2020ல் மீண்டும் நிலவில் விண்கலத்தை தரையிறக்க இஸ்ரோ திட்டம்!
சந்திராயன் - 2 திட்டத்தில் ஏற்பட்ட லேசான பின்னடைவை மீறி, உத்தேசிக்கப்பட்டுள்ள சந்திராயன் 3 திட்டத்திற்கான அறிக்கையை அளிக்க இஸ்ரோ உயர்மட்டக் குழு அமைத்துள்ளது.
அடுத்த ஆண்டு இறுதியில், இந்தியா மீண்டும் ஒரு முறை நிலவில் விண்கலத்தை தரையிறக்குவதற்கான முயற்சியை மேற்கொள்ள இருப்பதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சந்திராயன்- 3 வாய்ப்பு தொடர்பாக அறிக்கை தயாரிக்குமாறு திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சரபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் எஸ்.சோம்நாத் தலைமையிலான உயர்மட்ட குழு, இஸ்ரோவால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு தான், அனைத்து ஏவு வாகனங்கள் திட்டத்திற்கும் பொறுப்பேற்கிறது.
"இந்த குழுவின் அறிக்கை எதிர்நோக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இத்திட்டத்தை உருவாக்குவதற்கான நெறிமுறை குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
”நவம்பரில் நல்ல வாய்ப்பு உள்ளது. ரோவர், லேண்டர் மற்றும் தரையிறங்கும் செயல்பாடுகளுக்கு இந்த முறை அதிக கவனம் அளிக்கப்படும். சந்திராயன் 2 திட்ட குறைபாடுகள் திருத்திக்கொள்ளப்படும்,” என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 7ம் தேதி சந்திராயனின் விக்ரம் விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க முயற்சி செய்தும், லேண்டருடனான தொடர்பை இழந்தது.
இஸ்ரோவின் லிக்விட் பிரபல்யூஷன் சிஸ்டம்ஸ் மையத்தின் இயக்குனரான வி.நாராயணன், தலைமையில், கல்வியாளர்கள் மற்றும் இஸ்ரோ வல்லுனர்கள் அடங்கிய தேசிய அளவிலான குழு, இதற்கான காரணங்களை ஆய்வு செய்துள்ளது
என்ன தவறு நடந்துள்ளது என்பதை இந்தக்குழு கண்டறிந்துள்ளது.
இந்த குழு மிகப்பெரிய அறிக்கையை தயார் செய்து, இஸ்ரோவிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது. பிரதமர் அலுவலக ஒப்புதலுக்கு பிறகு இது பொது வெளியில் வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தரையிறங்கும் போது, நிலவின் மேற்பரப்பில் இருந்து 2.1 கி.மீ தொலைவில், விக்ரம் விண்கலம் லேண்டருடன் தொடர்பை இழந்தததால், இந்திய முயற்சிக்கு பின்னடைவு உண்டானது.
சந்திராயன் 2 திட்டம், ரூ.978 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. (செயற்கைகோள் ரூ.603 கோடி, ஜிஎஸ்.எல்.வி எம்கே III செலவு ரூ.375 கோடி). இந்திய ராக்கெட், ஜூலை 22ல் சந்திராயன் 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்