சென்னை ட்ரோன் நிறுவனம் ‘கருடா ஏரோஸ்பேஸ்’ உடன் கை கோர்த்த மகேந்திர சிங் தோனி!
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் மற்றும் பங்குதாரராக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
’கருடா ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் மற்றும் பங்குதாரராக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவிலேயே ட்ரோன் சேவையில் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம். இந்நிறுவனம் விவசாயம், பாதுகாப்பு, வன விலங்கு கண்காணிப்பு, மீட்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் ட்ரோன் சேவை வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் மற்றும் பங்குதாரராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டுள்ளார். கருடா ஏரோஸ்பெஸ் நிறுவனத்துடனான தனது தொடர்பு குறித்து எம்.எஸ் தோனி,
"கருடா ஏரோஸ்பேஸின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அவர்கள் வழங்கும் தனித்துவமான ட்ரோன் தீர்வுகளுடன் அவர்களின் வளர்ச்சிக் கதையைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.
கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ்,
"நான் எப்போதுமே மாஹியின் தீவிர அபிமானி மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாக அவரைப் பெறுவது என்பது ஒரு கனவு நனவாகும். மாஹியின் அர்ப்பணிப்பின் சுருக்கம் & எங்கள் கேப் டேபிளில் கேப்டன் கூல் இருப்பது மிகப்பெரிய மதிப்பைச் சேர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், இது எங்கள் அணியை சிறப்பாகச் செயல்படத் தூண்டும்," எனத் தெரிவித்துள்ளார்.
கருடா ஏரோஸ்பேஸ் இந்திய ட்ரோன் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது மற்றும் இந்தியாவின் முதல் ட்ரோன் யூனிகார்ன் ஸ்டார்ட்-அப் ஆவதற்கான பாதையில் உறுதியாக உள்ளது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் 26 நகரங்களில் இயங்கும் 300 ஆளில்லா விமானங்கள் மற்றும் 500 விமானிகள் கொண்ட கருடா ஏரோஸ்பேஸ் ட்ரோன் தயாரிப்பு வசதிகள் தொடங்கிவைக்கப்பட்டது.
சீரிஸ் ஏ சுற்றுக்கு முன்னதாக $30-மில்லியன் மதிப்பீட்டில் உள்ள இந்நிறுவனம், தற்போது ஜூலை இறுதியில் $250 மில்லியன் மதிப்பீட்டை எட்ட முயன்று வருவதாக கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, கடந்த பிப்ரவரி மாதம் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த மீட்புப் பணியில் ஹெலிகாப்டரால் செய்ய முடியாமல் பின்வாங்கிய விஷயத்தை கருடா நிறுவனத்தின் ட்ரோன் கச்சிதமாக செய்து முடித்தது.
பாபு என்ற அந்த இளைஞர் பாறை இடுக்கில் சிக்கியுள்ளதை படமெடுக்கவும், உணவு, தண்ணீர் வழங்கவும் கருடா ஏர்ஸ்பேஸ் நிறுவனத்தின் ட்ரோன் பயன்படுத்தப்பட்டது. இளைஞரை மீட்க இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட்ட கருடா ஏர்ஸ்பேஸ் நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.