House of Khaddar: கதர் ஆடை பிராண்ட் தொடங்கி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்த கமல்!
கதருக்காக புது பிராண்ட் ஒன்றை துவங்கினார் கமல்ஹாசன்!
தமிழ்நாட்டின் முக்கியமாக நிகழ்ச்சிகளுள் ஒன்றாக உருவெடுத்துள்ள பிக்பாஸ் சீசன் 4 அண்மையில் நிறைவடைந்தது. நடிகர் ஆரி டைட்டில் வின்னர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தன்னுடைய சொந்த ஆடை நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார்.
கதருக்காக புது பிராண்ட் ஒன்றைத் துவங்கி இருப்பதாகக் கூறி அதன் பெயரையும், லோகோவையும் அறிமுகப்படுத்தினார். KH - House of Khaddar என கமல் தன் பிராண்ட் பெயரை அறிவித்தார். தேர்தல் பிரசாரத்துக்காக காஞ்சிபுரம் சென்றபோது இந்த ஐடியா தோன்றியதாகத் தெரிவித்தார்.
கொரோனா ஊரடங்குக்குப் பிறகு கதர் ஆடை விற்பனையாளர்கள், நெசவுத் தொழிலாளர்கள் படும் கஷ்டங்களைக் கண்டு காதி பிராண்ட் நிறுவனம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டதாக கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
அதோடு அவர் சில வாரங்களாக கதரில் உருவான டிசைனர் ஆடைகளை அணிந்துவந்து பார்வையாளர்களையும் கவர்ந்தார். அவ்வப்போது கதர் ஆடையின் பெருமையை பங்கேற்பாளர்களுக்கும் எடுத்துரைத்தார்.
சர்வதேச டிசைனர்களை உள்ளடக்கிய இந்த நிறுவனம் கைத்தறி ஆடைகளை ஊக்குவிக்கிறது. இந்திய பேஷன் காஸ்டியூம் டிசைனர் அமிர்தா ராம் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளாத கமல் தெரிவித்தார்.
பிக்பாஸ் சீசன் 4ன் இறுதி நாளன்று தனது பிராண்டை அறிமுகப்படுத்திய கமல், கதர் ஆடையின் நன்மைகளை பட்டியலிட்டார்.
“குளிர்காலத்தில் கதர் துணிகளை உடுத்துபவர்களுக்கு அது இதமான சூட்டை கொடுக்கும் தன்மை கொண்டது என்றார். அதேபோல, கோடைகாலத்தில் கதர் ஆடை உடுத்துபவர் குளிர்ச்சியாக உணரும் தன்மையும் அதற்கு உண்டு. கைத்தறி மூலமாகத்தான் KH - House of Khaddar பிராண்டில் அனைத்து ஆடைகளும் தயாரிக்கப்படும்,” என்று கமல் உறுதியளித்தார்.
KH HOUSE OF KHADDAR என்ற பிராண்டின் கீழ் மற்றொரு துணைப் பிரிவையும் அறிமுகம் செய்தார் கமல்.
WE DYE FOR YOU என்பதே அதன் பெயர். இது துணிகளை சாயமிடும் பிரிவாகும். அவர்கள் தயாரிக்கும் ஆடைகளுக்கு இந்த பிரிவின் மூலம் வண்ணம் சேர்க்கப்படுகிறது. இந்த சாயங்கள் முற்றிலும் சுற்றுச்சூழல் உகந்தவையாகவும் சுற்றுச்சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாதவகையிலும் இருக்கும் என்று கமல் தெரிவித்தார். மேலும் இந்த முன்னெடுப்பு பேஷன் உலகில் ஒரு டிரெண்ட்செட்டராக இருக்கும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
”வேலை மற்றும் வாழ்வாதாரம் இல்லாத நெசவாளர்கள் ஆயிரக்கணக்கானவர்களை நான் பார்வையிட்டேன். இந்த பிராண்ட் அவர்களுக்கு வேலை வழங்குவதற்கான ஒரு வழியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நெசவாளர்களைச் சந்தித்த பிறகு ஆடை அணிவதற்கான எனது அணுகுமுறை மாறிவிட்டது. என் தந்தையின் பழக்கம் (காதி மட்டுமே அணிவது) எனக்கும் வரும் என்று நினைக்கிறேன். அது உங்களுக்கும் வர வேண்டும்.”
நீங்கள் எந்த துணியை அணிவது என்பது உங்கள் விருப்பம். காதியும் உங்கள் விருப்பங்களில் இருக்க வேண்டும். நான் நெசவாளர்களின் வீட்டிற்குச் சென்றேன். இப்பாரம்பரியக் கலை இறந்து போக விரும்பவில்லை என்ற காரணத்திற்காக அவர்கள் இன்னும் இதைச் செய்கிறார்கள். இந்த கலைஞர்கள் இன்னும் தங்கள் கலையைத் தொடர்கிறார்கள், ஆனால் அது அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கவில்லை. அவர்களால் இதை நீண்ட காலம் தொடர முடியாது.
”நான் அவர்களிடம் பேசியபோது என்னால் உதவ முடியவில்லை. அதனால் நான் ஒரு பேஷன் லைன் தொடங்க முடிவு செய்துள்ளேன். அடுத்தத் தலைமுறை உதவ முன்வர வேண்டும். இது ஒரு அழகான கலை, அது மங்கக்கூடாது," எனக் கூறியுள்ளார் கமல்.