வீட்டிலே கொரோனா சோதனை: ‘Coviself' கிட் பயன்படுத்துவது எப்படி?
ஐசிஎம்ஆர் வெளியிட்ட வழிமுறை!
கொரோனா தொற்றின் அச்சத்தின் காரணமாக வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வீட்டில் இருந்தபடியே, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் புனேவை சேர்ந்த ‘மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம் 'Coviself' என்று பெயரிடப்பட்டுள்ள ரேபிட் ஆன்டிஜென் டெஸ்டிங் கருவியை உருவாக்கியுள்ளது.
இந்த கருவிக்கு நேற்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அனுமதி கொடுத்தது. அதன்படி, இது விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
இந்த ரேபிட் ஆன்டிஜென் டெஸ்டிங் கருவியின் விலை 250 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அந்தக் கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து குறித்து பார்க்கலாம்.
ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
* அறிகுள்ளவர்களின் மூக்கில் இருக்கும் சளி மாதிரியை எடுத்து சுய பரிசோதனை மூலம் தொற்று இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ‘கோவிசெல்ஃப்' கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
* அதன்படி, பரிசோதனை செய்யத் தொடங்குவதற்கு முன் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 'CoviSelfTM' மொபைல் ஆப்பை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோர் மட்டுமில்லாது, ஆப்பிள் பிளே ஸ்டோரிலிருந்தும் கிடைக்கிறது. இதை டவுன்லோட் செய்த பின்னர், பரிசோதனை செய்ய இருப்பவர்கள் தங்களின் பெயர், வயது, முகவரி, அடையாள அட்டை எண் உள்ளிட்ட விபரங்களை அதில் நிரப்பிட வேண்டும்.
* அதன்பின் அந்த 'கோவிசெல்ஃப்' ஆப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி, மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும். பெண்கள் கர்ப்பம் தரித்துள்ளதை தெரிந்து கொள்ள பயன்படுத்தும் ஹோம் டெஸ்ட் கிட் அடிப்படையில் இந்தக் கருவியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கருவியினை பயன்படுத்தி 2 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்துவிட முடியும். பரிசோதனை செய்த 15 நிமிடங்களில் பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் என பரிசோதனை முடிவு மொபைல் ஆப்பிலேயே காட்டும்.
* தொலைபேசியிலிருந்து பரிசோதனை முடிவுகள், தரவுகள் ஐ.சி.எம்.ஆர் கொரோனா சோதனை போர்ட்டலுடன் இணைக்கப்பட்ட ‘சர்வரில்’ சேமிக்கப்படும். அங்கு எல்லா தரவும் இறுதியில் சேமிக்கப்படும். இதன்மூலம், நோயாளியின் இரகசியத்தன்மை முழுமையாக பராமரிக்கப்படும்.
* இந்த கருவியின் மூலம் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அது உறுதியாக பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என்றே கருதப்படும். இதனால் மீண்டும் பரிசோதனை செய்யத் தேவையில்லை.
*அதேநேரம் கொரோனா அறிகுறிகள் இருந்தும் இந்த கருவி மூலம் சோதனை செய்து அதில் நெகட்டிவ் என வந்தால், அறிகுறியுள்ளவர்கள் ஆர்டிபிசிஆர் சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
இந்த கருவியை எல்லோரும் கண்மூடித்தனமாக பயன்படுத்தக்கூடாது. கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டோருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மட்டும் இக்கருவியை பயன்படுத்த வேண்டும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.