அடுத்த 3 ஆண்டுகளில் 1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்க Edufly அகாடமி திட்டம்!
இணையம் மூலம் வணிகம் புரிய, முறையான கல்வியைக் கற்றுத் தந்து, குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க வாய்ப்பினை வழங்குகிறது, எஜூஃபிளை!
மலேசிய நாட்டின் பிரபல நிறுவனமான ‘அலோஹா’வின் (Aloha), தன்னுரிமை பெற்ற இந்தியக்கிளையான ‘அலோஹா இந்தியா’ (Aloha India), எஜூஃபிளை அகாடமி (Edufly Academy) என்ற பெயரில், துணை நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், மலேசியாவில் உள்ள எஜூஃபிளை கல்லூரியுடன் இணைந்து, இணைய தளம் மூலம் வணிகம் செய்வது குறித்த கல்வித் திட்டத்தை கற்றுத் தருவதோடு, ‘பீப்’ (Business Education E-Commerce Platform – BEEP) எனக் குறிப்பிடப்படும் சிறப்பு வணிக வாய்ப்பை வழங்க உள்ளது.
இந்நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மலேசிய நாட்டின் எஜூஃபிளை கல்லூரியின் இயக்குனர் திரு.யப் குயோங் ஃபூன் கலந்து கொண்டார். அவரோடு, கௌரவ அழைப்பாளராக ‘மன்னா ஃபுட்ஸ்’ நிறுவனத்தின் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான திரு.ஐ.எஸ்.ஏ.கே. நாசரும் பங்கேற்றார்.
கடந்த 20 ஆண்டுகளாக, இந்தியாவில் கல்வி சார்ந்த பல்வேறு பணிகளில் அலோஹா இந்தியா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது, ‘இணைய தளம் மூலம் சர்வதேச அளவில் வியாபாரம் செய்வது எப்படி?’ என்பது குறித்த அணுகுமுறைக் கல்வியை அறிமுகம் செய்து, 1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்கும் திட்டத்தோடு, தனித்தன்மை கொண்ட பயிற்சியைக் கற்று தருவதில் களமிறங்கியுள்ளது.
இன்று இளம் வயதுள்ள உலக மக்கள் தொகையில், 56 சதவீதத்தினர் இந்தியர் என்பதாலும், இங்கு கல்வி பயின்று வேலை தேடி வருவோரில் பெரும்பாலோர் முழுமையான பணியாற்றும் திறனைப் பெறாததாலும் அவர்களை ஊக்கப்படுத்தி தொழில் முனைவோர் ஆக்கும் வகையில் இந்தப் புதிய பயிற்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அலோஹா இந்தியா கருதுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய எஜூஃபிளை அகாடமியின் மேலாண் இயக்குனர் ‘அலோஹா’ குமரன்,
“Edufly Academy என்பது, ஒரு முழுமையான இணைய வழி வணிகத்துக்கான கல்வி நிறுவனம் ஆகும். ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மிகக் குறைந்த முதலீட்டைக் கொண்டு, இணையம் மூலம் விற்பனை செய்யும் இ-காமர்ஸ் (E-Commerce) வர்த்தகத்தில், சொந்தமாக கால்பதிக்கவும், அதில் வெற்றி பெறவும் இப்பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது,” என்றார்.
அவர் மேலும் பேசுகையில், “எங்களது பயிற்சியில் சேர்ந்து, பயின்று, உரிய சான்றிதழ் பெற்றவர்கள், தங்களது இ-காமர்ஸ் வர்த்தகத்தை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு தளம்தான் – ‘BEEP’ என்கிற இணைய வழி வணிக தளம். தற்போது இந்தத் தளத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 10 லட்சம் பொருட்கள் விற்பனையாகக் காத்திருக்கின்றன. எழுதத் தேவைப்படும் பேனா ரகங்களில் தொடங்கி, பல்வேறு விதமான பைகள், ஆடைகள், மேஜை, நாற்காலி உள்ளிட்ட அறைகலன்கள், தொலைக்காட்சி பெட்டிகள், மொபைல் போன்கள் என நீண்டு, பென்டிரைவ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் வரை இன்னும் பலவும் இதில் அடங்கும்.
"இவை அனைத்தும் சீனா, கொரியா, தைவான், மலேசியா போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. மும்பை உட்பட, உலகம் முழுவதும் உள்ள எமது 7 கிடங்குகளில் அவை சேமித்து வைக்கப்பட்டுள்ளன,” என்றும் கூறினார்.
18 வயது நிறைந்த எந்த இந்தியக் குடிமகனும், மிகக் குறைந்த முதலீட்டிலேயே, இந்த இணைய வணிகப் பயிற்சியைப் பெற முடியும். 10 மணி நேரம் கொண்ட இந்தப் பயிற்சியை வார இறுதி நாட்களில் அல்லது, அன்றாடம் சில மணி நேரம் என, அவர்களது வசதிக்கு ஏற்ப நேரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பயிற்சியை முடிக்கலாம். பயிற்சி நிறைவில் அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த சான்றிதழ் பெற்றவர்கள், ‘பீப்’ இணையத்தளத்தில் உள்ள பொருட்களை 'அமேஸான்' (Amazon) வலைதளத்தில் விற்பனை செய்யp பட்டியலிடலாம். இதற்காக, அவர்கள் மட்டுமே பயன்படுத்த ஏற்ற ஒரு தனி அடையாளக் குறியீடு (Password) வழங்கப்படும்.
தனித்தன்மை கொண்ட தொழில்முனைவோர் திட்டம் என்பது எப்படி செயல்படுகிறது?
- 10 மணி நேரம் கொண்ட இந்தப் பயிற்சியை, சனி, ஞாயிறு - 2 நாட்களில் தலா 5 மணி நேரம் எனவோ, திங்கள் முதல் வெள்ளி வரை தலா 2 மணி நேரம் என 5 நாட்களிலோ… எப்படி வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். பயிற்சியின் இறுதியில், எஜூஃபிளை இந்தியா நிறுவனத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.
- பயிற்சிக்கான தேவைகள் கீழ்வருமாறு:
a) கணினி வசதி (லேப்டாப் அல்லது மேஜை கணினி)
b) வைஃபை (wifi) தொடர்பு வசதி
c) பான் எண் (PAN) எனப்படும் வருமானக் கணக்கு தாக்கல் எண்
d) ஜி.எஸ்.டி. (GST) எனப்படும் பொருள் மற்றும் சேவை வரிப் பதிவு எண்
e) வங்கிக் கணக்கு
3. சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள், தாங்கள் விற்பனை செய்ய நினைக்கும் பொருட்களை ‘பீப்’ வலைதளத்தில் இருந்து தேர்வு செய்யலாம்.
4. அந்த வகையில் அமேஸான் வலைதளத்தில் அவர்களது தயாரிப்புப் பொருளைப் பட்டியலிட்டவுடன், அவர்களது பணி நிறைவு பெற்றதாகக் கருதலாம்.
விற்பனை கோரிக்கைக்கு பின்:
5.அமேஸான் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள உங்களது பொருளை வாங்க விரும்பும் நபர் அதற்கான ஆர்டரை அனுப்பினால், உங்களுக்கு அது குறித்த தகவல் வரும். அதனை எஜூஃபிளை நிறுவனத்துக்கு நீங்கள் தெரிவித்தால், உலகம் முழுக்க உள்ள எமது 7 கிடங்குகளில் எதேனும் ஒன்றில் இருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். மாறாக, விற்பனையாளரான நீங்களும், நேரடியாக வாடிக்கையாளருக்குப் பொருட்களை அனுப்பலாம்.
6.அந்த விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் இருந்து 30% தொகை, எஜூஃபிளை விற்பனையாளர் என்ற முறையில், உங்களது வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.
தனித்தன்மையுள்ள இந்த யுக்தியை உருவாக்கிய திரு. ‘அலோஹா’ குமரன் இந்தத் திட்டம் குறித்து அளித்த விளக்கத்தின்போது,
“இந்த விற்பனை வாய்ப்பை நாங்கள் எல்லா இந்தியர்களுக்கும் வழங்கத் தயாராக உள்ளோம். மாணவர்கள், ஏற்கனவே வேறு பணியில் உள்ள நபர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், குடும்பத் தலைவிகள், ‘அரசு ஊழியர்கள் என யாரும் முயற்சி செய்தால், வெற்றிகரமான தொழில்முனைவோராக வர முடியும். எந்த அளவு நேரத்தையும், கவனத்தையும், அக்கறையுடன் செலவிடுகிறோமோ, அந்த அளவு வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளதோடு, அதிக வருவாய் பெறவும் வழி பிறக்கும்,” என்றார்.
இதுபோன்ற யோசனை எப்படி உதித்தது? என்ற கேள்விக்கு பதில் அளித்த ‘அலோஹா’ குமரன், “தற்போது இந்தியாவில் படித்த இளைஞர்களில் 7% பேர் மட்டுமே, பணியிடச் சூழலைச் சமாளிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இது மிகவும் ஆபத்தான ஒரு போக்கு. இந்தச் சூழலில், அடுத்து வரும் தலைமுறைக்கு நம்மால் எதாவது செய்ய முடியுமா என்ற யோசனையில் உருவானதுதான் இந்தத் திட்டம்,” எனத் தெரிவித்தார்.
இந்தப் பிரத்யேக வணிக வாய்ப்பு திட்டத்தை இந்தியாவில் மட்டுமின்றி, பல்வேறு உலக நாடுகளிலும் தொடங்கிட, எஜூஃபிளை அகாடமி திட்டங்களை வகுத்து வருகிறது.