இந்தியாவின் முன்னணி புதுமையாக்க கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு!
ஐஐடி சென்னை, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவின் முன்னணி புதுமையாக கல்வி நிறுவனமாக இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸ், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவின் முன்னணி புதுமையாக்க கல்வி நிறுவனமாக இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் புதுமையாக்க பிரிவு சார்பாக கடந்த ஆண்டு இந்த பட்டியல் அறிமுகம் செய்யப்பட்டது.
புதுமையாக்க சாதனைகள் அடிப்படையில் கல்வி நிறுவனங்களை பட்டியலிடும், ’அடல் ராங்கிங் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் ஆன் இன்னவேஷன் அச்சிவ்மண்ட்ஸ்’ (ARIIA) பட்டியலில் இந்த ஆண்டு 674 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. கடந்த ஆண்டு 496 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்த பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களை துணை ஜனாதிபதி, வெங்கய்யா நாயுடு இன்று (18 ஆகஸ்ட்) கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் அறிவித்தார்.
நாம் தன்னிரைவு பெற்றிருக்க வேண்டும். தற்சார்பு, புதுமையாக்கம் மற்றும் வளர்ச்சி சவால்களுக்கு செயல்படுத்தக்கூடிய தீர்வுகளைக் கோருகிறது. சோதனை முயற்சிகளுக்கு உகந்த சூழலை உருவாக்க, இந்தியாவின் கல்வி அமைப்பு, இந்திய புதுமையாக்கம் மற்றும் ஸ்டார்ட் சூழலுக்கான உந்து சக்தியாக செயல்பட வேண்டும் என்று நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்யா நாயுடு கூறினார்.
“புதுமையாக்கம் என்பது கல்வி நிறுவனங்களின் இதயத்துடிப்பாக மாற வேண்டும். மேன்மையை அடைவதற்கான வேட்கை இயல்பாக இருக்க வேண்டும். இந்த பட்டியலில் முன்னிலை இடத்தை பிடித்த அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
ARIIA திட்டம், கல்வி நிறுவனங்களை புதுமையாக்கம் சார்ந்த காரணிகள் அடிப்படையில் பட்டியலிடுகிறது. ஆய்வு, தொழில்முனைவு மற்றும் புதுமையாக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் களமாக இந்திய கல்வி நிறுவனங்கள் உருவாவதை இது இலக்காக கொண்டுள்ளது.
“புதுமையாக்கம் மற்றும் ARIIA திட்டம் தற்சார்புள்ள புதிய இந்தியாவுக்கான அடித்தளமாக அமையும். புதுமையாக முயற்சிகளில் ஈடுபடும் மற்றும் தொழில்துறை– புதுமையாக்கம் இடையிலான இடைவெளியை குறைக்கும் வகையில் செயல்படும் கல்வி நிறுவனங்களை இந்த பட்டியல் அங்கீகரிக்கிறது,” என்று கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்தார்.
மாணவர்களை வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில்முனைவோராக ஊக்குவிக்கும் சூழல் காரணமாக சென்னை ஐஐடி இந்த பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. சென்னை ஐஐடி ஆய்வு பூங்காவில் உள்ள, இன்குபேஷன் மையம், ஆழ் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப்'களை ஊக்குவிக்கும் முன்னணி மையமாக விளங்குகிறது.
மாணவர்கள் பட்டம் பெறுவதற்கு முன்பாகவே, இந்த அமைப்பு அவர்களுக்கான பல்வேறு ஸ்டார்ட் அப் மேடைகளை அளிக்கிறது. நிர்மான் இன்குபேட்டர் மையம், புதுமையாக்கத்திற்கான மையம் (CFI), ஆகியவை இதில் அடங்கும்.
“உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் ஆற்றல் மிக்க தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ள மையங்கள், ஆய்வு பூங்கா ஆகியவற்றை கொண்டுள்ள சென்னை ஐஐடி உலகத்தரத்திலான புதுமையாக்கச் சூழலுக்காக அறியப்படுகிறது,” என்று சென்னை ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்தார்.
இந்த ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக புதுமையாக்கத்திற்கான அங்கீகாரத்தை பெறுவது பெருமைக்குறியது என்றும் அவர் தெரிவித்தார்.