ஆரோக்கியமான வீட்டுச் சாப்பாட்டை ஆன்லைனில் அளிக்கும் ‘மோர்மிளகா’
நீங்கள் தொழில்முனைவர் ஆகவேண்டும் என்ற முனைப்பு மட்டும் இருந்தால்போதும். இந்த தொழில்நுட்ப யுகத்தில், ஐடியாக்களுக்கு பஞ்சமே இல்லை, அதேப்போல் எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை. இந்த வார்த்தைகளுக்கு சரியான உதாரணம் சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த விஜயலட்சுமி கணேஷ்.
இதழியலில் முதுகலை பட்டதாரியான இவருக்கு உதித்த யோசனை இவரை கட்டுப்படுத்த முடியாத தொழில்முனைவராக மாற்றியிருக்கிறது. இவர் தொடங்கி நடத்திவரும் "மோர்மிளகா.காம்" (www.Moremilaga.com) இணையதளம் பசியோடு இருப்பவர்களையும், சமையல் செய்பவர்களையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது. இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? வீட்டில் தயாராகும் உணவை சூடு குறையாமல் உங்களை தேடி அனுப்பி வைக்கிறது இவரது இணையதளம்.
உடை, மளிகைப்பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் வீட்டிலிருந்த படியே இணைய வழியில் பெறமுடிகிறது என்றால் உணவும் பெறமுடியும் என்பதை உணர்ந்து இந்த யோசனையை வெற்றிகரமாக செயல்படுத்திவருவதாக சொல்கிறார் விஜயலட்சுமி கணேஷ்.
தன்னுடைய புதிய முயற்சி, அனுபவம் பற்றி தமிழ் யுவர்ஸ்டோரியிடம் பகிர்ந்து கொள்கிறார் விஜி:
“நவநாகரீக யுகத்தில் இணையம் மூலம் உணவு கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பது ஆரோக்கியமான, சுகாதாரமான இடத்தில் தயாராகும் வீட்டு சாப்பாடுதான்” என்கிறார் விஜி.
தனியாக விற்பனைக்கூடம் அமைத்து ஆட்களை நியமித்து சமைப்பது அல்ல எங்களின் நோக்கம், “வீட்டில் சமைக்கும் சாப்பாட்டை மற்றவர்களோடு பகிர்ந்து உண்போம் என்பதே இதன் முக்கிய அம்சம். அதனால் தரம் மற்றும் சுவையில் எந்த சமரசமும் இருக்காது என்பது விஜியின் கூற்று.
விஜயலட்சுமியின் பின்னணி
விஜயலட்சுமி, சென்னையின் திருவல்லிக்கேணியில் பிறந்து வளர்ந்தவர். சென்னையின் மையப்பகுதியில் இருப்பதால் திருவல்லிக்கேணியில் எப்போதும் மக்கள் நடமாட்டமும், தங்கும் விடுதிகளும் ஏராளமாக அமைந்திருக்கும். அதே போன்று அங்கு உணவு விடுதிகளுக்கும் பஞ்சமே இருக்காது. ஆனால் அவற்றின் தரம் பற்றி ஆராய்ந்தால் அவை கேள்விக்குறியானவையே என்கிறார் விஜி.
2000ம் ஆண்டில் மாஸ்கம்யூனிகேன் & ஜர்னலிசத்தில் பட்டமேற்படிப்பை முடித்த விஜி, தொடர்ந்து விளம்பர கம்பெனி ஒன்றில் வாடிக்கையாளர் சேவைகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர் ஒரு நிறுவனத்தின் பிராண்ட் மேலாளராகவும் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
மோர்மிளகா.காம் உருவாகிய கதை
இந்திய பெண்களின் வாழ்வு, திருமணத்திற்கு பிறகு தலைகீழாக மாறும். ஆனால், விஜயலட்சுமி இந்த விதிகளை மாற்றி சாதித்துவருகிறார் என்றே கூறலாம். திருமணத்திற்கு பின் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்த நிலையில் பணியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டதாக விஜி கூறுகிறார். இந்த நான்கு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு "மீண்டும் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டுமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது."
சுயமாக ஏதாவது தொழில் தொடங்கலாம் என்று நினைத்தேன். பெரிய தொழில்முனைவராக வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. ஆரோக்கியம் நிறைந்த சுவையான வீட்டுச்சாப்பாடு எளிதில் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று எண்ணிணேன். அதன் விளைவாகவே மோர்மிளகா.காம் (www.moremilaga.com) இணையதளம் பிறந்தது.
இணையதளம் வாயிலாகவோ அல்லது செல்போன் செயலி மூலமாகவோ மூன்றே கிளிக்குகளில் வீட்டுச்சாப்பாட்டை பெற்றுக்கொள்ளமுடியும் என்பதே இதன் சிறப்பு என்று கூறுகிறார் விஜி.
"என்னுடைய கணவர் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார். முதலில் தொழில்தொடங்கும் என்னுடைய எண்ணத்தை தெரிவித்த போது அவர் என்னை மகிழ்ச்சியோடு ஊக்கப்படுத்தினார். நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதை விட சுயமாக தொழில் தொடங்கி நடத்திவரும்போது உங்களுக்கான பொறுப்புகள் மேலும் கூடும், அதுவே உங்களை உத்வேகப்படுத்தும்," என்கிறார் விஜி.
வயது மூத்தவர்களுக்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும் என்பதால் தன்னுடைய புதிய முயற்சியை உறவினர்களும், நண்பர்களும் பாராட்டியதாகப் பெருமைப்படுகிறார் விஜி.
வீட்டுச்சாப்பாட்டுக்கான தேவையும் வரவேற்பும்
நான் கல்லூரியில் படித்த காலத்திலும் சரி, பணியாற்றிய நேரத்திலும் சரி நண்பர்களிடம் வீட்டு சாப்பாட்டிற்கு இருக்கும் வரவேற்பை பார்த்திருக்கிறேன். வீட்டுச் சமையல் என்றால் பேச்சுலர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர் சுபநிகழ்ச்சிகளுக்குச் சென்று சமைத்து கொடுத்து வந்தார். அதையே அவர் வீட்டிலிருந்து சமைத்து மற்றவர்களுக்கு தினசரி கொடுத்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. அவர் உதவியுடன் சிறிய அளவில் முதலில் தொடங்கி வீட்டிலிருந்தபடியே உணவு விற்பனை செய்து வந்தோம்.
தொடக்கத்தில் தினசரி 10 பேர் மட்டுமே எங்களிடம் வாடிக்கையாளர்களாக இருந்தனர். யாரும் வெளியே வந்து சமைக்கத் தேவையில்லை, வீட்டில் நம் குடும்பத்தினருக்கு சமைக்கும் சாப்பாட்டோடு சற்று அதிகமாக சமைத்து அவற்றை பார்சல் செய்தால் போதும்.
மோர்மிளகா.காம்-ன் டெலிவரி ஆட்கள் வந்து உணவு பொட்டலங்களை எடுத்து சென்று உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு அளித்துவிடுவார்கள். சமைத்து சமைத்து சளைத்து விட்டது என்று எண்ணுபவர்கள், வீட்டில் சாதம் மட்டும் வைத்தால் போதும், பொரியல், குழம்பு, கூட்டு என்ற மற்ற மெனுக்களை எங்களிடம் வாங்கிக்கொள்ளலாம் என்பதும் இதன் மற்றொரு சிறப்பு.
‘தற்போது சமைக்க முடியாத நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் வயதானவர்கள் நிறைய பேர் எங்கள் இணையதளம் மூலம் உணவை வாங்கி உண்டு வருகின்றனர். இதில் ஒரு ஆத்ம திருப்தியும் கிடைப்பதாக,’ மகிழ்கிறார் விஜி.
மோர்மிளகா.காம்-ன் செயல்பாடுகள் அனைத்துமே இணையதளம் மூலம் நடைபெறுவதால் இதற்கு பெரிய இடம் தேவைப்படவில்லை என்று கூறுகிறார். திருவல்லிக்கேணியில் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்துள்ளார் விஜி.
தினசரி ஆர்டர்களை எடுக்க ஒருவர், 3 டெலிவரி ஆட்கள் மற்றும் 3 தொழில்நுட்பப் பொறியாளர்களைக் கொண்ட சிறிய குழுவாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். 2015 ஜுன் மாதத்தில் தன்னுடைய சேமிப்பில் ஒரு சிறு பங்கைக் கொண்டு தொடங்கிய இந்த இணையதளத்திற்கு திருவல்லிக்கேணி மற்றும் மைலாப்பூர் பகுதிகளில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
சவால்களை எதிர்கொள்வது எப்படி?
முதலில் ஆர்டர்களைப் பெறுவது மற்றும் டெலிவரி கொடுப்பதற்கான நேரத்தை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. முறையான ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கான காரணம் என்பதை உணர்ந்து அந்தப் பிரச்சனையை நாங்கள் சரிசெய்தோம். எந்த ஒரு திட்டத்தையும் தொடங்கினால் மட்டுமே எந்த வகையில் பிரச்சனை ஏற்படும் என்பது தெரிய வரும் என்பது விஜியின் கருத்து.
தொடக்கத்தில் “இந்த இணையதளத்தின் நோக்கத்தை அனைவருக்கும் புரிய வைப்பது கடினமாக இருந்தது. ஆனால் இப்போது அந்தக் கவலை இல்லை ஏனெனில் தற்போது வாடிக்கையாளர்களே விற்பனையாளர்களாக மாறிவிட்டதாக,” சிரிக்கிறார் விஜி.
நன்கு படித்த, நல்ல நிலையில் உள்ள இல்லத்தரசிகள் உணவு சமைத்து இது போன்ற விற்பனை மூலம் வருமானம் ஈட்டுவதாகச் சொல்கிறார் விஜி. குடும்ப உறுப்பினர்களுக்கு சமைக்கும் போது கூடுதலாக சமைத்தாலே போதும் என்பதால், பாத்திரங்கள், உணவுப் பண்டங்களின் சுத்தம் பற்றி வாடிக்கையாளர்கள் கவலைப்படத் தேவை இல்லை. இதுவே மற்ற உணவு விடுதிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு தங்கள் இணையதள பக்கத்துக்கு மக்களை ஈர்ப்பதற்கான காரணம் என்கிறார் விஜி.
எதிர்கால இலக்கு
வீட்டை விட்டு வெளியே தங்கி படிப்பவர்கள், வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் வீட்டுச்சாப்பட்டுக்கான சந்தைக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாகக் கருதுகிறார் விஜி. திருவான்மியூர், மைலாப்பூர், திருவல்லிக்கேணி ஆகிய பகுதியில் தினசரி 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்துவரும் இந்த இணையதளத்தை, அடுத்த 6 மாதத்தில் சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்வதே இலக்கு என்கிறார் அவர். அதோடு 100க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகளை இதில் இணைத்துக் கொள்வதும் எதிர்காலத் திட்டத்தில் ஒன்று என்று குறிப்பிடுகிறார் விஜி.
எந்த ஒரு செயலையும் செய்ய அஞ்சிக்கொண்டே இருப்பதைவிட, எதையுமே ஆரம்பித்தால்தான் அதில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் மேம்படும். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான சிந்தனை வெற்றியடையும் என்பதை உணர்ந்திருக்கிறார் விஜி.
விடாமுயற்சியோடு கடினமாக உழைக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்தோடு, அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி வேகமெடுக்கிறார் விஜயலட்சுமி கணேஷ்.