MSME வளர்ச்சிக்கான தகவல் தளம்: Meta அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொழில் ஹப்!
வணிக இலக்குகளை பூர்த்தி செய்யும் Grow Your Business Hub!
'Meta' இந்தப் பெயர் பலருக்கு புதிதாக இருக்கலாம். ஃபேஸ்புக் நிறுவனம் தான் சமீபத்தில் தனது பெயரை ‘மெட்டா' என மாற்றி அறிவித்தது. பெயர் மாற்றத்துக்குப் பின் புதிய வேகத்துடன் செயல்படத் துவங்கியுள்ளது.
அதன்படி, இரண்டு நாட்கள் முன்பு, மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு (எம்எஸ்எம்இ) உதவும் வகையில் 'க்ரோ யுவர் பிசினஸ் ஹப்' (Grow Your Business Hub) என்பதை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் (எம்எஸ்எம்இ) தங்கள் வணிக இலக்குகளை பூர்த்தி செய்யத் தேவையான தகவல், கருவிகள் மற்றும் ஆதாரங்களைக் கண்டறிய ஒரே இடமாக 'க்ரோ யுவர் பிசினஸ் ஹப்' இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
'Grow Your Business Summit' என்ற நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஒவ்வொரு மாதமும், மில்லியன் கணக்கான சிறு வணிகங்கள், குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ்அப்’பில் 15 மில்லியன் வணிகர்கள் தங்கள் ஆன்லைன் பயணங்களைத் தொடங்கவும், தங்கள் வணிகத்தை வளர்க்கவும் மெட்டா செயலியை பயன்படுத்துகின்றன. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் காரணமாக இந்த வணிகங்கள் உலகளாவிய அளவில் சென்றடைகின்றன, மேலும் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஃபேஸ்புக்கில் இந்திய சிறு வணிகப் பக்கத்தை விரும்புகின்றனர் அல்லது பின்தொடர்கின்றனர்," என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, சிறு வணிகங்களை ஆதரிக்கவும் மற்றும் உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கும் இன்ஸ்டாகிராமில், கடந்த மூன்று மாதங்களில், இந்தியர்கள் 1.2 மில்லியனுக்கும் அதிகமான ஆதரவு பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் இன்ஸ்டாகிராமில் உள்ள அரை மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகர்கள் தொழிலுக்கான வாட்ஸ்அப் எண் அல்லது மின்னஞ்சலை தங்கள் பயோவில் பட்டியலிட்டுள்ளன. மேலும், இது வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்பு கொள்ள ஊக்குவிக்கின்றன.
“இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியின் இயந்திரங்கள் சிறு வணிகங்கள்தான். மெட்டாவின் பங்கு முன்னெப்போதையும் விட சிறு வணிகர்களுக்கு வளர்ச்சி வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் முக்கியமானதாக இருக்கிறது. ஏனெனில் தற்போது அவர்கள் தங்கள் தொழிலுக்கு டிஜிட்டல் முறையைப் பயன்படுத்துகின்றனர். நிர்வகிக்கப்பட்ட மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வணிகத் திறன் திட்டங்கள் என பல திட்டங்களை இந்தியாவின் SMB களின் வளர்ச்சிக்காக நாங்கள் உருவாக்கி வருகிறோம்.”
”சிறு தொழில்களின் வளர்ச்சிப் பயணத்தின் பல்வேறு கட்டங்களில் உள்ள தனித்துவமான தேவைகளை மனதில் கொண்டு சிறு வணிகங்கள் தங்கள் இலக்குகளுக்கு ஏற்ப வளங்களைக் கண்டறிவதற்கான ஒரே இடமான 'Grow Your Business Hub'-ஐ அறிமுகப்படுத்துகிறோம்," என்று ஃபேஸ்புக் இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் இயக்குனர் அர்ச்சனா வோஹ்ரா தெரிவித்துள்ளார்.
தகவல் உதவி: பிடிஐ