தினமும் 12 கி.மீ நடந்தே பயணம்: ‘கொரோனா வாரியர்’ குன்னூர் ஆசிரியைக்கு மத்திய அரசு விருது!
கொரோனா வாரியார் வெண்ணிலா!
கொரோனா காலத்திலும் கூட சிரமங்களைப் பொருட்படுத்தாமல், மக்களுக்காக தன்னலமற்று செயல்பட்ட ‘கொரோனா வாரியர்ஸ்’ என மத்திய அரசு அங்கீகரித்து வழங்கிய விருதுகளில் வெண்ணிலாவுக்கு அவ்விருது கிடைத்துள்ளது. அப்படி அவர் என்னதான் செய்தார் என்பது குறித்து பார்ப்போம்.
நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகில் உள்ள காட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் வெண்ணிலா. இவர், கடந்த 3 ஆண்டுகளாகப் புதுக்காடு பழங்குடியின கிராமத்தின் அங்கன்வாடி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நேரத்திலும், வனத்தையொட்டிய பகுதிகளான புதுக்காடு, கீழ் சிங்காரா ஆகிய கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்களின் வீட்டுக்கே சென்று ஊட்டச்சத்து உணவுப் பொருள்களை வழங்கினார்.
வெண்ணிலா தங்கியிருக்கும் இடத்திலிருந்து அந்த கிராமம் சுமார் 12 கி.மீட்டர் தொலைவுடையது. அதை பொருட்படுத்தாமல், நாள்தோறும் 12 கி.மீ தொலைவை நடந்தே கடந்தார். மக்களுக்கு ஊட்டச்சத்து உணவு தவறிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதுமட்டுமா செய்தார்...
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருந்த இந்த மக்களின் கிராமத்திலேயே ஊட்ட உணவுகளைச் சமைத்து வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்திய அங்கன்வாடி ஊழியர்கள் குழுவில் வெண்ணிலாவும் இடம் பெற்றார்.
இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தன்னலம் பாராமல் சிறப்பாகப் பணியாற்றிய பெண்களைக் கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு விருதுகளை அறிவித்தது. அதன்படி,
“சிறந்த சேவையாற்றிய வெண்ணிலாவைப் பாராட்டிய தேசிய மகளிர் ஆணையம் விருதுக்காக அவருக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி டெல்லிக்குச் சென்ற வெண்ணிலாவுக்கு ’கோவிட் விமன் வாரியர்ஸ் - த ரியல் ஹீரோஸ் (Covid Women Warriors, the Real Heroes)' என்ற விருது வழங்கப்பட்டது.”
இந்த விருதை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா வழங்கினார். இப்போது வெண்ணிலாவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இது குறித்து பேசிய வெண்ணிலா,
" மக்களின் சந்தோஷம்தான் என்னுடைய சந்தோஷம். கொரோனா ஊரடங்கு காலத்தை மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பாக கருதி அதை பயன்படுத்திக் கொண்டேன். அந்த மக்களும் என் மீது அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்தினர். நான் எதையும் எதிர்பார்க்காமல் எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை உற்சாகமாகச் செய்தேன். விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.
credit - vikatan | தொகுப்பு: மலையரசு