வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்ப பதிவு ஆரம்பம்!
இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஊரடங்கால் மாட்டிக்கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், யாத்திரிகர்கள் தமிழகம் திரும்ப வழி செய்துள்ளது தமிழக அரசு.
ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் சென்று சிக்கியுள்ளவர்கள் தமிழகம் திரும்பி வர, தமிழக அரசு வெளியிட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23ம்தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. இதனால், தேசிய அளவில் விமானச் சேவை, ரயில் சேவை மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இது தற்போது மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், வெளி மாநிலங்களில் மாட்டிக்கொண்ட மக்கள் வீடு திரும்ப காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், யாத்திரிகர்கள் உள்ளிட்டோர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஊரடங்கால் அங்கேயே மாட்டிக்கொண்டு, சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அப்படி தவிப்போர் தமிழகம் திரும்ப வழி செய்துள்ளது தமிழக அரசு.
இந்தியாவின் இதர மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணையதளத்தில் முகப்பொல் உள்ள ‘Return to Tamil Nadu' என்ற இணையப் படிவம் (பச்சை நிற பதிவு பட்டன்) வாயிலாகப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் திரும்ப விருப்பம் தெரிவிப்போர் தங்களின் பெயர், விவரம், மற்றும் தற்போதுள்ள மாநிலம், தமிழ்நாட்டில் அவர்கள் திரும்ப இருக்கும் முகவரி, அதற்கான காரணம் உள்ளிட்டவற்றை உரிய அடையாள அட்டையுடன் பூர்த்தி செய்தால், அவர்கள் தமிழகம் வர ஏற்பாடு செய்யப்படும்.
தமிழ்நாட்டிற்குள் வரவிருக்கும் பயணிகள் மற்றும் அவர்களின் குடும்ப நலனை கருதி பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்படுவீர்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தோர், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது ஊரடங்கில் காரணமாகத் தங்கியுள்ளனர். அவர்கள் குறித்த விவரத்தை nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் (பழுப்பு நிற பதிவு பட்டன்) வாயிலாகப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.