தலைமை ஆசிரியரின் தீவிர முயற்சி: தமிழ் படிக்கும் வடமாநில மாணவர்கள்!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரிதான நிகழ்வு!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டியில் இருக்கிறது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. நூற்பாலைகள் அதிகமிகுந்த இந்தப் பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
அஸ்ஸாம், உத்திரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் பலர் இந்தப் பகுதிகளில் பல ஆண்டுக்காலமாக தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அதேநேரம், இந்த தொழிலாளிகளின் குழந்தைகள் பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் நிலை இருந்துவந்தது.
பலரும் தங்களின் தம்பி தங்கைகளை கவனித்துக் கொண்டு நூற்பாலைகளில் விளையாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதனை கவனித்த படிக்காசுவைத்தான்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் என்பவர், வடமாநில தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க அறிவுறுத்தி இருந்துள்ளார். அவர்கள் முதலில் மறுத்தாலும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முயற்சியை பலமுறை தொடர்ந்துள்ளார் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார்.
அதற்கு பயனும் கிடைக்கத் தொடங்கியது. வடமாநில தொழிலாளர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முன்வந்தனர். அதன்படி, சிறிய நிகழ்ச்சி வைத்து வடமாநில தொழிலாளிகளின் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். சுமார் 6 மாணவ மாணவியர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
பள்ளியில் இணைந்த அவர்களுக்கு, தமிழகப் பள்ளிக்கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் மையத்தில் இணையதளம் வழியே சேர்க்கை நடத்தியதற்கான ஒப்புதல் சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் பள்ளி மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார்.
அது பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தலா ரூ.1000 ஊக்க தொகை என்பது. இந்த பரிசும் புதிதாக சேர்ந்த வடமாநில குழந்தைகளுக்கு தலைமை ஆசிரியர் வழங்கியிருக்கிறார்.
ஊடகங்களிடம் பேசிய அந்த குழந்தைகள், தமிழ் மொழி கற்க ஆவலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதேநேரம், தனது முயற்சியால் குழந்தைகளை பள்ளியில் சேர்த்த தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் இது தொடர்பாக பேசுகையில்,
“வடமாநில மாணவர்கள் தமிழ் கற்க ஆவலாக இருக்கின்றனர். என்றாலும், அவர்களின் தாய் மொழியான இந்தியில் பாடங்கள் கற்றுக் கொடுக்க மாவட்ட பள்ளிக்கல்வித் துறை மூலம் தன்னார்வலர் நியமிக்கப்பட்டுள்ளார்," என்றுள்ளார்.
வடமாநில மாணவர்கள் தமிழ் மொழியில் படிக்கும் நிகழ்வு அரிதாக நடக்கும் ஒன்று. அதிலும் மாணவர்கள் தமிழ் படிக்க ஆர்வமிகுதியாக தெரிவித்துள்ளது தலைமை ஆசிரியரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று ஆசிரியர் ஜெயகுமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.