருந்தார். ஆனால், இது தொடர்பான பயனர் அனுபவம் குறித்து அவரால் அதிகத் தகவல்களை அறிய முடியவில்லை.
அதிர்ஷ்டவசமாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட கிரேன்பீல்டு திட்டம் இத்தகைய தரவுகளைக் கொண்டிருந்தது. இதில் பயனர்கள் கோரிக்கைக்கு ஏற்ப தகவல் மீட்டெடுத்தல் அடிப்படையில் பதில்கள் அளிக்கப்பட்டன. இயற்கையான மொழியில் கேட்கப்படும் கேள்விக்கு ஏற்ப, ஆவணங்களில் இருந்து பதில் பெற்று தரப்பட்டது. இந்த முறையில் நிறைய சிக்கல்கள் இருந்தன. பின்னாளில் இணையத்தில் தேடலை மேற்கொண்ட போதும் இதே சிக்கல் நீடித்தது. ஆனால், இதற்கான அடிப்படை விடையை ஜோன்ஸ் கண்டறிந்தார்.
இணைய தேடல்
ஒரு பொருளில் தகவல்களைத் தேடும் போது குறிப்பிட்ட வார்த்தை கொண்ட ஆவணங்களை எல்லாம் பட்டியலிடலாம் என்றாலும், அந்த வார்த்தை பொருத்தமான பொருளில் வரும் ஆவணங்களைக் கண்டறிவதற்கான வழி இருக்கவில்லை. இந்த இடத்தில் தான் மொழியோடு சேர்ந்து தர்கம் மற்றும் பூலியன் தர்கத்தை ஜோன்ஸ் பயன்படுத்தினார். மேலும், புள்ளியியல் உத்திகளை மொழியியலிடன் இணைத்தார்.
அதாவது, மொழியில் வார்த்தைகள் தொடர்பு கொண்டிருக்கும் விதத்தை கம்ப்யூட்டர் கணக்கிடுவதற்கான வழியை கண்டறிந்தார். ஒவ்வொரு ஆவணங்களிலும் குறிப்பிட்ட சொல்லுக்கான எடையை கண்டறிய வழி செய்தார். இதற்காக இன்வர்ஸ் டாக்குமண்ட் பிரிக்வன்ஸி எனும் கருத்தாக்கத்தை முன்வைத்தார்.
தேடலுக்கு ஏற்ற வார்த்தைகள் எந்த ஆவணங்களில் எல்லாம் உள்ளன என்பதை கண்டறிவது முதல் படி என்றால், அந்த வார்த்தைகள் தொடர்பில்லாமல் அமைந்த ஆவணங்களை கண்டறிவது இரண்டாவது படியாக அமைந்தது. இதன்படி, குறிப்பிட்ட வார்த்தைகள் ஒரு ஆவணத்தில் எத்தனை முறை இடம்பெறுவது கணக்கிடப்பட்டு, அதன் பிறகு அந்த வார்த்தை பிற ஆவணங்களில் எத்தனை அரிதாக இருக்கிறது என்பதும் கணக்கிடப்பட்டு, இரண்டுக்கும் இடையிலான விகிதமும் அறியப்பட்டது.
இந்த முறையில் ஆவணங்களை பட்டியலிடும் போது தகவல்களை மீட்டெடுப்பது மேம்பட்டிருந்தது. இதுவே, இன்று வரை தேடியந்திரங்களுக்கான அடிப்படை உத்தியாக அமைகிறது. இந்த கருத்தாக்கத்தை விளக்கும் ஆய்வுக்கட்டுரையை ஜோன்ஸ் 1972ல் சமர்பித்தார். ஆனால், இந்த கருத்தாக்கம் உடனடியாக பெரிய அளவில் பயன்பாட்டிற்கு வரவில்லை. புத்தகப் பட்டியல் போன்றவற்றில் ஓரளவு பயன்படுத்தப்பட்டாலும், அடிப்படையில் நூலகங்கள் இதை ஏற்பதில் சுணக்கம் காட்டின.
கூகுளுக்கு முன்னோடி
அதிக எண்ணிக்கையிலான ஆவணங்களில் இருந்து தகவல்களைத் தேட புள்ளியியல் வழி சரி எனும் எண்ணம், எழுத்து வடிவமீட்டெடுத்தல் மாநாடுகளின் (TREC) மூலம் கவனம் பெறத்துவங்கியது. மேலும், இணையம் எனும் வலைப்பின்னலும் உருவாக்கப்பட்டு அதன் மீது வைய விரிவு வலை அறிமுகமான போது, இணைய தேடலுக்கான தேவை வலுவாக உணரப்பட்ட போது, ஜோன்ஸ் கண்டுபிடிப்பு கைகொடுத்தது. இதுவே அல்டாவிஸ்டா (Alta Vista) தேடியந்திரமாக உருவானது.
அல்டா விஸ்டா நிறுவனர் மைக் பரோஸ் அப்போது, யூஸ்நெட் (usenet) கோப்புகளை கையில் வைத்துக்கொண்டு அதிலிருந்து தகவல்களை எடுப்பதற்கான வழியை தேடிக்கொண்டிருந்தார். இதே கேள்வியை அவர் ஜோன்ஸ் கணவர் நீதமிடம் கேட்ட போது, எழுத்து வடிவில் தகவல் மீட்டெடுத்தல் தொடர்பாக ஜோன்ஸ் எழுதிய ஆய்வுக்கட்டுரையை அவரிடம் நீதம் அளித்தார்.
இந்த கட்டுரையை படித்த மைக் பரோஸ் அதன் அடிப்படையில் செயல்பட்டு அல்டாவிஸ்டா தேடியந்திரத்தை அறிமுகம் செய்தார். 1994ல் அறிமுகம் ஆன ’அல்டா விஸ்டா’ இணைய உலகின் முதல் நவீன தேடியந்திரம் மட்டும் அல்ல, முதல் முழு தேடியந்திரமாகவும் விளங்கியது.
சில ஆண்டுகளுக்குப் பின்னர் அறிமுகமான கூகுள் தேடியந்திரத்திலும் இதே உத்தியே அடிப்படையாக அமைந்தது.
ஜோன்ஸ் தொடர்ந்து கம்ப்யூட்டர் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வந்ததோடு, இத்துறையில் பெண்களின் பங்கேற்பு அதிகம் இருக்க வேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார். இணைய தேடலுக்கான அடிப்படையை உருவாக்கிக் கொடுத்தது உள்ளிட்ட சாதனைகளுக்காக பல்வேறு விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.