குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன்: எச்.டி.எப்.சி. பேங்க் அசத்தல்!
தனியார் வங்கியான எச்டிஎப்சி (HDFC Bank) தமிழகத்தில் உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இதுவரை 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
தனியார் வங்கியான எச்டிஎப்சி (HDFC Bank) தமிழகத்தில் உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இதுவரை 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
எச்.டி.எஃப்.சி. வங்கி மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிதிச் சேவை நிறுவனமாகும். ஏப்ரல் 2021ம் ஆண்டின் நிலவரப்படி, 10 சதவீத சந்தை மூலதனத்துடன் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாக எச்டிஎஃப்சி செயல்பட்டு வருகிறது.
1994ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கியில் இன்றைய நிலவரப்படி, ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வங்கியின் ஆண்டு வருமானம் 9.28 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஆதரிக்கும் எச்.டி.எஃப்.சி:
இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் எச்.டி.எஃப்.சி. பேங்க், தமிழகத்தைப் பொறுத்தவரையில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் முன்னேற்றத்தில் தனிப்பங்காற்றி வருகிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் முக்கிய தூண்களாக கருதப்படுகிறது. அதனால் தான் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் இந்நிறுவனங்களுக்கான வாய்ப்புகளும், சலுகைகளும் பிரகாசமாக உள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டு எச்.டி.எஃப்.சி. வங்கியும் கடந்த 2004ம் ஆண்டு முதலே, தமிழகத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கி வருகிறது. எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் விவரங்கள் குறித்து எச்.டி.எஃப்.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 17 ஆண்டுகளில், தமிழகத்தைச் சேர்ந்த, 60 ஆயிரத்திற்கும் அதிகமான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் வசதியால் வளர்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
20 இடங்களில் புதிய கிளை; ரூ.20 ஆயிரம் கோடி கடன் உதவி:
எச்.டி.எஃப்.சி வங்கியின் தமிழக வர்த்தகப் பிரிவுத் தலைவர் அருண் அரவிந்த் கூறியதாவது:
"MSME-க்கள் எனப்படும் குறு, சிறு, நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், மிகப்பெரிய வேலை வாய்ப்பை உருவாக்குபவைகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. எங்களின் உலகத் தரம் வாய்ந்த சேவை மூலமாக அவர்களது வளர்ச்சிப் பயணத்தில் பங்குதாரராக இருந்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் வங்கியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி எனக்கூறினார்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக மாநிலத்தில் மேலும், 20 இடங்களில் புதிய கிளைகளை தொடங்க உள்ளதாகவும், ஆன்லைன் சேவைகளை விரிவுபடுத்த உள்ளதாகவும் வங்கியின் தமிழக வர்த்தகப் பிரிவு தலைவர் அருண் அரவிந்த் அறிவித்துள்ளார்.
மெட்டல், ஜவுளித்துறை, பேப்பர், விவசாயம், உணவு பதப்படுத்துதல், நுகார்வோர் சாதனங்கள், எலக்ட்ரானிக்ஸ், காலணிகள், கைவினைப்பொருட்கள், ஆரோக்கியம், கல்வி என பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறு, சிறு, நடுத்தர வணிகர்களுக்கு இதுவரை எச்.டி.எஃப்.சி. நிறுவனம் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.