யாரெல்லாம் வீட்டிலேயே கொரோனா சிகிச்சை பெறலாம்? ஹோம் குவாரன்டைனுக்கு எப்படி தயாராவது?
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், யாரெல்லாம் வீட்டிலேயே சிகிச்சை பெறலாம். வீட்டில் தனிமைபடுத்திக் கொள்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து நோய் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அச்சுறுத்தி வரும் நிலையில் பயம் காரணமாக பலர் தேவையின்றியும் கூட மருத்துவமனையில் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா சிகிச்சை மையங்களில் பலரும் யோகா செய்தல், நூலகம் சென்று படித்தல் என்று இருப்பதை காண முடிகிறது. இயல்பாக இருக்கும் நிலையில் இருப்பவர்கள் மருத்துவமனையில் இருப்பதனால் தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கான சேவை பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று உறுதியானதும் பலர் பதற்றம் அடைவதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மருத்துவமனைகளும் திண்டாடி வருகின்றன. ஆனால் தொற்று உறுதியான பெரும்பாலானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய தீவிர நிலையில் இல்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது.
கோவிட்-19 வைரஸ் லேசானது, மிதமானது, தீவிரமானது என மூன்று வகைப்படுத்தப்படுகிறது. 81% தொற்றாளர்களுக்கு லேசான உடல்நலக்குறைவு அல்லது தீவிரத்தன்மை இல்லாததாகவே கொரோனா பாதிப்பு இருக்கிறது. மேலும்,
பலர் அறிகுறிகளற்றவர்களாக இருக்கின்றனர். இவ்வகையிலானவர்களுக்கு மருத்துவமனை சிகிச்சை தேவையில்லை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டாலோ அல்லது தனித்திருந்தாலோ போதுமானது. 14 நாட்கள் வரை இவர்களுடன் அவர்களின் குடும்பத்தினரும் தனிமைபடுத்திக் கொண்டிருந்தால் சமூகப் பரவலாக இந்தத் தொற்று மாறுவதைத் தடுக்கலாம்.
இன்றைய நிலையில் பலரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விபடுகிறோம். அவ்வாறு இருப்பவர்கள் எந்த நேரத்தில் மருத்துவ உதவியை நாட வேண்டும். அவர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், அவர்கள் அவசர உதவிக்கு என்ன உபகரணங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
யாரெல்லாம் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளலாம்?
மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களின்படி கீழ்காணும் நோய் தொற்றாளர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொள்ளலாம்:
- ஒரு நபர் மிக லேசான அல்லது அறிகுறிகளுக்கு முந்தைய அல்லது அறிகுறிகளற்ற நிலையில் இருக்கிறார் என்று மருத்துவத்துறையினரால் உறுதி செய்யப்பட்டவர்.
- தொற்று உறுதியானவர் சுய-தனிமைப்படுத்திக்கொள்வதற்கான வசதி அவருடைய வீட்டில் இருக்க வேண்டும். மேலும், அவருடைய தொடர்பில் இருக்கும் குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக்கொள்ள வசதி இருத்தல் அவசியம்.
- வீட்டில் இருக்கும் நோயாளிக்கு எந்த நேரத்திலும் பராமரிக்கக் கூடிய பராமரிப்பாளர் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டில் தனிமை படுத்திக் கொண்டிருக்கும் நபரின் பராமரிப்பாளர் மற்றும் மருத்துவமனை இடையேயான தொடர்புக்கான முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
60 வயதிற்கு மேற்பட்ட வயதில் மூத்தவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய், நுரையீரல்/சிறுநீரக/கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொள்ளலாம், அதுவும் மருத்துவரின் முறையான பரிந்துரையின் பேரில் மட்டுமே இது சாத்தியம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவான கொரோனா தொற்று உறுதியானவர்கள் வீட்டில் தனிமைபடுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது. எச்ஐவி நோயாளிகள், உறுப்பு தானம் பெற்றவர்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள் இந்தப் பட்டியலில் இருந்து விதிவிலக்கானவர்கள்.
வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதற்கும் (Home quarantine) தனித்திருத்தலுக்கும் என்ன வித்தியாசம் (isolation)?
இந்தியாவைப் பொருத்த மட்டில் இந்த இரண்டு வார்த்தைகளும் ஒன்றே தான் என்ற அளவில் பொருள் காணப்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், தனித்திருத்தல் என்றால் கொரோனா தொற்று உறுதியானவர்கள் மற்றவர்களிடம் இருந்து விலகி தனிமையில் இருத்தல் என்று கூறுகிறது.
இதனை வீட்டிலேயே அல்லது மருத்துவமனையில் செய்யலாம். தனிமைபடுத்திக்கொள்ளுதல் என்றால் தொற்று பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மற்றவர்களிடம் இருந்து தங்களுடைய செயல்பாடுகளை கட்டுப்படுத்திக் கொண்டு அவர்களின் பரிசோதனை முடிவு எதிர்மறையாக வரும் வரையோ அல்லது 14 நாட்கள் முழுவதுமோ தங்களுடைய செயல்பாடுகளை வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொள்வதாகும்.
எனவே, கொரோனா தொற்று நோயாளிகளின் குடும்பத்தினரும் வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் வைரஸின் அடைகாத்தல் 14 நாட்களாகும். அடைகாத்தல் காலம் என்பது வைரஸ் உள்ளே நுழைந்தது முதல் அறிகுறிகள் காட்டத் தொடங்குவது வரையான நேரமாகும், இந்த 14 நாட்களில் உங்களுக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லையென்றால் நீங்கள் தொற்று பாதிப்பிற்கு ஆளாகவில்லை என்று பொருளாகும்.
தனித்திருத்தலோ, தனிமைப்படுத்திக்கொள்வதோ, நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டியவை என்னென்ன?
ஒரு வீட்டில் ஒருவருக்கு தொற்று உறுதியானால் தனிமைப்படுத்திக்கொள்ளும் அடுத்த 14 நாட்களில் யாருக்கெல்லாம் பெருந்தொற்று ஏற்படும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. எனவே, வீட்டிற்குத் தேவையான பொருட்கள் முதல் மருந்துகள் வரை எவையெல்லாம் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று இந்தப் பட்டியலை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
- வெளியாட்களின் தேவை இல்லாத வகையில் 14 நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டை தூய்மைப்படுத்தும் பொருட்கள். மருத்துவ பரிந்துரையின் அடிப்படையிலான 30 நாட்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் அத்தியாவசியத்திற்கு எடுத்துக்கொள்ளக் கூடிய காய்ச்சல், இருமல் மற்றும் சளிப் பிரச்னைகளுக்கான மருத்துகளை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
- சானிடைசர்கள்.
- தெர்மாமீட்டர்.
- பல்ஸ் ஆக்சிமீட்டர்.
- சர்ஜிக்கல் முகக்கவசம் நோயாளி 6-8 மணி நேரத்திற்கு ஒரு முறை முகக்கவசத்தை மாற்ற வேண்டும்.
- மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி,டி அல்லது zinc மருந்துகள். இவற்றை கூட முறையான மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ளக் கூடாது.
- ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளேட், கிண்ணம் அல்லது ஸ்பூன். இதனால் பராமரிப்பாளர் நோயாளி பயன்படுத்தும் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டியது இருக்காது.
- தனிமைபடுத்திக்கொண்டிருக்கும் அறையில் அடிக்கடி தொடும் இடங்களான கதவு மற்றும் கழிவறை கைப்பிடி, ஸ்விட்சுகள், போன் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்வதற்கு கிருமி நாசினி அல்லது துடைப்பான்கள்.
பராமரிப்பாளர்கள் கவனத்திற்கு
- நோயாளியின் அறைக்குள் செல்லும் போதோ அல்லது அவர்களின் உடைகள் மற்றும் பயன்படுத்திய பாத்திரங்களைத் தொடும் போதோ கையுறை போட்டுக்கொள்ள வேண்டும்.
- நோயாளிக்கு பக்கத்தில் செல்லும் போது சர்ஜிக்கல் முகக்கவசத்தின் மேல் துணி முகக்கவசம் அல்லது மூன்று அடுக்கு முகக்கவசம் அணிதல் வேண்டும்.
- நோயாளி பயன்படுத்திய மாஸ்க் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த தனியே மஞ்சள் நிற பிளாஸ்டிக் கவரை பயன்படுத்த வேண்டும். முகக்கவசங்களை அப்படியே அப்புறப்படுத்தாமல் முதலில் கிருமி நாசினி தெளித்து அதன் பின்னர் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
- கையுறைகளை அகற்றும் போதும், அவர்களின் பொருட்களை அப்புறப்படுத்திய பின்னரும் சுத்தமாகக் கையை கழுவவும்.
- நோயாளியுடனான தொடர்பை குறைத்துக்கொள்ளவும். மேலும், அந்த நபர் தனிமைபடுத்திக்கொண்டிருக்கும் அறையில் நல்ல காற்றோட்டம் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதை எப்போது முடிவுக்கு கொண்டு வரலாம்?
சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்படி,
“வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் 10 நாட்களுக்குப் பிறகு எந்த அறிகுறியும் இல்லை, 3 நாட்களாக காய்ச்சலும் இல்லை என்றால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். எனினும் அடுத்த 7 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொண்டு சுய கண்காணிப்பு செய்ய அறிவுறுத்தப்படுவார்கள். நீங்கள் அறிகுறிகளற்றவர்களாக இருந்தால் கொரோனா தொற்று உறுதியான 10 நாட்கள் கழித்து சகஜ நிலையில் இருக்கலாம்.”
கொரோனாவிற்குப் பிறகான பராமரிப்புகள்
- தொடர் உடற்பயிற்சி – கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த பிறகு இதனை தீவிரமாக செய்வது முக்கியம். அப்போது தான் சுவாசித்தல் மற்றும் உடல் உறுதியை மேம்படுத்த முடியும்.
- போதுமான ஓய்வு மற்றும் சத்தான உணவுகளே உங்களது உடல்நிலையை பழைய நிலைக்குக் கொண்டு வரும்.
- நீண்ட கால கோவிட் அறிகுறிகளான வறட்டு இருமல் தொண்டை கரகரப்பு, தலைவலி, வயிற்றுப்போக்கு, சோகை, மூச்சுத் திணறல் உள்ளிட்டவை சில மாதங்கள் கூட இருக்கும். இவை அனைத்தும் தொற்றில் இருந்து மீண்டு வந்த 5 வாரங்களிலோ அல்லது 12 வாரங்களிலோ சரியாகிவிடும்.