கம்ப்யூட்டர் பெண்கள் 12 - கணினியில் பட்டம் பெற்ற முதல் பெண்மணி!
கம்ப்யூட்டர்களுக்கான பேசிக் புரோகிராமிங் மொழி ஆக்கத்தில் முக்கிய பங்களிப்பு செய்ததோடு, கம்ப்யூட்டர்களின் எதிர்கால பயன்பாடு குறித்த தொலைநோக்கு மிக்கவராகவும் மேரி கெல்லர் விளங்கினார்.
கம்ப்யூட்டர் வரலாற்றில் மறக்கப்பட்ட எனியாக் பெண்கள் வரிசையில் தான் சகோதரி மேரி கெல்லரும் (Mary Kenneth Keller) வருகிறார். கெல்லர்; அமெரிக்காவில் கம்ப்யூட்டர் விஞ்ஞானத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்பதற்காக, முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்பட்டாலும், கம்ப்யூட்டர் வரலாற்றில் அவரது முக்கியப் பங்களிப்பு வெறும் அடிக்குறிப்பாகவே அமைந்திருப்பதை துரதிர்ஷ்டவசமானது என்றே சொல்ல வேண்டும்.
கம்ப்யூட்டர்களுடன் அவற்றின் மொழியில் பேசுவதற்கான ஆணைத்தொடர்களை எழுத லிஸ்ப், சி, ஜாவா, பைத்தான் என எண்ணற்ற புரோகிராமிங் மொழிகள் இருந்தாலும், இவற்றுக்கு எல்லாம் அடித்தளமாக அமைந்த மொழியாக ’பேசிக்’ (BASIC) கருதப்படுகிறது.
கம்ப்யூட்டர் மென்பொருள் வரலாற்றில் பேசிக் மொழியின் பங்களிப்பு நன்கறியப்பட்டது. ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கான அனைத்து தேவைகளுக்குமான குறியீட்டு மொழி (Beginners’ All-purpose Symbolic Instruction Code) என்பதன் சுருக்கமான பேசிக் மொழி, கம்ப்யூட்டர் பரவலாக்கத்திற்கான முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கம்ப்யூட்டர் மொழி
கோபால் (COBOL), ஃபோர்ட்டான் மொழிகளின் வரிசையில் உருவாக்கப்பட்ட பேசிக் மொழி, அதன் பெயருக்கு ஏற்ப அடிப்படையான மொழியாக அமைந்து, சாமானியர்களையும் கம்ப்யூட்டர் நோக்கி வர வைத்தது. சொல்லப்போனால் பின்னாளில் உண்டான தனிநபர் பயன்பாட்டிற்கான பர்சனல் கம்ப்யூட்டர் புரட்சிக்கான மூலக்காரணங்களில் ஒன்றாகவும் பேசிக் மொழி அமைகிறது.
பேசிக் மொழி உருவாக்கப்படுவதற்கு முன், கம்ப்யூட்டர்களுக்கான புரோகிராமிங்கை எழுதுவது என்பது விஞ்ஞானிகள் மற்றும் கணித மேதைகளுக்கு மட்டுமே சாத்தியமானதாகக் கருதப்பட்டது. கம்ப்யூட்டருக்கு புரியக்கூடிய பூஜ்ஜியம் மற்றும் ஒன்று ஆகிய இலக்கங்களில் மட்டுமே பேச வேண்டும் என்பதால், கம்ப்யூட்டர்கள் இயங்கும் விதம் பற்றி அறிந்தவர்கள் மட்டுமே அவற்றுக்கான நிரல்களை எழுத முடிந்தது.
மேலும். ஆரம்ப கால கம்ப்யூட்டர்கள் அளவில் பெரிதாகவும், செயல்பாட்டில் சிக்கலானதாகவும் இருந்ததால் அவற்றுக்கான ஆணைத்தொடரை எழுதுவதும் சிக்கலாகவே இருந்தது. பஞ்ச் கார்டு எனப்படும் துளையிடும் அட்டைகளில் புரோகிராம்களை எழுதி, கம்ப்யூட்டரை இயக்குபவர் மூலம் அவற்றை சமர்பிக்க வேண்டும் நிலை இருந்தது.
பேசிக் மொழி
பேசிக் மொழி இந்த நிலையை மாற்றிக்காட்டியது. கம்ப்யூட்டருக்குள் நுழைவதை ’ஹலோ’ என்றும் வெளியேறுவதை ’குட் பை’ என்றும் குறிப்பிட்ட இந்த மொழி, நிரல் எழுதுவதை எளிதாக்கியதோடு, எல்லோருக்கும் சாத்தியமாக்கியது. இதன் காரணமாக, ஆர்வம் உள்ள எவரும் புரோகிராமிங் மொழி கற்றுக்கொண்டு, நிரல்களை எழுத முடிந்தது.
இந்த எளிமை காரணமாகவே பர்சனல் கம்ப்யூட்டர்கள் அறிமுகமான போது, தொழில்நுட்ப ஆர்வம் கொண்டவர்கள் அதில் நிரல்களை உருவாக்குவதும் சாத்தியமானது. இத்தகைய தொழில்நுட்பம் ஆர்வம் கொண்டவர்களில் ஒருவரான பில் கேட்ஸ் எனும் இளைஞர் பேசிக் மொழியை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வடிவங்களை உருவாக்கி அதன் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஸ்தாபித்தார்.
கம்ப்யூட்டர் பயன்பாட்டை பரவலாக்குவதற்கு அடிப்படையாக அமைந்த பேசிக் மொழியை உருவாக்கிய பிரம்மாக்களாக ஜான் கெமினி மற்றும் தாமஸ் கர்ட்ஸ் (John G. Kemeny- Thomas E. Kurtz) கருதப்படுகின்றனர். கணித பேராசிரியர்களான இந்த இருவரும் தான், வரும் காலத்தில் கம்ப்யூட்டர் கல்வியறிவு என்பது இன்றியமையாமல் இருக்கப்போகிறது எனும் தொலைநோக்கு பார்வையோடு, அனைவரும் கம்ப்யூட்டரை பயன்படுத்த வழி செய்வதற்கான பேசிக் மொழியை உருவாக்கினர்.
அதிலும் குறிப்பாக, இல்ல கம்ப்யூட்டர்கள் வருவதற்கு முன்பாக, அளவில் பெரிய கம்ப்யூட்டர்களை பலரும் அணுகக் கூடிய வகையில், டைம் ஷேரிங் எனும் நேர பகிர்வு அடிப்படையில் செயல்படக்கூடிய பேசிக் மொழியை அறிமுகம் செய்தனர்.
கணித மேதைகள்
கம்ப்யூட்டர் வரலாற்றில், பேசிக் மொழி மற்றும் அதை உருவாக்கிய பேராசிரியர்கள் இருவருமே கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்றாலும், இந்த சாதனையில் விடுபட்டவராக சகோதரி மேரி கெல்லர் இருப்பதை பெரும்பாலானோர் அறிவதில்லை.
பேசிக் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு பற்றி பேசும் கட்டுரைகளில் எல்லாம், பேராசிரியர்கள் கெமினி மற்றும் கர்ட்ஸ் பெயர் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் இவர்களுடன் இணைந்து பணியாற்றிய மேரி கெல்லர் பெயர் எங்கும் குறிப்பிடப்படுவதில்லை. உண்மையில் மேரி கெல்லர் தொடர்பான கட்டுரைகள் தவிர பேசிக் தொடர்பான கட்டுரைகளில் அவரது பெயர் இடம்பெறுவதேயில்லை.
கெல்லரை அறியாதவர்கள் எவருக்கும் அவர் பேசிக் மொழி உருவாக்கத்தில் முக்கியப் பங்களிப்பு செய்திருக்கிறார் எனும் தகவலே தெரிய வாய்ப்பில்லை. கம்ப்யூட்டர் துறையில் பெண்கள் பங்களிப்பு குறைத்து மதிப்பிட்டு வருவதன் இன்னொரு அடையாளமாகவே கெல்லரின் கதையும் அமைகிறது. அதோடு, கெல்லர் வாழ்க்கை தொடர்பான பதிவுகளும் அற்ப சொற்பமாகவே இருக்கிறது.
கெல்லர், அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள க்ளிவ்லாண்ட் 1913ம் ஆண்டில் பிறந்தார். 1932ல் அவர் துறவறம் மேற்கொண்டு கிறிஸ்து சகோதரியானார். இறையியலில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த கெல்லருக்கு கல்வி மீதும் ஆர்வம் இருந்தது, இதன் பயனாக கணிதத்தில் பட்டம் பெற்றவர் பின்னர் கணிதம் மற்றும் இயற்பியலில் முதுகலை பட்டமும் பெற்றார்.
முதல் பெண்மணி
இதற்கு பத்தாண்டுகளுக்குப் பிறகு அவர் கம்ப்யூட்டர் அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றார். இத்துறையில் டாக்டர் பட்டம் பெறும் முதல் பெண்மணி எனும் சிறப்பையும் பெற்றார். இடைப்பட்ட காலத்தில் தான் அவர் பேசிக் மொழி உருவாக்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். 1958ல், தேசிய அறிவியல் அறக்கட்டளை பயிலறங்கிலும், டார்ட்மவுத் கல்லூரி கம்ப்யூட்டர் மையத்திலும் பணியாற்றும் வாய்ப்பு கெல்லருக்கு கிடைத்தது.
டார்ட்மவுத் கல்லூரி அப்போது மாணவர்களை மட்டுமே அனுமதித்து வந்தது. மாணவிகளை அனுமதிப்பதில்லை எனும் விதிமுறையை தளர்த்தி, கம்ப்யூட்டர் மையத்தில் ஆய்வாளராக பணியாற்ற கெல்லருக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது.
டார்மவுத் கல்லூரி கம்ப்யூட்டர் மையத்தில் பேராசிரியர்கள் கெமினி மற்றும் கர்ட்ஸ், கம்ப்யூட்டர் பயன்பாட்டை பரவலாக்கும் நோக்கத்துடன் பேசிக் மொழி திட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தத் திட்டத்தில் ஆய்வாளராக கெல்லர் பங்கேற்று தனது பங்களிப்பை வழங்கினார். கம்ப்யூட்டர்கள் அனைவராலும் பயன்படுத்தப்பட வேண்டும் எனும் இலக்கு கெல்லருக்கும் இருந்தது அவரை இந்தத் திட்டத்தில் உற்சாகத்துடன் ஈடுபட வைத்தது.
கம்ப்யூட்டர் முன்னோடி
இதற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு கெல்லர் தனது 52வது வயதில் கம்ப்யூட்டர் அறிவியலில் டாக்டர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தார். கம்ப்யூட்டர் உருவாக்கும் வார்ப்புகள் தொடர்பாக அமைந்திருந்த அந்த ஆய்வில் அல்கோரிதம் பயன்பாடு பற்றி அவர் விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். போர்ட்ர்டான் மொழியை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு அமைந்திருந்தது.
கெல்லரின் சாதனைகளை விட முக்கியமான விஷயம், கம்ப்யூட்டர் பயன்பாடு தொடர்பாக அவருக்கு இருந்த நம்பிக்கையே. கல்வி கற்பித்தலில் கம்ப்யூட்டர் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதில் தீவிர நம்பிக்கைக் கொண்டிருந்தவர், தகவல்கள் பரவலாக்கம் பற்றியும் ஆழமான புரிதலை கொண்டிருந்தார்.
”நாம் தகவல் வெடிப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். தகவல்களை எளிதாக அணுக முடியாவிட்டால் தகவல்களால் ஒரு பயனும் இல்லை,” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
“முதல் முறையாக இயந்திரத்தனமாக நம்மால் சிந்திக்கும் முறையை உருவாக்க முடிந்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான நம் ஆய்வை தொடர வேண்டும்.
மேலும், மனிதர்கள் கல்வி கற்பதிலும் கம்ப்யூட்டர்கள் உதவும்,” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் அறிவியலை கற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்றும் அவர் கணித்திருக்கிறார்.
இந்த நம்பிக்கையோடு, கம்ப்யூட்டரின் எதிர்கால பயன்பாட்டை உத்தேசித்து கத்தோலிக்க மாணவர்களுக்கான கிளார்க் கல்லூரியில் கம்ப்யூட்டர் அறிவியல் துறையை அவர் உருவாக்கி வழிகாட்டினார். மேலும், கம்ப்யூட்டர் மற்றும் அறிவியல் துறைகளில் பெண்களின் பங்கேற்பும், பங்களிப்பும் அதிகம் இருக்க வேண்டும் என்பதில் அவர் நம்பிக்கை கொண்டவராக இருந்தார்.