யுபிஎஸ்சி தேர்வில் இந்தியாவில் முதலிடம் பிடித்தது எப்படி - இஷிதா கிஷோர் பகிரும் டிப்ஸ்!
தேசிய அளவில் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையே ஈர்த்துள்ள இஷிதா கிஷோர் தேர்வுக்கு தயாரானது எப்படி? என விரிவாக அறிந்துகொள்வோம்...
கடந்த வாரம் செவ்வாய்கிழமை அன்று வெளியான, 2022ம் ஆண்டிற்கான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) தேர்வில் முதல் இஷிதா கிஷோர், கரிமா லோஹியா, உமா ஹரதி, ஸ்மிருதி மிஸ்ரா ஆகியோர் முதல் 4 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதில், தேசிய அளவில் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையே ஈர்த்துள்ள இஷிதா கிஷோர் தேர்வுக்கு தயாரானது எப்படி? என விரிவாக அறிந்து கொள்வோம்...
யார் இந்த இஷிதா கிஷோர்?
இஷிதா கிஷோரின் குடும்பத்தினர் உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வசித்து வருகின்றனர். இவரது தந்தை முன்னாள் விமானப்படை ராணுவ அதிகாரியாக பணியாற்றியுள்ளார், தாயார் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மூத்த சகோதரர் வழக்கறிஞராக உள்ளார்.
கடைக்குட்டி பெண்ணான இஷிதா கிஷோர், டெல்லியில் உள்ள ஏர் ஃபோர்ஸ் பால் பார்தி பள்ளியில் ஆரம்ப கல்வியை முடித்தார். அதனைத்தொடர்ந்து, 2017ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து லண்டனில் உள்ள சர்வதேச நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங்கில் பணிபுரிந்துள்ளார். கல்வியில் மட்டுமல்ல விளையாட்டிலும் திறமையான இஷிதா, பல்வேறு தடகளப் போட்டிகளிலும் வெற்றி வென்று பரிசுகளை வாங்கி குவித்துள்ளார். 2012ல் சுப்ரோதோ கோப்பையிலும், தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
கார்ப்பரேட் துறையில் பணியாற்றியது இஷிதாவின் திறன்களையும், ஆளுமையையும் வெளிக்கோணர உதவியது. இதனையடுத்து, யுபிஎஸ்சி தேர்விற்கு தயாராக முடிவெடுத்தார்.
சிவில் சர்வீஸ் பயிற்சி:
தேசிய அளவிலான கால்பந்து வீராங்கனையான இஷிதா கிஷோர், பெண்களின் அதிகாரம் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க விரும்புகிறார்.
இதனால் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக முடிவெடுத்த இஷிதா, கடும் முயற்சி மற்றும் பயிற்சியில் இறங்கியுள்ளார். 26 வயதான இஷிதா ஒன்றல்ல, இரண்டல்ல மூன்றாவது முறையாக மேற்கொண்ட முயற்சியில் தான் சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
“நீங்கள் சிவில் சர்வீசஸ் தேர்வெழுத முடிவெடுக்கிறீர்கள் என்றால், எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், அதற்காக மணிக்கணக்கில் உழைக்க வேண்டும், நிறைய படிக்கவும், பயிற்சி பெறவும் வேண்டும்,” என்கிறார்.
தேர்வுக்குத் தயாரானது எப்படி?
இஷிதா கிஷோரின் யுபிஎஸ்சி டாப்பர் ஆன பயணம் மிகவும் கடினமானது. வாரத்திற்கு 40-45 மணிநேரம் தேர்விற்காக தயாராக செலவிட்டுள்ளார். முதல் இரண்டு முறை ப்ரிலிம்ஸில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், தன் மீது வைத்த நம்பிக்கை தான் மூன்றாவது முயற்சியில் முதலிடம் பெறச் செய்தது என்கிறார்.
இஷிதாவின் கருத்துப்படி, அவரது நிறுவன வேலையும் அவரது இலக்கை அடைய உதவியது. கார்ப்பரேட் துறை அவளுக்கு நிறைய வாய்ப்புகளையும் கற்றலையும் கொடுத்தது, அது அவருக்கு யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவதற்கு உதவியதாக நம்புகிறார்.
இஷிதா கிஷோரின் இந்த வெற்றி உழைப்பு, அர்ப்பணிப்பு, கடின முயற்சி ஆகியவற்றிற்கு சிறந்த உதாராணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘பஸ் வசதியே இல்லாத குக்கிராமத்தின் முதல் ஐஏஎஸ்’ - யுபிஎஸ்சி தேர்வில் வென்ற விவசாயி மகள்!