விலங்குகளுடன் ஒருங்கிணைந்து வாழக் கற்றுக் கொடுக்கும் சரணாலயம் அமைத்த இளைஞர்!
பெங்களூருவைச் சேர்ந்த விலங்குகள் பாதுகாவலரான சஞ்சீவ் பெட்னேகர் ‘பிராணி’ என்கிற தனது செல்லப்பிராணிகள் சரணாலயத்தில் 350-க்கும் அதிகமான விலங்குகளைப் பராமரிக்கிறார்.
விலங்குகள் மீது அன்பு கொண்ட எவரும் சாலையில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் நாயை தத்தெடுத்து வீட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் விரும்பியிருப்பார்கள். அதேபோல் ஏராளமானோர் விலங்குகளை பராமரிக்கவும் அவற்றின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் விரும்புவார்கள். ஒவ்வொரு நாளும் பரபரப்பாக வாழ்க்கையில் இயங்கிக்கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேரால் இதை செயல்படுத்தமுடியும்?
மக்களுக்கு விலங்குகள் குறித்தும் ஒருங்கிணைந்து வாழ்வதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்க சஞ்சீவ் பெட்னேகர் 2017-ம் ஆண்டு பிராணி (Prani) என்கிற விலங்குகள் சரணாலயத்தைத் துவங்கினார்.
இந்த விலங்குகள் சரணாலயம் பெங்களூருவின் கனக்புரா சாலைக்கு அருகில் நாலரை ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது.
ஊர்வன பற்றியும் நீர், நிலம் ஆகியவற்றில் வாழும் விலங்குகள் பற்றியும் ஆய்வு செய்பவர் மற்றும் விலங்குகள் பாதுகாவலரான 28 வயது சஞ்சீவ் விலங்குகளை பாதுகாத்து அவற்றிற்கான சிறப்பான இடத்தை உருவாக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
கர்நாடகா முழுவதும் டேட்போல் எனும் குட்டித்தவளைகள் முதல் பல்வேறு விலங்குகளை பாதுகாப்பதில் சஞ்சீவிற்கு பத்து வயது முதலே ஆர்வம் ஏற்பட்டது.
பிராணி சரணாலயம் குழு இதுவரை 500-க்கும் அதிகமாக பள்ளிகளைச் சென்றடைந்து 3,000 குழந்தைகளுக்கு விலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
Edex Live உடனான உரையாடலில் சஞ்சீவ் கூறும்போது,
“மக்களிடையே சகிப்புத்தன்மை, ஒருங்கிணைந்து வாழ்தல், விலங்குகள் மீது கருணை காட்டுதல் போன்ற குணங்களை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இங்கு வரும் பார்வையாளர்கள் எங்கள் சரணாலயத்தில் இரண்டு மணி நேரம் செலவிடலாம். அவர்களிடம் ஒவ்வொரு விலங்குகள் குறித்த கதைகளையும் பகிர்ந்துகொள்வோம். நாங்கள் இணைந்து செயல்படும் பள்ளிகளில் அவர்களது பாடதிட்டத்தை விவரிக்க நாங்கள் வழக்கமான முறையைப் பின்பற்றுவதில்லை. மாறாக அவர்களை எங்களது சரணாலயத்திற்கு அழைத்து வந்து விலங்குகள் குறித்த அறிவியல் ரீதியான ஒவ்வொரு அம்சத்தையும் விவரிப்போம்,” என்றார்.
கடந்த பத்தாண்டுகளில் சஞ்சீவ் 150-க்கும் அதிகமான விலங்குகளை காப்பாற்றியுள்ளார். இவை தற்போது பிராணி சரணாலயத்தில் தஞ்சமடைந்திருப்பதாக ’தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவிக்கிறது. குழந்தைகள் சிறப்பாகக் கற்றுக்கொள்ளவும் இயற்கையையும் விலங்குகளையும் பராமரிக்கவும் சரணாலயம் உதவும் விதம் குறித்து சஞ்சீவ் விவரிக்கையில்,
”ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு படிக்கும் ஒவ்வொரு மாணவரின் பாடப்புத்தகத்திலும் பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி குறித்த பாடம் இடம்பெற்றிருக்கும். நாங்கள் மாணவர்களை பட்டாம்பூச்சி தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பட்டாம்பூச்சியின் வாழ்க்கை சுழற்சியை விவரிப்போம். புத்தகத்திலிருந்து மனப்பாடம் செய்து படிப்பதைக் காட்டிலும் நேரடியாகப் பார்த்துப் புரிந்துகொள்வது எளிது,” என்றார்.
தற்சமயம் எலி, குதிரை, ஆமை, ஈமு என 350 விலங்குகள் உள்ளன. அத்துடன் முள்ளம்பன்றி, குதிரை, மாடு, ஆடு, செம்மறி ஆடு, முயல், எலி, வான்கோழி, பன்றி, சில்வர் பெசண்ட், கௌதாரி, வாத்து, சேவல், கோழி, தவளை, ஆமை போன்ற விலங்குகள் சஞ்சீவின் சரணாலயத்தில் உள்ளன.
அதிகளவிலான விலங்குகளை ஒரே கூரையின்கீழ் பராமரிப்பது எளிதல்ல. அதற்கு நிதி தேவைப்படுகிறது.
“விலங்குகளை பராமரிக்கவும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் தேவையான மாட்யூல் எங்களிடம் உள்ளது. தரமான நேரத்தையும் பராமரிப்பையும் வழங்குவதே எங்களது நோக்கம். பிராணிகள் சரணாயத்திற்கு வரும் பார்வையாளர்களிடமிருந்து ஒரு நபருக்கு 400 ரூபாய் கட்டணம் வசூலிப்பதன் மூலம் எங்களுக்கு நிதி கிடைக்கிறது. அவர்கள் இரண்டு மணி நேரம் சரணாலயத்தில் செலவிடலாம். எங்கள் சரணாலயத்தில் உள்ள ஒவ்வொரு விலங்கையும் தொட்டுணர அனுமதித்து அந்த விலங்கு குறித்து விவரிப்போம்,” என்றார் சஞ்சீவ்.
கட்டுரை: THINK CHANGE INDIA