'நான் இறந்தால், இதைச் செய்யுங்கள்' - Dr.சாந்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்றிய நிர்வாகம்!

By YS TEAM TAMIL|21st Jan 2021
மருத்துவர் சாந்தாவின் கடைசி ஆசை; நிறைவேற்றிய அடையாறு கேன்சர் மருத்துவமனை நிர்வாகம்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

சென்னை புற்றுநோய் ஆய்வுக் கழகத்தின் தலைவரான டாக்டர்.சாந்தா செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி இறந்தார். 94 வயதான மூத்த புற்றுநோயியல் நிபுணரான அவரின் மறைவு மருத்துவ உலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


புற்றுநோய் சிகிச்சைக்காகவே தனது வாழ்க்கையை அர்பணித்துக்கொண்ட மருத்துவர் சாந்தா, இந்த தன்னலமற்ற பணிக்காக மூன்று பத்ம விருதுகள் மற்றும் ரமோன் மாக்சேசே விருது உட்பட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார். அதைவிட முக்கியமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற நோயாளிகளிக்கு நம்பிக்கை நாயகியாக விளங்கியிருக்கிறார்.


கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார் மருத்துவர் சாந்தா. அவரின் இதயத்தின் இரத்த நாளங்களில் அடைப்புகள் இருந்ததாகவும், அதை அகற்றும் முயற்சி தோல்வியடைந்ததால் அவர் உயிரிழக்க நேரிட்டது என்றும் கூறப்படுகிறது. மருத்துவர் சாந்தாவின் உயிரிழப்புக்கு நாடே இரங்கல் தெரிவித்து வருகிறது என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார்.

மருத்துவர் சாந்தா

நேற்றுமுன்தினம் மாலை 4.30 மணியளவில், மருத்துவர் சாந்தாவின் உடல் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் அவரது நோயாளிகள் புடைசூழ ஊர்வலமாக பெசண்ட் நகர் தகன மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசு மரியாதை உடன் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. தகனம் செய்யப்பட்ட பின்னர் அவரின் அஸ்தி சேகரிக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


திங்கள்கிழமை இரவு 8.30 மணி வரை, மருத்துவர் சாந்தா தனது பணிகளை கவனித்து வந்துள்ளார். மருத்துவமனை நிர்வாகத்தில் நிதி தொடர்பான ரிப்போர்ட்களை பார்த்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி வந்துள்ளது. வலியில் துடிக்கவே உடனடியாக அவரை மருத்துவர்கள் குழு சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


முன்னதாக கடந்த வார இறுதியில் லேசான மார்பு வலியை உணர்ந்தபோதே,

“நான் இறந்தால், என் அஸ்தியை அடையாறு கேன்சர் மருத்துவமனை முழுவதும் தூவ வேண்டும். காரணம் நான் இந்த மருத்துவமனையை விட்டு வெளியேற விரும்பவில்லை. இதுவே எனது கடைசி ஆசை," என்று தனது மருத்துவமனை நிர்வாகிகளிடமும் மருத்துவர்களிடமும் தெரிவித்திருக்கிறார் மருத்துவர் சாந்தா.

அவரின் ஆசைப்படியே, மருத்துவர்களும் அவரின் அஸ்தியை மருத்துவமனை முழுவதும் தூவியுள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள மருத்துவர் சாந்தாவின் சகோதரியும் மருத்துவமனையின் குழு உறுப்பினருமான வி சுஷீலா,

“டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் உடலை எந்த இடத்தில் வைத்திருந்தோமோ அதே இடத்தில் தான் எனது சகோதரி சாந்தாவின் உடலையும் வைத்தோம். அதேபோல் மருத்துவர் சாந்தா கடைசி ஆசைப்படி அவரது அஸ்தியை மருத்துவமனை முழுவதும் தூவியுள்ளோம்," என்று கூறியுள்ளார்.

தகவல் உதவி: டைம்ஸ் ஆப் இந்தியா | தமிழில்: மலையரசு