கம்ப்யூட்டர் பெண்கள் 13 - பிசி புரட்சிக்கு அடித்தளம் அமைத்த ‘மேரி வில்க்ஸ்’
பர்சனல் கம்ப்யூட்டர்களுக்கான இயங்கு தளம் (ஓ.எஸ்) எனும் போது பில் கேட்சும் அவரது விண்டோசும் நினைவுக்கு வந்தாலும், பில் கேட்சுக்கு முன்பாகவே பர்சனல் கம்ப்யூட்டர்களுக்கான முதல் இயங்கு தளத்தை உருவாக்கிய முன்னோடியாக மேரி ஆலன் வில்க்ஸ் விளங்குகிறார். அவரது வியக்க வைக்கும் கதை இது:
மேரி வில்க்ஸ் (Mary Allen Wilkes) மென்பொருள் துறையில் நுழந்தது தற்செயலானது என்பது மட்டும் அல்ல, அவர் இந்தத் துறையிலும் தற்காலிகமாகவே இருந்தார். வழக்கறிஞராக வேண்டும் என்பதே அவரது முதல் கனவாக இருந்ததால், மென்பொருள் துறையில் பதினொரு ஆண்டுகள் செயல்பட்ட நிலையில், அவர் தனது மூல கனவை தேடி சென்று விட்டார். அதன் பிறகு வழக்கறிஞராக முத்திரை பதித்தார்.
ஆனால், இடைப்பட்ட காலத்தில் மென்பொருள் துறையில் மேரி வில்க்ஸ் செய்த முக்கிய பங்களிப்பிற்காக மென்பொருள் முன்னோடிகளில் ஒருவராக போற்றப்படுகிறார். உலகின் முதல் பர்சனல் கம்ப்யூட்டர் எனக் கருதப்படும் கம்ப்யூட்டருக்கான இயங்கு தளத்தை உருவாக்கி கொடுத்தவர் என்ற முறையில் பிசி புரட்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்களில் ஒருவராக வில்க்ஸ் போற்றப்படுகிறார்.
பொதுவாக பிசி என பிரபலமாக குறிப்பிடப்படும் பர்சனல் கம்ப்யூட்டர் புரட்சி பற்றி பேசப்படும் போதெல்லாம், இந்த கம்ப்யூட்டர்களுக்கான இயங்கு தளத்தை உருவாக்கிக் கொடுத்ததாக அறியப்படும் பில் கேட்ஸ் பெயரே தவறாமல் குறிப்பிடப்பட்டாலும், பில் கேட்சிற்கு முன்பாகவே மேரி வில்க்ஸ் பிசிக்கான முதல் இயங்கு தளத்தை உருவாக்கி கொடுத்தார்.
லின்க் எனப்படும் கம்ப்யூட்டருக்கான இயங்குதளத்தை உருவாக்கிக் கொடுத்ததோடு, இந்த காலத்தில் அந்த கம்ப்யூட்டரை தன் இருப்பிடத்திற்கே வரவைத்து பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றார். இதன் மூலம், இன்று பரவலான பணி கலாச்சாரமாக கருதப்படும் வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பை கம்ப்யூட்டர் உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவராகவும் அறியப்படுகிறார்.
கம்ப்யூட்டர்களை தனிநபர்கள் அணுகுவதற்கான வாய்ப்பே வெகு அரிதாக இருந்த காலத்தில், மேரி வில்கிஸ் தன் வீட்டிற்கே கம்ப்யூட்டரை வர வைத்ததார் என்பதில் இருந்தே அவரது முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம். வீடுகளில் கம்ப்யூட்டர் பயன்பாடு சகஜமாவதற்கு வித்திட்ட கம்ப்யூட்டர் திட்டத்தில் முக்கியப் பங்காற்றியதால் வில்க்ஸிற்கு இந்த சலுகை அளிக்கப்பட்டதை பொருத்தமாகவே கருதலாம்.
இளமைக்காலம்
மேரி வில்க்ஸ், அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 1937ம் ஆண்டு பிறந்து வளர்ந்தார். அங்கிருந்த வெல்லஸ்லி கல்லூரியில் 1959ல் அவர் பட்டம் பெற்றார். ஒவ்வொருக்கும் ஒரு கனவு இருக்கும் என்பது போல, வில்க்ஸிற்கு அப்போது வழக்கறிஞராக வேண்டும் எனும் கனவு இருந்தது. ஆனால், அவரது குடும்பத்தினரும், தோழிகளும் வழக்கறிஞர் தொழில் பெண்களுக்கு ஏற்றது இல்லை என கூறி வந்தனர். வழக்கறிஞருக்கு படித்தாலும், பெண்கள் அங்கு அதிகபட்சம் குமாஸ்தா போல தான் பணியாற்ற முடியும் எனக் கூறி, வேறு துறையை தேர்வு செய்யுமாறு வலியுறுத்தினர்.
வில்க்ஸ் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது புவியியல் ஆசிரியர், வில்க்ஸ் பின்னாளில் நீ கம்ப்யூட்டர் புரோரகமாகி விடு எனக் கூறியிருந்தார். அப்போது வில்க்ஸ் புரோகிராமர் என்றால் என்ன என்றும் அறிந்திருக்கவில்லை. அதோடு கம்ப்யூட்டர் என்றால் என்ன என்றும் அறிந்திருக்கவில்லை. எனவே, ஆசிரியர் கூறியது பற்றி அவருக்கு எதுவும் புரியவில்லை.
ஆனால், அந்த காலகட்டத்தில் டிஜிட்டல் கம்ப்யூட்டர்கள் என்பவை பெரும்பாலும் ஆய்வு நிலையங்களிலும், பெரிய அரசு அலுவலகங்களிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்ததால், பொதுமக்கள் மத்தியில் கம்ப்யூட்டர் அதிகம் அறிமுகம் ஆகவில்லை.
இப்போது பட்டதாரியாக வில்க்ஸிற்கு சட்டப் படிப்பில் தனக்கு எதிர்காலம் இல்லை என்பது புரிந்த நிலையில், பள்ளி ஆசிரியர் கூறிய ஆலோசனையை நினைத்துப்பார்த்தார். கல்லூரியில் ஒரு சிலர் கம்ப்யூட்டர்கள் தான் எதிர்காலம் எனப் பேசுவதையும் அவர் கேட்டிருக்கிறார். எம்.ஐ.டி., பல்கலையில் ஒரு சில கம்ப்யூட்டர்கள் இருப்பதையும் அவர் அறிந்திருந்தார்.
புரோகிராமர் வாய்ப்பு
ஆக, கம்ப்யூட்டர் பற்றி எந்த புரிதலும் இல்லாத நிலையில், பட்டப் படிப்பை முடித்ததும் எம்.ஐ.டி பலகலைக்குச் சென்று இங்கு புரோகிரமாக ஏதேனும் வேலை கிடைக்குமா எனக் கேட்டார். கேட்டது கிடைக்கும் என்பது போல, பல்கலையில் அவருக்கு புரோகிராமராக வேலையும் கிடைத்தது.
இப்போது திரும்பிப் பார்க்கையில், புரோகிராமிங் என்றால் என்ன என்றே தெரியாத ஒருவருக்கு புரோகிராமராக வேலை கிடைத்தது ஆச்சர்யம் அளிக்கலாம். ஆனால், அந்த காலத்தில் புரோகிராம் எழுதுவதில் அனுபவம் உள்ளவர் என்று யாரும் இருக்கவில்லை. ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள் பணி சூழலில் புரோகிராமிங்கை தாங்களாக கற்றுக்கொள்ளும் நிலையே இருந்தது. மேரி வில்க்சும் இவ்வாறே தற்செயலாக புரோகிராமர் ஆனார்.
கம்ப்யூட்டர் வரலாற்றில் புரோகிராம் எழுதுவது உள்ளிட்ட மென்பொருள் சார்ந்த பணி துவக்கத்தில் இருந்தே பெண்கள் இயல்பாக ஈடுபடும் வகையில் அமைந்திருந்ததால், மேரி வில்க்ஸ் புரோகிராமானதும் ஒரு விதத்தில் பொருத்தமானதாகவே கருதலாம். ஆனால், புரோகிராமிங் அடிப்படைகளைக் கற்றுக்கொள்வதில் வில்க்ஸிற்கு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. அவர் தத்துவத்தில் பட்டம் பயின்றிருந்தாலும் தர்கவியல் பாடத்தையும் படித்திருந்தார்.
கம்ப்யூட்டர் அடிப்படைகளைக் கற்றுக்கொள்வதில் தர்கவியல் அறிவு அவருக்குக் கைகொடுத்தது. கோடிங் குறிப்புகளை உள்வாங்கிக் கொள்வதும் எளிதாக இருந்தது. வெகு விரைவிலேயே அவர் புரோகிராம் எழுதுவதில் தேர்ச்சி பெற்றார். ஐபிஎம் 704 கம்ப்யூட்டரில் தான் அவர் பணியாற்றினார். இந்த மெயின்பிரேம் கம்ப்யூட்டரில் புரோகிராமிங் எழுதுவது என்பது கடினமான செயலாக இருந்தது.
மெயின்பிரேம் கம்ப்யூட்டர்களில் விசைப்பலகையோ அல்லது திரையோ கிடையாது. எனவே புரோகிராம்களை காகிதத்தில் எழுதி, பின்னர் பஞ்சர் கார்டு முறையில் உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் அச்சு வடிவில் பார்க்கும் போது தான் புரோகிராமின் பலன் என்ன என்று தெரியும். புரோகிராமை எழுதி அதை பஞ்ச் கார்டு வடிவில் மாற்ற ஆப்பரேட்டரிடம் கொடுக்க வேண்டும்.
பல நேரங்களில் தனது புரோகிராம் எதிர்பார்த்த பலன் அளிக்காததை வில்க்ஸ் எதிர்கொண்டார். எங்கு தவறு நடந்தது என்பதை அறிய தான் எழுதிய குறியீடுகளை வரிக்கு வரி மீண்டும் படித்துப்பார்த்தார். இதன் காரணமாக அவரால் தவறுகளை கண்டறிய முடிந்ததோடு, குறியீடுகள் எப்படி இருக்க வேண்டும் என கற்பனை செய்து பார்க்கவும் முடிந்தது.
ஐபிஎம் 704 கம்ப்யூட்டர் அதிகபட்சம் 4,000 வார்த்தைகள் கொண்ட குறியீடுகளை மட்டுமே கையாளக்கூடியதாக இருந்தது. எனவே, நிரல்களை எழுதுபவர்கள் வார்த்தை சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. பின்னாளில், இயங்கு தள உருவாக்கத்தில் இந்த அனுபவமே அடித்தளமாக அமைந்தது.
லின்க் கம்ப்யூட்டர்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1961ல் லின்க் எனும் கம்ப்யூட்டர் திட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பு வில்க்ஸிற்கு கிடைத்தது. லைப்ரரி இன்ஸ்ட்ருமண்ட் கம்ப்யூட்டர் என்பதன் சுருக்கமான லின்க் கம்ப்யூட்டரை (LINC computer) அந்த காலத்தில் நிகழ்ந்த பாய்ச்சல் என்று தான் கூற வேண்டும்.
ஏனெனில், கம்ப்யூட்டர் வரலாற்றில் புதிய வகையாக அமைந்த பர்சனல் கம்ப்யூட்டர்களின் தொடக்கமாக லின்க் கம்ப்யூட்டர் அமைந்தது. கம்ப்யூட்டர் வளர்ச்சியிலும், செயல்பாட்டிலும் பெரும் முன்னேற்றம் நிகழ்ந்திருந்தாலும், அதுவரையான கம்ப்யூட்டர்கள் அளவில் பெரிதாக இருந்தன. மேலும், கம்ப்யூட்டர் தொடர்பான விஷயங்களை அறிந்தவர்கள் மட்டுமே அவற்றை இயக்கும் நிலை இருந்தது.
பெரும்பாலும் கம்ப்யூட்டர்கள் இருந்த பகுதிகளில், இங்கு நுழைய அனுமதி இல்லை எனும் எச்சரிக்கை வாசகம் எழுதப்பட்டும் நிலை இருந்தது. கம்ப்யூட்டர் வடிவமைப்பாளர்கள், ஆப்பரேட்டர்கள், புரோகிராமர்கள் மட்டுமே கம்ப்யூட்டரை அணுகும் வாய்ப்பை பெற்றிருந்தனர்.
கம்ப்யூட்டரை உருவாக்கும் மற்றும் இயக்குவதற்கான செலவும், இத்தகைய நிலையை ஊக்குவித்தன. கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்திய ஐபிஎம் நிறுவனமும் இந்த நிலையையே விரும்பியது. ஆய்வகங்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்பாட்டிற்கான மெயின்பிரேம் கம்ப்யூட்டரிலேயே ஐபிஎம் கவனம் செலுத்தியது.
பிசி உதயம்
இந்தப் பின்னணியில் தான், கம்ப்யூட்டர் பரவலாக பயன்பாட்டிற்கு வர வேண்டும் எனும் தொலைநோக்குடன் செயல்பட்டவர்களும் இருந்தனர். கம்ப்யூட்டரை நேர பகிர்வு அடிப்படையில் பயன்படுத்துவது எனும் யோசனை பிறந்தது இப்படி தான். அதே நேரத்தில் நேர பகிர்வு அடிப்படையில் கம்ப்யூட்டரை பயன்படுத்துவது அதை நேரடியாக அணுகுவதற்கு ஏற்றது அல்ல எனும் சிந்தனையும் இருந்தது.
எம்.ஐ.டி பல்கலைக்கழக்கத்தின் லிங்கன் ஆய்வகத்தில் இருந்த வெஸ்லி கிளார்க் எனும் கம்ப்யூட்டர் விஞ்ஞானி, நேரடி அணுகலுக்கு ஏற்ற கம்ப்யூட்டரை உருவாக்க விரும்பினார். கடற்படை உதவியோடு, TX-0, TX-2 ஆகிய இரண்டு கம்ப்யூட்டர்களை உருவாக்கியிருந்த கிளார்க்கிற்கு கம்ப்யூட்டர்கள் மேலும் எளிதாக அணுகக் கூடியதாக இருக்க வேண்டும் எனும் எண்ணம் இருந்தது.
ஆய்வாளர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில், கம்ப்யூட்டர் என்பது இன்னொரு ஆய்வக சாதனம் போல இருக்க வேண்டும் என நினைத்தார். உயிரி மருத்துவத் துறை விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளை கம்ப்யூட்டர் உதவியோடு மேற்கொள்வதற்காக இத்தகைய கம்ப்யூட்டரை அவர் உருவாக்க தீர்மானித்தார்.
ஆரம்பத் தடைகளுக்கு பிறகு, இத்தகைய கம்ப்யூட்டரை உருவாக்குவதற்கான அனுமதி அவருக்குக் கிடைத்தது. புதிய கம்ப்யூட்டர் எளிதாக புரோகிராம் செய்யும் வகையில், எளிதாக இயக்கக் கூடியதாக, எளிதாக பராமரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். முக்கியமாக உயிரி ஆய்வுக்கான தகவல்களை நேரடியாக விஞ்ஞானிகள் உள்ளீடு செய்யும் சாத்தியம் இருக்க வேண்டும் என விரும்பினார். இந்த கம்ப்யூட்டருக்கான விலையில் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதும் அவர் மனதில் இருந்த வரையரையாக அமைந்தது.
இவற்றை எல்லாம் பூர்த்தி செய்யும் வமையில் லின்க் கம்ப்யூட்டர் உருவானது. இந்த கம்ப்யூட்டர் ஒரு அறைக்குள் வைக்கக் கூடியதாக இருந்ததோடு, நேரடி இயக்கத்திற்கான விசைப் பலகை மற்றும் தகவல்களைக் காண்பதற்கான மானிட்டர் திரையை கொண்டிருந்தது. மெயின்பிரேம் கம்ப்யூட்டர்களை விட அளவில் சிறியதாக இருந்ததோடு, விசைப்பலகை மற்றும் திரை ஆகிய அம்சங்கள் இந்த கம்ப்யூட்டரின் சிறப்பாக இருந்தது.
மேலும், கம்ப்யூட்டருடன் செயல்படக்கூடிய தனி பட்டைகளையும் கொண்டிருந்தது. கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப்படும் தகவல்களை சேமித்து வைக்கும் வசதி கொண்டதாக இந்த பட்டைகள் அமைந்திருந்தன. கம்ப்யூட்டரை இயக்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கான பட்டையை கொண்டிருக்கலாம். இந்த அம்சங்கள் எல்லாம், தனிநபர் பயன்பாட்டிற்கான பர்சனல் கம்ப்யூட்டர்களின் ஆதாரமாக அமைந்தன.
இயங்கு தளம்
வீடுகளில் செயல்படக்கூடியதாக லின்க் கம்ப்யூட்டர் அமையாவிட்டாலும், அத்தகைய கம்ப்யூட்டர்கள் தொடர்ந்து உருவாவதற்கான அடிப்படையாக அமைந்தது. வன்பொருள் நோக்கில் பெரும் சாதனையாக அமைந்த இந்த கம்ப்யூட்டருக்கான மென்பொருளை உருவாக்கும் பணி தான் மேரி வில்க்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. விஞ்ஞானிகள் தாங்களாகவே நேரடியாக இந்த கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டும் எனில், அதற்கான நிரல்களை வேறு யாரோ உருவாக்குத்தரும் தேவை இல்லாமல் செயல்பட கம்ப்யூட்டருக்கான அடிப்படை மென்பொருளான இயங்குதளம் தேவைப்பட்டது.
லேப் 6 (LAP6) எனும் பெயரில் இந்த இயங்குதளத்தை வில்க்ஸ் உருவாக்கிக் கொடுத்தார். 2048 வார்த்தைகள் கொண்ட இந்த மென்பொருள் வரி வடிவத்தில் தகவல்களை திருத்துவது, தானியங்கி பராமரிப்பு, நிரல் எழுதும் தன்மை ஆகியவற்றை கொண்டிருந்தது. எனவே விஞ்ஞானிகள் இதில் நேரடியாக ஆய்வு செய்வது சாத்தியமானது. இதற்கான பணியில் அவரும் குழுவினரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தனர். மென்பொருளை உருவாக்குவதற்காக, கம்ப்யூட்டர் வன்பொருளை புரிந்து கொள்வதில் அவர்கள் முதலில் கவனம் செலுத்தினர்.
கம்ப்யூட்டருடன் நேரடியாக பேசுவதற்கான இடைமுகமாக இந்த மென்பொருள் அமைந்திருந்தது, இதை கொண்டு உயிரியல் ஆய்வு தகவல்களை கையாள முடிந்த அற்புதத்தை பார்த்த விஞ்ஞானி ஒருவர் இந்த இயந்திரத்தை சுற்றி ஆனந்த நடனம் ஆடியதாகவும் பதிவாகி இருக்கிறது.
இதனிடையே, வில்க்ஸ் உலக நாடுகளை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பைப் பெற்றார். 1964ல் அவர் திரும்பி வந்த போது இயங்கு தளத்தை முடித்து தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால், ஆய்வகம் அப்போது வேறு நகருக்கு மாற்றப்பட்டிருந்தது. தனது இருப்பிடத்திலேயே வில்க்ஸ் பணியாற்ற விரும்பியதால், அவரது வீட்டிற்கே லின்க் கம்ப்யூட்டர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. வீட்டில் இருந்தே இயங்கு தளத்தை முழுமையாக உருவாக்கிக் கொடுத்தார். கம்ப்யூட்டர் உலகில் இன்று பிரலமாக இருக்கும் வீட்டில் இருந்தே பணியாற்றும் கலாச்சாரத்தின் துவக்கப் புள்ளியாக இது கருதப்படுகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட லின்க் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இது ஆய்வுலகிற்கு உதவியாக இருந்ததோடு, தனிநபர் கம்ப்யூட்டர்களுக்கான தேவையையும் உருவாக்கிக் கொடுத்தது. சில ஆண்டுகளில் வில்க்ஸ் கம்ப்யூட்டர் துறையில் இருந்து விலகி சட்டத்துறைக்கு சென்று விட்டார். அந்தத் துறையிலும் அவர் முத்திரை பதித்தார்.
இதனிடையே, லின்க் கம்ப்யூட்டருக்கான மென்பொருள் உருவாக்கம் பற்றி அவர் எழுதிய ஆய்வுக்கட்டுரை, இந்த கம்ப்யூட்டரின் சிறப்புகளை மட்டும் அல்லாது அதன் இயங்குதள செயல்பாடு பற்றியும் தெளிவாக விளக்குவதாக அமைந்திருந்தது. எதிர்கால கம்ப்யூட்டர் திசை குறித்து வில்க்ஸிற்கு இருந்த புரிதலின் அடையாளமாகவும் இந்த கட்டுரை உள்ளது.