உலகப் புகழ் பேஷன் நிறுவனத்தின் சிஇஓ ஆகும் முதல் இந்தியப் பெண்: யார் இந்த லீனா நாயர்!
உலக புகழ் பெற்ற ஆடையலங்கார நிறுவனமான ஷெனேல் இந்தியாவைச் சேர்ந்த லீனா நாயர் என்பவரை அதன் உலகளாவிய தலைமை நிர்வாகியாக (CEO) நியமித்து சம்பவம் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
உலகப் புகழ் பெற்ற ஆடையலங்கார நிறுவனமான ’Chanel' இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லீனா நாயர் என்பவரை அதன் உலகளாவிய தலைமை நிர்வாகியாக (CEO) நியமித்து சம்பவம் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
யார் இந்த லீனா நாயர்?
மகாராஷ்டிரா மாநிலம் கோலாபூரில் பிறந்தவர் லீனா நாயர். கோலாப்பூரில் பள்ளிப்படிப்பை முடித்த லீனா, சாங்கலியில் உள்ள வால்சந்த் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பின்னர், ஜாம்ஷெட்பூரில் உள்ள சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் தன்னுடைய எம்.பி.ஏ. படிப்பை முடித்தார். இங்கு, சிறப்பான செயல்பாட்டிற்காக லீனாவிற்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
யூனிலிவரில் 30 ஆண்டுகால பயணம்:
படிப்பை முடித்த கையோடு 1992ம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு எஃப்எம்சிஜி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலிவரில் ட்ரெயினியாக (Trainee) ஆக வேலைக்குச் சேர்ந்தார். நிறுவனத்தில் சிறப்பாக செயல்பட்ட லீனா கொல்கத்தா, சென்னை அம்பத்தூர் மற்றும் மகாராஷ்டிராவில் தலோஜா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் யூனிலிவர் தொழிற்சாலைகளில் பணியாற்றினார்.
இந்நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த 30 ஆண்டுகளில், எம்ப்ளாயி ரிலேஷன்ஷிப் மேனேஜர், எச்.ஆர். மேனேஜர், எக்ஸிகியூட்டிவ் டெரைக்டர் HR, என படிபடியாக உயர்ந்த லீனா நாயர், 3 ஆண்டுகள் லண்டனில் தலைமை மற்றும் நிறுவன மேம்பாட்டுத்துறைத் தலைவராக பணியாற்றினார்.
அதன் பின்னர், 2016ம் ஆண்டு ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி என்ற உயரிய பொறுப்புக்குச் சென்றார். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றும் 1,50,000 பேருக்கு பொறுப்பாளராக மாறினார்.
இந்தப் பதவியை அலங்கரித்த முதல் பெண் என்ற பெருமையும், ஆசியாவைச் சேர்ந்த முதல் ஆள் என்ற பெருமையும் லீனாவை பெற்றார். மிக இளம் வயதிலேயே இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் இவரே.
ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தில் இவர் தலைமை பொறுப்பேற்ற பிறகு 2010ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமை பதவிகளில் ஆண்களுக்கு சமமாக பெண்களை நியமிக்க முக்கியக் காரணமாக செயல்பட்டார்.
லீனாவைப் பற்றி அவர் முன்பு பணியாற்றிய யூனிலீவரின் தலைமைச் செயல் அதிகாரி ஆலன் ஜோப் கூறுகையில்,
“கடந்த 30 ஆண்டுகளாக இந்த நிறுவனத்திற்காக லீனாவின் சிறந்த பங்களிப்பிற்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். யூனிலீவரில் பணியாற்றிய காலம் முழுவதும் லீனா, பிற பணியாளர்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்தார். அவர் தலைமை மனிதவள அதிகாரி மட்டும் இல்லாமல், எங்கள் பன்முகத்தன்மை, தலைமைத்துவ வளர்ச்சிக்கான மாற்றம் மற்றும் எங்கள் எதிர்கால வேலைக்கான தயார்நிலை ஆகியவற்றில் ஒரு உந்து சக்தியாக இருந்தார். இந்நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரியாக அவர் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது,” எனப் பாராட்டியுள்ளார்.
‘Chanel’ நிறுவனத்தின் சிஇஓ ஆகும் லீனா நாயர்:
தற்போது ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் தலைமை பொறுப்புலிருந்து விலகியுள்ள லீனா நாயர், வரும் ஜனவரி மாதம் பிரபல பிரெஞ்சு நிறுவனமான Chanel குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லீனா,
'பிரெஞ்சு பேஷன் ஹவுஸ் Chanel-ன் உலகளாவிய தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டதில் பணிவும் பெருமையும் அடைகிறேன்,' எனத் தெரிவித்துள்ளார்.
1910ம் ஆண்டு ஆடை வடிமைப்பில் புகழ் பெற்ற கேப்ரியேல் கொக்கோ ஷெனேல் என்பவர், பிரான்சில் Chanel நிறுவனத்தை தொடங்கினார். ஆடம்பர ஆடைகள், விலை உயர்ந்த கைப்பைகளை தயாரிக்கும் நிறுவனமான ‘Chanel’, ஆடை அலங்காரத் துறையைச் சாராத உலகளாவிய தலைமை நிர்வாகியாக பதவிக்கு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி - ட்விட்டர்