ஐஏஎஸ் பயிற்சி அகாடமி தொடங்கி தொழில் முனைவர் ஆகி இருக்கும் சந்தோஷ் பாபு!
Capstone IAS Academy-யை தொடங்கி இருக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, தனது அரசியல் வாழ்க்கை மற்றும் தொழில் முயற்சியான ஐஏஎஸ் அகாடமி தொடக்கம் குறித்து யுவர்ஸ்டோரியிடம் பகிர்ந்து கொண்டார்.
தமிழக மக்கள் நன்கறிந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, ஒரு அதிகாரியாக, அரசியல்வாதியாக இருந்துவிட்டு தற்போது ஒரு முழுநேர தொழில்முனைவராக ஆகியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளில் முக்கியமானவராக இருந்த 53 வயதான சந்தோஷ் பாபு, ஒருவேளை பதவி விலகாமல் இருந்திருந்தால், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியை பெறும் வாய்ப்புகள் உள்ளவராக இருந்திருப்பார் என அவருடைய சகாக்கள் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
ஐஏஎஸ் பதவிக்காலம் இன்னும் சில ஆண்டுகல் இருந்தபோதே முக்கியப் பொறுப்பை விட்டு விலகி மக்கள் நீதி மையத்தில் சேர்ந்தார். தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக தோல்வி அடைந்தார், பின்னர் தனிப்பட்ட காரணங்களால் கட்சியிலிருந்து விலகி தற்போது தனது சொந்த ஐஏஎஸ் பயிற்சி அகாடமியை தொடங்கியுள்ளார் சந்தோஷ் பாபு.
Capstone IAS Academy-யை தொடங்கி இருக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, தனது அரசியல் வாழ்க்கை மற்றும் தொழில் முயற்சியான ஐஏஎஸ் அகாடமி தொடக்கம் குறித்து யுவர்ஸ்டோரியிடம் பகிர்ந்து கொண்டார்.
தொழில்முனைவு சம்பந்தமான உரையாடல் என்றாலும் அரசியல் குறித்து கேட்காமல் இருக்க முடியாதே? அரசியல் ஆர்வம் ஏன்?
தமிழ்நாடு ஒரு வளர்ந்த மாநிலம் என்பதில் சந்தேகம் இல்லை. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பெரிய வளர்ச்சியை நாம் அடைந்திருக்கிறோம். ஆனால் இன்னும் பெரிய வளர்ச்சிக்கு நாம் தகுதியானவர்கள். ஒரு அரசு அதிகாரியாக இருப்பதைவிட அரசியல்வாதியாக இருக்கும்பட்சத்தில் ஆளுமையில் (governance) பெரிய மாற்றம் ஏற்படுத்த முடியும் என நம்பினேன். அதனால்தான் இன்னும் சில ஆண்டுகள் சர்வீஸ் இருந்தாலும் வேலையை விட்டேன். அரசியலில் இணைந்தேன்.
எனக்கு மூன்று முறை மத்திய அரசுப் பணியில் இணைவதற்கான வாய்ப்பு இருந்தது. சமீபமாக 2019-ம் ஆண்டு ஆகஸ்டில் பிரதமர் அலுவலகததில் இருந்து வாய்ப்பு வந்தது. தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருக்கிறீர்கள். அந்த வேலை இந்திய அளவில் மிகப்பெரிதாக செய்யலாம் என அழைப்பு வந்தது.
ஆனால் தமிழ்நாட்டின் மீதும் தமிழக வளர்ச்சியின் மீதும் இருக்கும் பற்று காரணமாக அந்த பணிக்குச் செல்லவில்லை. Governance-ல் பெரிய மாற்றம் வர நினைத்தேன். ஆனால் தற்போது முடியவில்லை.
நீங்கள் மருத்துவம் படித்தவர். ஆனால் எல்காட் தலைவராக இருந்திருப்பதால் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்-அப் தொடங்குவீர்கள் என எதிர்பார்த்தோம். எப்படி ஐஏஎஸ் கோச்சிங் மையம்?
கிட்டத்தட்ட இதுவும் டெக்னாலஜி சார்ந்ததுதான். தொழில்நுட்பம் மூலமே Capstone IAS Academy-யை உருவாக்கி இருக்கிறோம். நேரடி வகுப்புகள் இதில் கிடையாது. ஆன்லைனில் மட்டுமே வகுப்பு என்பதால் மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். தவிர லோகேஷன் ஒரு சிக்கலாக மாறக் கூடாது. சிறு நகரங்களில் இருப்பவர்கள் கூட எங்களிடத்தில் படிக்க முடியும், ஐஏஎஸ் பயிற்சி எடுத்து வெற்றி அடையமுடியும்.
இதைவிட முக்கியம் இந்த அகாடமியில் நான் மட்டுமல்லாமல் சில ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் முடித்தவர்கள் ஆசிரியர்களாக இருக்கின்றனர். நாங்கள் ஐஏஎஸ் படித்து முடித்து முக்கியப் பொறுப்புகளில் இருந்திருப்பதால் தியரியாக மட்டுமில்லாமல் பிராக்டிக்கலாகவும் எப்படி இதற்குத் தயாராகவேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க முடியும்.
கோவிட் சிக்கல் முடிந்தபிறகாவது நேரடி வகுப்பு இருக்குமா?
இல்லை. ஆன்லைன் என்பதுதான் எங்களின் மாடல் என்பதை முடிவு செய்துவிட்டோம். நேரடி வகுப்பில் அதிகச் செலவுகள் இருக்கும். இவை தேவையில்லாமல் மாணவர்களுக்குக் கூடுதல் சுமையை அதிகரிக்கும். மேலும், ஆன்லைன் வகுப்பு என்றாலும் மாணவர்களுக்குத் தேவையான தகுந்த ஆலோசனைகள் எங்கள் அகாடமியில் கிடைக்கும்.
இந்த அகடாமியின் நோக்கம்?
ஓர் ஆண்டுக்கு சுமார் 1000 நபர்கள் மட்டுமே யூ.பி.எஸ்.இ. மூலம் தேர்வாகின்றனர். நம்மால் ஆண்டுக்கு 100 மாணவர்களை வெற்றி அடையச் செய்தால், அதுவே எங்கள் அகாடமியின் வெற்றி என கருதுகிறேன்.
ஐஏஎஸ் தவிர வேறு என்ன வாய்ப்புகள் உங்களுக்கு இருந்தன?
நான் சில நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருக்கிறேன். அதே சமயம் சில நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளும் தேடிவந்தன. அவை பெரிய ஆஃபர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தற்போது ஐஏஎஸ் அகாடமியில் கவனம் செலுத்த இருக்கிறேன். கிராமப்புறம் மற்றும் அடுத்தகட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க விரும்புகிறேன்.
“ஐஏஎஸ் ஆகத் துடிப்பவர்களை அதிகாரிகளாக்குவதே என் கனவு. நகரத்துக்கும், கிராமப்புறங்களுக்கும் இடையே உள்ள பிரிவை இணைக்க புத்தாக்க எண்ணமுடைய அதிகாரிகள் தேவை என தீவிரமாக நம்புகிறேன்.”
கிராமப்புற மாணவர்கள் என்று கூறுகிறீர்கள். ஆனால் உங்களுடைய கட்டணம் ரூ.1.5 லட்சம் என்னும் அளவில் உள்ளதே?
நீங்கள் மட்டுமல்லாமல் என்னுடைய நலம்விரும்பிகள் சிலரும் கட்டணம் குறித்து கூறினார்கள். அதனால் கட்டணத்தை லட்ச ரூபாய்க்கு கீழே குறைக்க முடிவெடுத்திருக்கிறோம். கட்டணத்துக்கு முக்கியக் காரணம் டெக்னாலஜி மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
மீண்டும் அரசியலில் நுழைய திட்டம் இருக்கிறதா?
முதல் கேள்விக்கான பதிலுடன் இணைத்தே பதில் சொல்கிறேன். Governance-ல் மாற்றத்தை கொண்டுவரும் ஆசை எனக்கு இன்னும் இருக்கிறது என்று கூறினார்.
சுயமுதலீட்டில் தொழில்முனைவராக களம் இறங்கியிருக்கும் சந்தோஷ் பாபுவின் கனவு மெய்ப்படவும், அவர் தொடங்கியுள்ள அகாடமி தேசிய அளவில் வெற்றியடையவும் வாழ்த்துக்கள்.