முதல் நாளில் ரூ.80 கோடி | பாக்ஸ் ஆபீஸில் ‘பொன்னியின் செல்வன்’ வசூல் வேட்டை!
கல்கியின் சரித்திர நாவலை வைத்து இயக்குநர் மணிரத்னம் படைத்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ விமர்சன ரீதியில் மட்டுமின்றி வர்த்தக ரீதியிலும் சாதகமான ரியாக்ஷனைப் பெற்றுள்ளது. ஆம், நேற்று (செப்.30) வெளியான இந்தப் படம், முதல் நாளில் மட்டும் உலக அளவில் ரூ.80 கோடி வசூலைக் குவித்துள்ளது.
தமிழ் இலக்கிய வாசகர்கள் பலரும் படித்து ரசித்த ஒரு வரலாற்றுப் புதினத்தை எழுத்தாளர்கள் ஜெயமோகன், இளங்கோ குமரவேலின் திரைக்கதையின் உறுதுணையுடன் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’-ஐ படைத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூல்
கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ் என நட்சத்திர அணிவகுப்பு மிகுந்த இந்தப் படத்துக்கு ரஹ்மானின் இசை பலம் சேர்த்துள்ளது. மொத்தம் இரு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.500 கோடி பட்ஜெட் கொண்ட இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், சுபாஷ் கரனின் லைகா புரொட்க்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
நாவலின் சுவாரஸ்யம் குறையாமல், எழுத்துக்கு விஷூவல் ட்ரீட் கொடுக்கப்பட்டுள்ள இப்படம், மெகா பிரம்மாண்டத்தை கண்முன் நிறுத்தும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். ஒட்டுமொத்தப் படக்குழுவும் மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இப்படம் வர்த்தக ரீதியிலும் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது என்பதற்கு முதல் நாள் வசூலே சான்று.
முதல் நாளில் ‘பொன்னியின் செல்வன்’ உலக அளவில் ரூ.80 கோடியை ஈட்டியுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இப்படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதாலும், இன்றும் நாளையும் கூட ஹவுஸ் ஃபுல் காட்சிகள் கொண்டிருப்பதாலும் ஓப்பனிங் எனப்படும் முதல் மூன்று நாள் வசூலும் மிகப் பெரிய தொகையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
இதன் மூலம், சமீபத்திய ஆண்டுகளின் திரைப்பட வசூலில் பல சாதனைகளை பொன்னியின் செல்வன் முறியடிக்கும் என்று சினிமா வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில் டாப் 10...
தமிழகத்தைப் பொறுத்தவரையில், பொன்னியின் செல்வனின் முதல் நாள் வசூல் ரூ.27 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் நாள் வசூலில் உச்சம் தொட்ட 10 படங்களில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது பொன்னியின் செல்வன்.
இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களில், தமிழகத்தில் முதல் நாள் வசூலில் உச்சம் தொட்ட டாப் 10 படங்கள் இவைதான்: வலிமை - ரூ.36.17 கோடி; பீஸ்ட் - ரூ.27.40 கோடி; பொன்னியின் செல்வன் - ரூ.27 கோடி; விக்ரம் - ரூ.20.61 கோடி; எதற்கும் துணிந்தவன் - ரூ.15.21 கோடி; ஆர்ஆர்ஆர் - ரூ.12.73 கோடி; திருச்சிற்றம்பலம் - ரூ.9.52 கோடி; டான் - ரூ.9.47 கோடி; கோப்ரா - ரூ.9.28 கோடி; கேஜிஎஃப் 2 - ரூ.8.24 கோடி.