படித்தது பி.இ., பிடித்தது பேஷன் டிசைனிங்: ஆன்லைனில் தொழில் தொடங்கி இன்ஸ்டாவில் கலக்கும் நந்தினி!
கணவருக்கு நேர்ந்த விபத்து, தந்தையின் இழப்பு, என வாழ்வில் நேர்ந்த கஷ்டங்களுக்கு மத்தியில் 'கஸ்டமைஸ்ட் ரெடிமேட் சாரீஸ்' என்ற பெயரில் புடவைகளுக்கு அப்கிரேட் வெர்ஷன் அளித்து பேஷன் துறையில் தனக்கென்ற அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட நந்தினியின் சக்சஸ் ஸ்டோரி இது.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த அவரை துரத்தியது, 'அடுத்து என்ன?, எங்க படிக்கப் போற, எந்த காலேஜ்?, இன்ஜினீயரிங்தானே? போன்ற கேள்விகள். அதனால் தனக்கு விருப்பமுள்ள பாடத்தை விட்டு, இன்ஜினீயரிங் படித்தார். விருப்பமற்ற கல்வி அவர்மீது திணிக்கப்பட்டிருப்பதை பலமுறை பெற்றோர்களிடம் எடுத்துக்கூறினார். ஆனால், இன்ஜீனியரிங் படித்தாலே தனிமதிப்பு எனும் சமூகக் கட்டமைப்பில் சிக்கிய அவரது பெற்றோர்கள் அவருக்கு செவிச் சாய்க்கவில்லை.
எதிர்ப்பின் உச்சக்கட்டமாய், தற்கொலைக்கு முயன்றார் நந்தினி. விரும்பியத் துறையில் பரிணமிக்க விடாமல், கட்டாயங்களின் பிடியில் குழந்தைகளை திணிக்கும் நந்தினியின் பெற்றோர் போன்றோர் சமூகத்தில் ஏராளமுள்ளனர். அதனை முறியடிக்க முயன்ற நந்தினியாலும் அது முடியவில்லை.
4 ஆண்டுகள் இன்ஜீனியரிங் படிப்பிற்கு பிறகே, திருமணமாகி, கணவர் அளித்த ஆதரவில் அவர் விரும்பிய 'பேஷன் டிசைனிங்' படித்து, இன்று ஒரு டிசைனராக மனதுக்கு பிடித்தபணி செய்து வருகிறார். 'கஸ்டமைஸ்ட் ரெடிமேட் சாரீஸ்' என்ற பெயரில் புடவைகளுக்கு அப்கிரேட் வெர்ஷன் அளித்து பேஷன் துறையிலும் அவருக்கான அடையாளத்தை உருவாக்கியுள்ள நந்தினியின் நம்பிக்கை கதை இது.
"என் சொந்த ஊர் கோயம்புத்துார். அப்பா சென்ட்ரல் கவர்மென்ட் ஊழியர். எனக்கு சின்ன வயதிலிருந்தே பேஷன் சார்ந்து அதிக ஆர்வம். அந்தத்துறை சார்ந்து படித்து, தொழில் புரியவேண்டும் என்பது என் நீ்ண்டநாள் கனவு. ஆனால், சமூகத்தினை எண்ணி என்னை பேஷன் டிசைனிங் படிக்கவிடவில்லை.
இன்ஜினியரிங் காலேஜில் சேர்த்துவிட்டனர். எனக்கு விருப்பமற்ற பாடத்தை படிக்கவே முடியவில்லை. பலமுறை வீட்டில் சொன்னேன். அவர்களுக்கு நான் சொல்வது பெரிதாகவே தெரியவில்லை. பிடிக்காத படிப்பினை படிக்க தினம்தினம் கல்லுாரிக்கு செல்வது வெறுப்பை அதிகரித்து கொண்டேயிருந்தது. ஒரு கட்டத்தில் தற்கொலை எண்ணங்கள் வந்து, ஒருமுறை முயற்சி செய்தேன். அப்போதும், நான் 4 ஆண்டுகள் படிப்பை நிறைவு செய்ய வேண்டிய நிலை தான் எனக்கிருந்தது," என்றார்.
சமூகத்தினை எண்ணி குழந்தைகளின் மீது விருப்பமற்றப் படிப்பினை திணிக்காதீர்கள். இன்ஜீனியரிங் படித்தால் என்னுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதே என் பெற்றோரின் எண்ணமாக இருந்தது. இருக்கட்டுமே, பிடித்த படிப்பினை படித்து அதில் தோல்வி அடைந்தால் தான் என்ன? என்கிறார்.
12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஏன் தோல்வியை கண்டு அஞ்சவேண்டும் என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும்? வாழ்க்கையில் தோல்வியுற்று வெற்றி பெற்றவர்களே இல்லையா? குழந்தைகளின் வாழ்க்கையினை நெறிப்படுத்துகிறேன் என்று அவர்களை சுயதீனமாக பெற்றோர்கள் முடிவெடுக்கவிடுவதில்லை. அதுபோன்றதொரு அனுபவமே எனக்கு அமைந்தது.
ஆனால், இன்று, என் பெற்றோர்களுக்கு புரிய வைத்துவிட்டேன். பிடித்தப் படிப்பினை படித்தால் மட்டுமே வெற்றிப் பெற முடியும் என்பதை உணர்ந்து, என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கின்றனர். அதற்கு பெரிதும் உதவினார் என் கணவர்.
என் கனவுகளைப் பற்றி கணவரிடம் ஒருநாள் எடுத்துக்கூறினேன். 'அப்போ முடியலைனா என்ன இப்போ படி' என எனக்கு உத்வேகம் அளித்தார். புத்துணர்வு கிடைத்த மாதிரி இருந்தது. உடனே, பேஷன் டிசைனிங் கோர்ஸில் சேர்ந்து படித்தேன். என் நீண்ட நாள் ஆசையும் நிறைவேறியது. நண்பர்களுக்கும், அறிமுகமானவர்களுக்கு ஆடைகளை வடிவமைத்து கொடுத்தேன். 2019ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் 'youniche deckup' என்ற பெயரில் பக்கத்தைத் தொடங்கி, இணையவழி தொழிலைத் தொடங்கினேன்.
பிசினஸ் பிக் அப்’பாக தொடங்கிய சமயம் அது. என் கணவருக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. ட்ரைனுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே கால் மாட்டிக் கொண்டதில் பெரிய விபத்தில் சிக்கிக்கொண்டார். அப்போது ஒரு வயது குழந்தையும், ஆறுமாதம் தொழிலும் என் கையில் இருந்தது. ஆஸ்பிட்டலுக்கும் வீட்டிற்கும் இடையேயான பயணத்திலே 3 மாதங்கள் ஓடியது. அப்போதும் என் தொழிலை கவனித்து கொண்டே இருந்தேன். கடினமான நாட்கள் அவை. அதிலிருந்து மீண்டு வருவதற்குள், என் அப்பா கொரோனாவில் தவறினார்.
மனதளவில் சோர்வுகள் ஏற்பட்டன. ஆனால், இப்போது நான் இதை கைவிட்டு விட்டேன் என்றால், சமூகத்தில் தவறான உதாரணமாகிவிடுவேன். அதற்காகவே, வாழ்க்கையில் எவ்வளவு கடினமான பாதைகளை எதிர்கொண்டாலும், வெற்றியை நோக்கிய என் பயணத்தை நிறுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் தீர்மானமாய் இருந்தேன்.
குழந்தைகளுக்கான ஆடை, அம்மா-மகள் ஆடைகள், மணப்பெண் ப்ளவுஸ் என அனைத்துவிதமான கேட்டகரியிலும் ஆடைகளை வடிவமைத்து கொடுக்கிறேன். ஃபேஷன் துறையில் எனக்கென்று தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ள நினைத்தபோது தான், வாடிக்கையாளர்களின் புடவைகளை 'ரெடிமேட் சாரீஸ்'-களாக மாற்றி வழங்கலாம் என்று தோன்றியது.
எந்தவொரு விழா என்றாலும், பெண்களின் முதல் சாய்ஸ் புடவைகள் தான். ஆனால், புடவைகள் எவ்வளவு அழகோ, அந்த அளவிற்கு அதனை நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் உடுத்தவேண்டும். உண்மையில், புடவை கட்டிக் கொள்வது எல்லா பெண்களுக்கும் கைவந்த கலையில்லை. அதனாலே, சில சமயங்களில் புடவைக்கான மாற்றைத் தேடுகின்றனர். அப்போது தான், வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் புடவையையே அவர்களது இடுப்பு அகலத்திற்கு ஏற்றவாறு மடிப்பு எடுத்து தைத்து கொடுத்தால், எளிதில் அணிந்து கொள்ள முடியும் என்று தோன்றியது.
முதலில் அதற்கு ட்ரைலாக என்னுடைய சில புடவைகளை மாற்றினேன். அணிந்து கொள்வதற்கு எளிதாக இருந்தது. இன்ஸ்டாகிராமில் அதைப்பற்றிய வீடியோ பதிவிட்டேன். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
இரு வாடிக்கையாளர்கள் அவர்களது முகூர்த்த பட்டுப் புடவையை கொடுத்து ரெடி டூ வேர் ஆக மாற்றிக் கொடுக்கச் சொன்னர். புடவையின் விலை அதிகம் என்பதைத் தாண்டி, வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கக்கூடிய மனதிற்கு நெருக்கமான புடவையை என்மீது நம்பிக்கை வைத்து கொடுத்து தைக்கக் கூறினர். அதுவே எனக்கு ரொம்ப பெரிய மகிழ்ச்சி.
ரெடிமேட் சாரீஸ் கான்செப்ட் ரிச் ஆகியதில், மாதம் தவறாமல் 25 புடவைகளை கஸ்டமைஸ் செய்து தருகிறேன். மாதம் ரூ.35,000 முதல் 50,000 வரை வருவாய் கிடைக்கிறது.
இப்போது, மகப்பேறு போட்டோஷூட்களுக்கான ஆடைகளை வாடகைக்கு அளிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளேன். மகப்பேறு போட்டோஷூட்கள் எடுக்கும் வழக்கம் பரவலாகி வரும்நிலையில், ஒரு நாளுக்காக அதிகம் செலவு செய்து உடைகளை வாங்குகின்றனர். அவை குழந்தை பிறப்பிற்கு பிறகு பயன்படுத்தவும் இயலாது. அதனால் இப்படி வாடகைக்கு எடுப்பது பெரும்பாலனோருக்கு பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தனர்.
தற்போது வரை இவரிடம் இரு பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். எதிர்காலத்தில், பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கு வகையில் தன் தொழிலை பேஷன் பிராண்ட்டாக உருவாக்கவேண்டும், என்று பகிர்ந்தார் நந்தினி.
நந்தினியின் இன்ஸ்டாகிராம் பக்கம் : -